fontsize: 60% 70% 80% 90%

குறைந்த சம்பளம் பெறுவோரை மேம்படுத்த உதவித் திட்டங்கள்: அரசு ஆராய்கிறது

குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தங்கள் திறன்களை மேம்படுத்தி நல்ல சம்பளம் தரும் வேலைகளில் சேர்வதைச் சுலபமாக்கும் உதவித் திட்டங்களை எதிர்பார்க்கலாம்.
அதோடு, வேலைநலன் துணை வருமானத் திட்டத்திலிருந்து (WIS) மேலும் பல அனுகூலங்களையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். இந்த மூன்றாண்டுகால துணை வருமானத் திட்டத்தின் வழங்கீடுகள், தகுதி விதிகள் ஆகியவற்றை அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருகிறது.
பொருளியல் உத்திகள் குழுவின் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்தில் நீ சூன் சென்ட்ரலுக்கு நேற்று வருகையளித்த மனிதவள அமைச்சர் கான் கிம் யோங், பரிந்துரைகள் பற்றி மக்களுடன் கலந்துரையாடினார்.
உற்பத்தித்திறனை உயர்த்துதல், வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் ஆகியவை பொருளியல் உத்திகள் குழுவின் பரிந்துரைகளில் அடங்கும்.
இம்மாதம் நடைபெறவிருக்கும் வரவுசெலவுத் திட்ட அறிவிப்பின்போது இவை பற்றி மேலும் விவரமளிக்கப் போவதாக திரு கான் கூறினார்.
உற்பத்தித்திறனை உயர்த்துவதில் பொருளியல் உத்திகள் குழு கவனம் செலுத்தினாலும், குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதிலும் குழு கவனம் செலுத்தியதாக அக்குழுவில் இடம்பெற்ற திரு கான் கூறினார்.
குறைந்த வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள் பலருக்கும் பயிற்சிக்குச் செல்ல ஆர்வம் இல்லாத நிலையில், அவர்களை அரசாங்கம் எவ்வாறு ஊக்குவிக்கப்போகிறது என குடியிருப்பா ளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
புதிய திட்டங்கள் குறித்து திரு கான் விவரிக்கவில்லை.
ஆனால், வயது மூத்த, குறைந்த வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள் பயிற்சி பெறுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ள தடைகள் களையப்படும் என அவர் கோடி காட்டினார்.
வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின் செயலாற்றலை அரசாங்கம் மேம்படுத்த விரும்புவதாகவும் அமைச்சர் விவரித்தார்.
இத்திட்டத்திற்குத் தகுதிபெறும் கால கட்டத்தைக் குறைத்து, உதவித் தொகை வழங்கப்படும் கால இடைவெளியைக் குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, உதவித்தொகை வழங்கீட்டுக்கு முந்திய ஆறு மாதங்களில் மூன்று மாதகாலம் ஒருவர் வேலை செய்திருந்தால் இத்திட்டத் திற்குத் தகுதி பெறுவார். இந்தத் தகுதிக்காலம் இரண்டு அல்லது ஒரு மாதத்திற்குக் குறைக்கப்படவேண்டுமா?
“இன்னும் அதிகமானோருக்கு வெகுமதியளிக்க முடியுமா, என்பதை ஆராய விரும்புகிறோம். அதே வேளையில் வழக்கமான முறையில் தொடர்ந்து வேலை செய்வதை ஊக்குவிக்கும் இலக்கையும் விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை,” என்றார் திரு கான்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838