சிங்கப்பூர் மொழிச் சூழலில் ஒரே தலைமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமான இளையர்கள் வீட்டில் தாய்மொழியைப் பேசினர்.
ஆனால் இன்றைய இளையரில் அதிகமானோர் ஆங்கிலம் மட்டுமே வீட்டில் பேசுகின்றனர்.
1982ல் இந்தியர்களில் பத்தில் மூன்று பேர் வீட்டில் ஆங்கிலம் பேசினர். தற்போது பத்தில் ஆறு பேர் வீட்டில் ஆங்கிலம் பேசுகின்றனர்.
கல்வி அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் அண்மையில் தெரிவித்த புள்ளி விவரம் இது.
சிங்கப்பூரின் முதல் மொழி ஆங்கிலமாக இருந்தபோதும், இருமொழிக் கொள்கை சிங்கப்பூருக்கு பல வழிகளில் பயனளித்துள்ளது.
இன்றைய உலகமயமாக்கலில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பது நன்மை பயக்கும்.
எனவே இரு மொழிக் கொள்கையை அரசாங்கம் தொடரும் என்பதை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால் இரு மொழிக் கல்வியை பயனுள்ளதாகவும் காலத்துக்கு ஏற்றதாகவும் மாற்றி அமைப்பதே தற்போதுள்ள சவால்.
சிங்கப்பூரில் மாறி வரும் மொழிச் சூழலில் மாணவர்களுக்கு ஆங்கில மொழியையும் தாய் மொழியையும் அவரவர் தரத்திற்கேற்ப சொல்லித் தருவது எளிதானதல்ல.
தமிழே பேசாத மாணவர்களை முதலில் பேச வைக்க வேண்டும், பிறகு படிக்க வைக்க வேண்டும்.
இதற்காக தமிழ் ஆசிரியர்கள் பல ஜால வித்தைகளைச் செய்ய வேண்டியுள்ளது. மாணவர்களை ஈர்த்து, ஈடுபாடுகொள்ளச் செய்யும் முறையில் பாடங்களை அமைக்க வேண்டியுள்ளது.
10 ஆண்டுகள் பள்ளியில் தாய்மொழி படித்த மாணவர்கள் அதைப் பயன்படுத்த வேண்டும். தாய்மொழிப் பத்திரிகைகள், புத்தகங்களை வாசிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும்.
பள்ளிப் படிப்பை முடிக்கும் போது தாய்மொழி பேசுவதையும் அவர்கள் விட்டுவிடுவார்களே ஆனால் முயற்சிகளில் நாம் தோற்றுவிட்டோம் என அர்த்தம்.
பயன் என்பது மதிப்பெண்கள் மட்டுமல்ல. மாணவர்கள் எவ்வாறு கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் பொறுத்தது என்று கல்வி அமைச்சர் டாக்டர் இங் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் தமிழ் இளையர்களைத் தாய்மொழியில் பேச வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்கிறது. அனைத்து வளங்களையும் அளிக்கிறது.
குதிரையை தண்ணீர் தொட்டி வரை அழைத்துச் செல்லலாம். ஆனால் குதிரைதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பிள்ளைகளுடன் வீட்டில் தமிழ் பேசுவது; தமிழ் நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வது; தமிழ் நூல்கள், செய்தித்தாட்கள் வாசிக்கப் பழக்குவது; தமிழ்ச் சூழலில் வளர்ப்பது போன்றவை எல்லாம் பெற்றோரின் கடமை.
தாய் சாதத்துடன் ஊட்டி வளர்ப்பதுதான் தாய் மொழி.
உலக மொழியான ஆங்கிலமே சிங்கப்பூரின் முதல் மொழியாக உள்ளது. வெளிச்சூழலில் ஆங்கிலமே பயன்பாட்டு மொழி. இதைத் தவிர்க்க முடியாது.
ஆனால் வீட்டில் தமிழ் இருந்தால் வெளியில் இருக்கும் ஆங்கிலத்தைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை.
நாம் பிள்ளைகளுக்குத் தமிழூட்ட மறந்துவிட்டு, பிறகு தமிழ்ப் புழக்கம் குறைந்து விட்டதே எனப் புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை.
பேசா மொழி மறைந்து விடும் என்பது உலகறிந்த உண்மை.