fontsize: 60% 70% 80% 90%

விளையாட்டே பயங்கரவாதத்துக்கு அடிபணியாதே

அரசியல்வாதிகள், புகழ்பெற்ற கட்டடங்கள், சொத்துகள், பொதுமக்கள் ஆகியோரைக் குறி வைத்து தாக்கிக் கொண்டிருந்த பயங்கரவாதிகள், இப்போது விளையாட்டாளர்களின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி உள்ளனர்.
ஆக அண்மையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆப்பிரிக்க நாடுகள் கிண்ண காற்பந்துப் போட்டிகள் நடைபெறும் அங்கோலாவின் கபிண்டா எனும் இடத்துக்குச் செல்லும் வழியில் டோகோ காற்பந்துக் குழுவின் மீது அங்கோலாவின் தீவிரவாதக் குழு ஒன்று துப்பாக்கித் தாக்குதல் நடத்தியது.
அச்சம்பவம் துடிப்புடன் காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்க சென்றுகொண்டிருந்த டோகோ காற்பந்துக் குழுவை ஆட்டங்காண வைத்து விட்டது. தாக்குதலில் குழுவின் இரு உறுப்பினர்களும் அங்கோலாவின் பேருந்து ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் விளையாட வந்த இலங்கை கிரிக்கெட் அணியினரைக் குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடத்தினர். அதில் இலங்கை கிரிக்கெட் அணியின் எட்டு வீரர்கள் காயமடைந்தனர்.
2008ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் பயங்கரவாத மிரட்டல்கள் இருந்தன. ஆனால் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.
விளையாட்டு உலகில் போட்டி என்பது நட்பு முறையிலானது. பீதி, பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளை ஒதுக்கி விட்டு போட்டியாளர்கள் களத்தில் இறங்குகிறார்கள்.
எண்ணெயும் நீருமாய் இருக்க வேண்டிய அரசியலையும் விளையாட்டையும் ஒன்றுபடுத்த பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
தங்களின் பால் அரசியல் வாதிகளின் கவனத்தை ஈர்க்க பயங்கரவாதிகள் இப்படி செயல்பட தொடங்கிவிட்டனர். இதனால் பெரிய அளவில், அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
உலக மக்களின் கவனத்தை சுலபமாக ஈர்ப்பதற்காக அதிர்ச்சி ஊட்டும் உத்திகளை பயன்படுத்து கிறார்கள் பயங்கரவாதிகள்.
எங்கேயும் எந்நேரமும் நடக்கக் கூடியவை பயங்கரவாத தாக்குதல்கள். இதற்கு முழுமையான தீர்வு என்பது எதுவும் இல்லை என்றாலும், பயங்கரவாதிகளின் கோரிக்கைகளுக்கு அடிப்பணியக் கூடாது. அப்படிச் செய்தால் மேலும் பல பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள பயங்கரவாதிகளுக்குத் துணிவு வந்துவிடும்.
லண்டனில் 2012ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான பாதுகாப்புக்கு மட்டும் 600 மில்லியன் பவுன்ஸ் செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகள் கிண்ண காற்பந்துப் போட்டிகளில் தொடர்ந்து தங்கள் நாட்டுக் காற்பந்துக் குழுவினர் விளையாடினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்ற அச்சத்தால் டோகோ பிரதமர் தம் நாட்டுக் குழுவை நாடு திரும்ப உத்திரவிட்டார்.
ஆனால், டோகோ ஆட்டக்காரர் களுக்கோ தொடர்ந்து போட்டி களில் பங்கேற்க விருப்பம். போட்டிகளில் நீடிப்பது தாக்குதலில் கொல்லப்பட்ட தங்கள் குழு உறுப்பினர்களுக்குத் தாங்கள் செலுத்தும் அஞ்சலி என்று டோகோ ஆட்டக்காரர்கள் எவ்வளவோ கெஞ்சியும் அவர்களின் அரசு அதை ஏற்கவில்லை.
பயங்கரவாதத்துக்குப் பயந்து விளையாட்டாளர்கள் பின் வாங்கக் கூடாது. போட்டிகளிலிருந்து டோகோ பின் வாங்கியிருப்பது அங்கோலா பயங்கரவாதிகளுக்கு வெற்றியாக அமைந்துவிட்டது.
அதே வேளையில், டோகோ குழு துணிந்து ஆப்பிரிக்க நாடுகள் காற்பந்துப் போட்டியில் தொடர்ந்து விளையாடியிருந்தால், அதுவே தங்களைத் தாக்கிய பயங்கரவாதி களின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததுபோல் இருந்திருக்கும்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838