எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்பார்கள்.
ஒருவர் வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடைபோட மொழி அறிவு, கணித அறிவு ஆகிய இரு கண்களுமே தேவை.
கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்ட 1999 முதல்
2008ம் ஆண்டு வரையிலான இனவாரியான மாணவர் தேர்ச்சி அறிக்கையின்படி இந்திய மாணவர்கள் ஆங்கிலம், தாய் மொழிகளில் சிறந்த தேர்ச்சியைப் பெற்று வருகின்றனர்.
தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு, ‘ஓ’ நிலை, ‘ஏ’ நிலைத் தேர்வுகளில் ஆங்கில மொழி மற்றும் பொது அறிவுத் தேர்வில் தேசிய நிலையின் மொத்தத் தேர்ச்சியின் அளவைவிட அதிக தேர்ச்சியை இந்தியர்கள் பெற்றுள்ளனர்.
தாய் மொழியில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டுக்கும் அதிக தேர்ச்சியைப் பெறுகின்றனர்.
ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் கணிதப் பாடத்தில் இந்திய மாணவர்கள் தேர்ச்சி தேசிய நிலைத் தேர்ச்சியை விடக் குறைவாகவே உள்ளது.
ஆங்கிலத்திலும் தாய்மொழியிலும் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களில் பின்தங்கி இருப்பதற்கான காரணம் கவனிக்கப்பட வேண்டியது, உடனடியாக ஆராயப்பட வேண்டியது.
இந்திய மாணவர்கள் பின்தங்கியிருக்கும் பாடங்களில் முன்னேற உதவும் வகையில் சிண்டா இந்த ஆண்டில் பல உத்திகளை மேற்கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளது.
எனினும் துணைப்பாட வகுப்புகளை அதிகரிப்பதாலும் பாட நேரத்தை நீட்டிப்பதாலும் மட்டும் கல்வித் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாது என்று சிண்டாவின் தலைவரும் வெளியுறவு மூத்த துணை அமைச்சருமான டாக்டர் பாலாஜி சதாசிவன் கூறியுள்ளார்.
சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்ந்து அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் பிரச்சினைகள் நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே கல்வியில் பின்தங்கி இருப்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
வாசிப்பும் பேச்சும் இருந்தால் மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்று விடலாம்.
ஆனால் கணிதம், அறிவியல் பாடங்களுக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் தேவை. நிறைய பயிற்சி வேண்டும். பயிற்சி செய்ய அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்.
சில குடும்பங்களில், குறிப்பாக பிரச்சினை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிடம் ஆக்ககரமான சிந்தனை வளர்க்கப்படுவதில்லை.
அடுத்து அவர்களுக்குப் படிப்பதற்கும் பயிற்சி செய்வதற்கும் தகுந்த சூழலும் நேரமும் கிடைப்பதில்லை.
கடுமையான உழைப்பும் போதிய அர்ப்பணிப்பும் இல்லாமல் கல்வியில் முக்கியமாக கணிதம், அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெறுவது சிரமம்.
மேலும் கணக்குப் பாடத்தில் ஒரு முறை தோல்வி அடைந்து விட்டாலே கணக்கே எனக்குப் பிடிக்காது எனப் பல மாணவர்கள் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். சிரமப்பட்டுப் படிக்கும் இந்திய மாணவர்களைக் குறைவாகக் காண முடிகிறது.
இனி வரும் காலங்களில் மொழிப் பாடங்களுக்கும் சிந்திக்கும் ஆற்றல் அதிகம் தேவைப்படும். எந்த விஷயத்திலும் முயற்சி இல்லாமல் வெற்றி கிடைக்காது.
இந்திய மாணவர்கள் கல்வியில் உன்னதம் அடைய சமூகமும் பெற்றோரும் சேர்ந்து பாட வேண்டும்.
பூஜ்ஜியத்தைக் கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள். உலக கணித மேதைகளான சகுந்தலா தேவியும், நோபெல் பரிசு பெற்ற டி.ராமனுஜமும் இந்தியர்கள்.
இந்தியருக்குக் கணக்கு வரும்.
வாழ்க்கையில் சரியாகக் கணக்குப் போட்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கணக்கிலும் எல்லாப் பாடங் களிலும் புலியாகப் பாயலாம்.