வாஷிங்டன்
பொருளியல் பின்னடைவால் அமெரிக்கா பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் சீனா செய்திருக்கும் $1 டிரில்லியன் டாலர் முதலீடுகளும் பத்திரமாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை உறுதி கூறியிருக்கிறது.
“அமெரிக்காவைவிட உலகில் வேறெங்கிலும் முதலீடுகள் பத்திரமாக இருப்பதில்லை” என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ராபர்ட் கிப்ஸ் கூறினார்.
சீனப் பிரதமர் வென் ஜியாபாவ் முன்னதாக இதுகுறித்து அக்கறை தெரிவித்ததோடு, அமெரிக்கா தொடர்ந்து “நம்பகமான நாடாக” இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அமெரிக்காவில் ஆக அதிக பணம் முதலீடு செய்திருக்கும் நாடு சீனா.
அமெரிக்காவில் சீனா செய்திருக்கும் முதலீடுகள் பத்திரமாக இருக்குமென அதிபர் பாரக் ஒபாமாவின் தலைமை பொருளியல் ஆலோசகர் முன்னதாக உறுதி கூறியிருந்தார்.
அமெரிக்க அரசாங்க சொத்துகளில் சீனா பல பில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
உலக பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முதலீடுகளின் மதிப்பு குறைந்துபோகாமல் இருக்கும் வகையில் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அமெரிக்கா ஏற்பதை அது உறுதிசெய்ய வேண்டும் என்றும் சீனப் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.