fontsize: 60% 70% 80% 90%

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்! - இராம வயிரவன்

இறைவன்
இருத்தல் போதாதென்கிறான்
இடைவெளி குறைத்து
என்னருகில் வாவென்கிறான்
நோன்பின் மூலம்
பசித்திரு, விழித்திரு எனப்
பயிற்சியளிக்கிறான்!

புலன்களை அடக்கி
இச்சைகளைத் தவிர்த்து
நோன்பிருந்து தொழுகிறேன்!
என் ஒவ்வொரு நாள்
தொழுதலின் போதும்
ஆன்மா அமைதியடைந்து
மேன்மையடைகிறது!

ஏன் முப்பது நாள்?
என்றெண்ணிப்பார்க்கிறது மனம்!

என் முதல் நாள் நோன்பின் போது
என் பசியறிந்து கொண்டேன்!

என் இரண்டாம் நாள் நோன்பின் போது
அட்டைபெட்டி விற்றுப் பிழைக்கும்
அந்த ஏழைக்கிழவியின் பசியும்
முள் செடிக்குப் பக்கத்தில்
முடங்கிக் கிடந்த
ஏழைச் சிறுமியின் பசியும்
என்னை அழ வைத்தது!

என் மூன்றாம் நாள் நோன்பின் போது
நான் பத்திரிகையில் பார்த்த
சோமாலியாக் குழந்தையின் படம் ஒன்று
அனுபவமாகிக்
கண்ணில் நீரை வரவழைக்கிறது!

இப்படிப்
பசி எனக்குப்
படிப்படியாக அறிமுகமாகிறது!
பசி என்றால் என்ன? என்று
என் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்
அறிந்து கொண்டிருக்கின்றன!

நோன்பினால்
என் மென்பொருளும்
வன்பொருளும்
கழுவப்பட்டுத் தூய்மையடைகின்றன!

இப்போது
என் இதயத்தில் நீர் சுரக்கிறது
இறைவனின் திட்டம் வெற்றி பெறுகிறது!

இஸ்லாமிய சகோதரர் அனைவருக்கும் - என்
இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838