2023 தீபாவளி: நவீனயுக இளையர்களுக்கு ஆடை விருந்து

தீபாவளி நெருங்கிவிட்டதைக் குறிக்க, தேக்கா பகுதியிலும் லிட்டில் இந்தியா சுற்றுவட்டாரக் கடைகளிலும் புத்தம்புதிய வண்ண வண்ண ஆடைகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு புது ரக ஆடைகள் சந்தைக்கு வருவது போலவே, இவ்வாண்டும் ஆண், பெண், குழந்தைகள் எனப் பாகுபாடின்றி அனைவருக்கும் ‘ரெடிமேட்’ அதாவது அணிவதற்குத் தயார் நிலையிலுள்ள ஆடைகளோடு, விருப்பப்படி தைத்துக்கொள்வதற்கான துணி வகைகளும் வந்துள்ளன.

குடும்பத்தில் அனைவருக்கும் ஒரே நிற ஆடை

சிலர் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் புத்தாடை அணிய விருப்பப்படுகின்றனர்.  படம்: டினேஷ் குமார்

பெரியவர் முதல் குழந்தைகள் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நிறத்திலும் ஒரே வித அலங்காரங்களிலும் அமைந்த ஆடைகளை உடுத்தும் போக்கு இவ்வாண்டும் அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார் தேக்கா நிலையத்தில் துணிக்கடை ஒன்றில் பணியாற்றும் கீர்த்தி பிரியங்கா, 24.

ஒரே நிறத்தில் ஆண்களுக்கு ‘குர்தா’ என்றழைக்கப்படும் மேலாடை வகையும், பெண்களுக்கு ‘லெஹெங்கா’ அல்லது நீள ‘கவுன்’ எனப்படும் நெடுஞ்சட்டை வகை ஆடைகளும் அதிகம் விரும்பப்படுவதாகச் சொல்கிறார் இவர். அதே ஆடைகளின் சிறிய வடிவமைப்புகள் குழந்தைகளுக்கும் விற்கப்படுவதாக இவர் குறிப்பிட்டார்.

இளம்பெண்களை ஈர்க்கும் புதிய ‘ஆலியா சூட்’

அதிக எடையுள்ள உடைகளைவிட இவ்வாண்டு, அச்சு முறையில் பூவலங்காரம் செய்யப்பட்ட உடைகளைப் பெண்கள் அதிகம் வாங்குகின்றனர். படம்: டினேஷ் குமார்

இவ்வாண்டு பெண்களுக்கான ஆடை வகைப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளது ‘ஆலியா சூட்’. இது நீளமான கவுன், சற்றே தளர்வான கால்சட்டை, துப்பட்டா அடங்கிய ஓர் ஆடையாகும்.

கழுத்துப் பகுதியில் பூந்தையல், கண்ணாடி வேலைப்பாடுகளுடன், பெரும்பாலும் பெரிய பூ அலங்காரம் செய்யப்பட்டுள்ள இவ்வகை ஆடைகள், இளையர் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்துள்ளது.

மூன்று பகுதி கொண்ட இதே வகை ஆடையில், ஒரு நீள நெடுஞ்சட்டை வகை, உயரம் குறைந்த மேற்சட்டை கொண்ட வகை என விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யப் பல வகைகளும் உள்ளன என்கிறார் தேக்கா நிலையத்தில் கடை நடத்தும் ராணி, 55.

பண்டிகை காலத்தில் தனித்துவமாகத் தெரிந்திட, பெரும்பாலும் ‘பளிச்’ நிறங்களில், சற்றே அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை மக்கள் விரும்பி வாங்குவதாகச் சொல்கிறார் கடை ஊழியர் தமிழரசி, 24.

தீபாவளிக்குப் புத்தாடை வாங்க வந்திருந்த ரேவதி, “லெஹெங்கா வகை ஆடைகளை இளையர்கள் எப்போதும் விரும்புகின்றனர். வெவ்வேறு நிறங்களிலும், துணி வகையிலும், வேலைப்பாடுகளுடனும் உள்ள லெஹெங்கா தான் தீபாவளிக்கு என் தேர்வு,” என்கிறார். பண்டிகைக் காலமென்பதால் $300 வரை செலவழிக்கக்கூடும் என்றார் இவர்.

