மாணவர்களுக்கு உயிரோவியம் மூலம் புதுமையான கற்றல் அனுபவம்

மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்பதற்கான புதுமையான வழிகளை அறிமுகப்படுத்திக்கொண்டு வருகிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த உயிரோவியரான ஜெகன்நாத் ராமானுஜம், 36.

‘கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்’ எனும் உயிரோவிய நிறுவனத்தின் நிறுவனருமான அவர், நான்காண்டுகளுக்கு முன்பு ‘கதை நேரம்’ எனும் இணையத் தளத்தை அறிமுகப்படுத்தினார். உள்ளூர் எழுத்தாளர்களின் சிறுவர் கதைகளுக்கு உயிரூட்டி சிறுவர்களின் கற்றலை மேம்படுத்தச் செய்வதே இந்தத் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.

கதைகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம் சிறுவர்களின் கற்றலுக்கு அது பயனளிக்கும். மேலும், சிறுவர்கள் கதைகளுடன் நன்றாகத் தொடர்புகொள்ளவும் முடியும் என்று ஜெகன்நாத் நம்புகிறார்.

கதை நேரம் தொடங்கிய முதல் ஆண்டில் இணையத்தளத்தில் நான்கு உயிரோவியங்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டன. மறு ஆண்டில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களைச் சென்றடையும் விதமாக கேலிச்சித்திரக் கதைகளும் விளக்க ஒலிப்புத்தகங்களும் சேர்க்கப்பட்டன.

ஒவ்வோர் ஆண்டும் இரண்டு புதிய உயிரோவியங்கள் கதை நேரம் இணையத்தளத்தில் அறிமுகப்படுத்தப்படும். தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு இந்த ஆண்டும் இரண்டு புதிய உயிரோவியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சனிக்கிழமை காலை (ஏப்ரல் 27) தேசிய நூலகத்தில் கதை நேரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியரான த.ராஜசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“தமிழில் கேலிச்சித்திரங்கள் இருப்பது மிகக் குறைவு என்பது அனைவரும் அறிந்ததே. ஜெகன்நாத்தின் முயற்சி மிகப் பாராட்டத்தக்கது. மாணவர்களின் கற்பனைத்திறன் வளர வேண்டும்,” என்று த.ராஜசேகர் கூறினார்.

உள்ளூர் எழுத்தாளர்களான கீர்த்திகா ரவீந்திரன், 27, மற்றும் சுடர்மொழி ஆகியோரின் சிறுவர் கதைகளுக்கு உயிரூட்டி அவற்றை தமிழ்மொழி மாதத்தை ஒட்டி நிகழ்ச்சியில் ஜெகன்நாத் அறிமுகப்படுத்தியிருந்தார்.

‘ஈர்க்கும் ஈ’, ‘குறும்புக்கார மீன்’ என்ற அவ்விரண்டு கதைகளையும் மாணவர்கள் கதை நேரம் இணையத்தளத்திற்குச் சென்று படித்து மகிழலாம். கிரியேட் எனும் சமூக நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தொண்டூழியம் புரிந்து வரும் கீர்த்திகா, சிறார்களுக்கு பல கதைப் புத்தகங்களை எழுதிய அனுபவம் உள்ளவர்.

‘ஈர்க்கும் ஈ’ கதையை எழுதிய அவர் சென்றாண்டும் கதை நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழ் முரசு நாளிதழின் செய்தியாளருமான கீர்த்திகா, “சென்றாண்டு நான் எழுதிய ‘இசைக்கும் இ’ கதைக்காக கதை நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். உயிரோவியம் மூலம் சிறுவர் கதைகள் சுவாரசியமூட்டப்படுகின்றன. இதனால் சிறுவர்கள் தமிழ்மொழி மேல் வைத்திருக்கும் நாட்டம் அதிகரிக்கும்,” என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் உயிரோவியம் கேலிச்சித்திர போட்டியை நடத்தி வரும் ஜெகன்நாத் சிங்கப்பூரில் இருக்கும் பள்ளிகளுடன் கைகோத்துள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான கேலிச்சித்திர போட்டியும் நடைபெற்றது. அதற்கு முன்பே 10 பள்ளிகளிலிருந்து ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்து மாணவர்கள் குழுக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

“குழுவாகப் போட்டியில் மாணவர்கள் கலந்துகொள்ளும் போது ஒவ்வொருவருக்கும் இருக்கும் திறமைகளை வைத்து அவர்களால் போட்டியில் சிறப்பாக பங்கேற்க முடிகிறது.

“கலந்துகொண்ட மாணவர்களைப் போட்டிக்குத் தயார் செய்ய பிப்ரவரி மாதத்தில் இரண்டு நாள்கள் பயிலரங்கு ஒன்றை நடத்தினேன். கேலிச்சித்திரம், உயிரோவியம் சார்ந்த நுணுக்கங்களை அவர்கள் கற்றுக்கொண்டனர். இதன் மூலம் மாணவர்களின் புத்தாக்கத்திறன் மேம்படும்,” என்று ஜெகன்நாத் குறிப்பிட்டார்.

போட்டியில் வாகை சூடிய பொங்கோல் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கேலிச்சித்திர கதையை படைத்திருந்தனர்.

“கதை நேரத்தின் கேலிச்சித்திர போட்டியில் நாங்கள் இரண்டாவது முறையாக கலந்துகொள்கிறோம். இது ஒரு மாறுபட்ட போட்டி. மாணவர்களிடம் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளதா என்று நான் எப்போதும் கேட்பேன். இதை வெறும் ஒரு போட்டியாக மட்டும் பார்க்காமல் ஒரு கற்றல் அனுபவமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

“மாணவர்கள் கேன்வா செயலியை வைத்து கேலிச்சித்திரத்தை படைத்தார்கள். நான் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தேனே தவிர இதர உருவாக்கம் அனைத்தும் மாணவர்களின் கற்பனைத் திறன் மட்டுமே,” என்று பொங்கோல் உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரான ஸ்ரீவித்யா கூறினார்.

sanush@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!