தொழில் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சிகள் உலகைத் தலைகீழாக மாற்றிவிட்டன. அதனால் மனித இனம் அதிக ஆயுள், வசதியான வாழ்க்கை உட்பட கோடானுகோடி நன்மை அடைந்துள்ளது.
ஆனால் இந்தப் புரட்சிகள் வேண்டாத விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
அவற்றில் முக்கியமானது பூமியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலம் மாசு பட்டு வருவது.
காற்று மண்டலத்தில் கரிமக் கழிவுகள் அதிகரித்து வருவதால் பூமியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.
வெப்பநிலை அதிகரித்ததால் வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள பனி உருகத் தொடங்கியுள்ளது.
இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது.
கடல் நீர் அளவு இப்படியே கூடிக்கொண்டே போனால் அந்தமான் தீவுகள், மாலைத் தீவுகள், இந்தோனீசியத் தீவுகள் போன்ற பல தீவுகளும் கடலோரத்தில் உள்ள உலகின் பல முக்கிய நகரங்களும் கடலுக்குள் மூழ்கி விடும்.
அத்துடன் வாழ்வியல் பாதிக்கப்பட்டு, பல உயிரினங்களும் இயற்கை வளங்களும் அழிந்து போகும்.
இந்த பெரும் பிரச்சினை குறித்து மானிட சமூகம் காலதாமதாக உணர்ந்து கொண்டாலும், அதை உடனடியாகத் தடுத்து நிறுத்த இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது திட்டவட்டமாக உறுதி கொண்டுள்ளது.
இது குறித்துப் பேச ஏறக்குறைய 100 உலகத் தலைவர்கள், 15,000 பேராளர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கூடுகின்றனர்.
10 நாட்கள் நடைபெறவுள்ள மிக முக்கியமான இந்த உச்சநிலை மாநாட்டில் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப் படுத்துவதில் உலக நாடுகள் உடன்பாடு காண்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பருவநிலை மாற்றம் பற்றிய ஐநா குழுத் தலைவர் ராஜேந்திர பச்சவுரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“பருவநிலை குறித்த பேச்சு வார்த்தைகளில் கடந்த 17 ஆண்டுகளில் இத்தனை நாடுகள், இத்தனை உறுதி மொழிகளைக் கொடுத்ததில்லை,” என்று தெரிவித்துள்ளார் ஐநாவின் தலைமை பருவநிலை பேச்சு வார்த்தை நடுவரான திரு யோவோ டி போர்.
வரும் 2020க்குள் சீனா 45%, அமெரிக்கா 17%, ஐரோப்பிய ஒன்றியம் 20% அளவு கரிமக் கழிவைக் கட்டுப்படுத்த உறுதி தெரிவித்துள்ளன.
இந்தியா தன் பங்குக்கு 25% கரிமக் கழிவைக் கட்டுப் படுத்துவதாக அறிவித்துள்ளது.
ஆனால் இது தனிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு எனக் குறைகூறி இந்திய நாடாளுமன்றத்தில் பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
எனினும் அணுஆயுத ஒப்பந்தத்தின்போது மௌனமாக இருந்து சாதித்ததைப் போன்று இம்முறையும் பிரதமர் மன்மோகன் தமது கடப்பாட்டில் உறுதியாக இருப்பார் என நம்பலாம்.
பொருளியலையும் காட்டு வளத்தையும் ஒருங்கே காத்துவரும் சிங்கப்பூர் இன்னும் ஒருபடி மேலாக வரும் 2020க்குள் 16% கரிமக் கழிவைக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
கோபன்ஹேகன் உச்சநிலை மாநாடு திட்டவட்டமான வெற்றியைப் பெற வேண்டும்; பெறும் என்று நம்புவதற்கு அதிக காரணங்கள் உள்ளன.
“உடன்பாடுகள் சட்டபூர்வமாக்கப்பட்டாலன்றி, நாடுகள் தங்களது கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை எடுக்காது,” என்று மூத்த அமைச்சர் பேராசிரியர் எஸ்.ஜயகுமார் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.