லெஹெங்கா ஆடைகள் இவ்வாண்டும் விருப்பம் குறையாத உடையாகவே இருக்கிறது. படம்: டினேஷ் குமார்

பெண்களுக்கான ஆடைகள் 50 வெள்ளியில் தொடங்கி விற்பனை செய்யப்படும் நிலையில், லெஹெங்கா வகைகள் 90 வெள்ளியிலிருந்து தொடங்குகின்றன. அதிகபட்சமாக 300 வெள்ளி வரையிலான ஆடைகள் விற்பனையாவதாகச் சொல்கிறனர் கடை உரிமையாளர்கள்.

தனது 17 வயது மகளுக்கு ஆடை வாங்க இயு டீ பகுதியிலிருந்து வந்திருந்த 51 வயது லதா, “என் மகள் லெஹெங்கா வாங்க வேண்டுமென விரும்புகிறாள். அவளது ரசனைக்கேற்ப அழகிய வேலைப்பாடுகள் கொண்ட லெஹெங்காக்கள் பல இருக்கின்றன. சில கடைகளில் சுற்றி பார்த்துவிட்டு வாங்குவோம்,” என்றார். $100 வெள்ளி முதல் $200 வெள்ளி வரை விலை கொண்ட ஆடையை வாங்க உள்ளதாகவும் கூறினார்.

சேலைகள் மீது பெண்களின் தீரா மோகம்

ஒவ்வொரு பண்டிகைக்கும் புதுப்புது ஆடைகள் வந்தாலும் பெண்களுக்குச் சேலை மீதான விருப்பம் மாறுவதே இல்லை.

பண்டிகைகளுக்குப் பெண்களின் முதல் தேர்வு சேலைகள். படம்: டினேஷ் குமார்

குறிப்பாக, பண்டிகைக் காலத்தைச் சேலை உடுத்தும் வாய்ப்பாகவே இளம்பெண்கள் கருதுவதாகச் சொல்கிறார் சேலைக் கடை ஊழியர் சரஸ்வதி, 70.

இவ்வாண்டு இளையர் மத்தியில் கவனம் ஈர்த்திருப்பது ‘குபேரப் பட்டு’ எனப்படும் ஒரே நிறத்தில் முழு சேலையிலும் சரிகை வேலைப்பாடுடன் வடிவமைக்கப்பட்டு, பிரபலமான நிறங்களான ஊதா, இளஞ்சிவப்பு உள்ளிட்ட வெளிர் நிறங்களில் வருபவை. இவற்றுக்கு நேர்மாறாக, பளிச் நிற மேலாடையோடு பொருத்தி உடுத்திக்கொள்வது பிரபல போக்காக இருக்கிறது.

அன்னம், கும்பம், மீன், முத்துக்கட்டம் உள்ளிட்ட பழமையான வடிவமைப்புள்ள சேலைகள், கடந்த சில ஆண்டுகளாக பிரபலமடைந்திருக்கும் ‘சாப்ட் சில்க்’ எனப்படும் மென்மையான வகை சேலைகள், ‘ரா சில்க்’, ‘டிஷ்யு’ சேலைகள், ‘கோட்டா சில்க்’ என நீண்ட பட்டியல் கொண்ட சேலை வகைகள் ஏறத்தாழ $20 வெள்ளி முதல் $2000 வெள்ளி வரை விற்கப்படுகின்றன.

தவிர, “இவ்வாண்டு அதிகம் விரும்பப்படுவது ‘வல்கலம்’ எனப்படும் பளபளப்பான ‘சாட்டின்’ போன்ற துணியிலான ‘பனாரஸ்’ சேலைதான்,” என்கிறார் சரஸ்வதி.

