இரண்டு வாரங்களுக்கு முன் ‘வருங்காலச் சந்ததிக்குத் தீபம் ஏந்துவோம்’ எனும் தலைப்பில், சிங்கையின் தமிழ் நிலை பற்றி முரசொலி ஆராய்ந்தது.
எடுத்துக்காட்டாக, இருக்கும் நாம் அதற்கு தகுதியுடைவர்களா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். காரணம் நாம் தவறான பாதையிலே தீபம் ஏந்தி நின்றால் அது வருங்காலச் சந்ததியரை நல்வழிக்கு இட்டுச்செல்லா.
பெயர் பலகைகளில் தமிழ் இல்லாதது குறித்து சிலர் வருத்தப்படுகின்றனர் என்று முரசொலி குறிப்பிட்டிருந்தது. இவர் களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நமது பிள்ளைகளின் நாவிலும் ஏட்டிலும் தமிழ் தங்கிவிட்டால், பெயர் பலகைகளில் தமிழ் இருக்கவேண்டிய அவசியமில்லை.
உலக அளவில் பார்க்கையில், சிங்கையிலே தமிழ் நல்ல நிலையிலேதான் உள்ளது. அரசாங்கத்தின் ஆதரவுடன் நமக்கென்று வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ், நூலகங்களில் புத்தகங்கள் என்றெல்லாம் இருக்கின்றன. இதை நாம் எந்த அளவிற்குப் பயன்படுத்துகிறோம் என்பதிலிருந்துதான், தொடர்ந்து நாம் தமிழைப் பராமரிப்பது சாத்தியமாகும்.
‘அப்பன் அருமை மாண்டால் தெரியும்’ என்பார்கள். அதுபோல்தான் இருக்கின்ற வரையிலே நமக்கு இந்த வாய்ப்புகளின் அருமை தெரியாது. அவை மறைந்த பிறகு நாம் வருந்திப் பயனில்லை.
தமிழ் மொழியை ஒரு பாடத்திட்டமாக மட்டும் நம் மாணவர்கள் கருதாமல், அதை ஒரு வாழ்வியலாகக் கருதும்போது, அதன் நிலை மென்மேலும் உயரும் என்பது என் கருத்து.
வருங்காலச் சந்ததிக்குத் தீபம் ஏற்றி நிற்போர் இது போன்ற சிந்தனைகளோடு நின்று வழி காட்டுவர் என்ற நம்பிக்கை கொண்டு அவர்களின் பந்தங்களுக்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டே செல்லும் நலம் விரும்பி நான்.
மெ. அழகப்பன்