அழகிய வேலைப்பாடு கொண்ட காஞ்சிப்பட்டு சேலையுடன் சேலைக்கடை ஊழியர் சரஸ்வதி. படம்: டினேஷ் குமார்

மேலும், பாந்தினி, போச்சம்பள்ளி, மைசூர் சில்க், கலம்காரி போன்ற பல வகை சேலைகளை இளையர்கள் தேர்ந்தெடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பட்டுச் சேலைகளில் பளிச் நிறங்களும், ‘டிசைனர்’ எனப்படும் குறைந்த வேலைப்பாடுடன் வரும் புதுவரவு சேலைகளில் வெளிர் நிறங்களும் அதிகம் விரும்பப்படுகின்றன.

மூத்தோர் பெரும்பாலும் அதிக வேலைப்பாடில்லாத மென்மையான பட்டுச் சேலைகளையும் பருத்தி வகை சேலைகளையும் எப்பொழுதும் போல விரும்புகின்றனர்.

பார்ப்பதற்குப் பட்டு போலவும், உடுத்துவதற்குப் பருத்தி போல உறுத்தாத மகேஸ்வரி வகை சேலைகளும், சேலை ஓரங்களில் சிறு பருத்தி அலங்காரங்களுடன் வரும் மால் மால் வகை சேலைகளும் இளையர்களிடையே அதிகப் பிரபலமடைந்திருப்பதாகச் சொல்கிறார் கேம்பெல் ரோட்டில் உள்ள சேலைக் கடை உரிமையாளர் சாருமதி.

ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் ‘சிக்கென் காரி’ குர்தாக்கள்

முழு ஆடையிலும் வலுக்கவனமாக செய்யப்படும் நூல் வேலைப்பாடுகள் கொண்ட இவ்வகை குர்தாக்கள், இளவயது ஆண்களிடையே தற்பொழுது பிரபலமாக உள்ளன.

பண்டிகைக் காலங்களில் சாதாரண வகை சட்டை, டீ-சட்டைகளை விட குர்தா வகைகளை அதிகம் விரும்பி வாங்குகின்றனர் இளையர்கள். படம்: டினேஷ் குமார்

அதிக வேலைப்பாடுகளை விரும்புபவர்களுக்கான சிக்கென் காரி குர்தாக்கள், எளிமை விரும்பிகளுக்குச் சிறு வேலைப்பாடுகளுடைய குர்தா வகை சட்டைகள், 85 வெள்ளியில் தொடங்குகின்றன என்கிறார் ஆண்களுக்கான பிரத்யேக துணிக்கடை நடத்தும் ரஷீத்.

அதிலும் விருப்பத்திற்கேற்ப நீளம் குறைந்த, நீளம் அதிகமான குர்தா வகை சட்டைகள், முழுக்கை அரைக்கை கொண்ட குர்தாக்களும் விற்கப்படுகின்றன.

இவை தவிர, இவ்வாண்டின் கவனம் ஈர்த்த மற்றொரு வகை சட்டை அல்லது குர்தாக்களுடன் பொருந்திய நிற வேட்டிகள். மேலும், இறுக்கமான கால்சட்டை, தளர்வான கால்சட்டை, கச்சம் வடிவமைப்பிலான கால்சட்டை எனப் பல வகை கால்சட்டைகளுடன் வரும் குர்தாக்களும் விரும்பபப்படுகின்றன.

குழந்தைகளுக்கான துணிக்கடை நடத்தும் சுகன், 40, தேக்கா நிலையம் புதுப்பிக்கப்பட்ட பின் கொண்டாடப்படும் முதல் தீபாவளி என்பதால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்குமெனக் கருதி அதிகளவு முதலீடு செய்து துணிகளை வாங்கியுள்ளதாகப் பகிர்ந்துகொண்டார். இன்னும் மக்கள் முழுவீச்சில் துணிகள் வாங்கக் குவியவில்லை. வாரயிறுதியில் திரளாக மக்கள் வருவர் என்ற எதிர்பார்ப்பில் இவரைப் போன்ற கடைக்காரர்கள் இருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!