வடை வியாபாரத்துக்கு ஏற்றம்தந்த ஆவணப்படம்

கணவரோடு கைகோத்து உணவங்காடித் தொழிலில் கால் எடுத்து வைத்தபோது, தற்போது 65 வயதாகும் திருவாட்டி ஜீனா ராஜனுக்கு எல்லாம் புதிதாக இருந்தது.

கணவர் தந்த ஊக்கமும் ஆதரவும் பக்கபலமாக இருந்ததால் அவர் அத்தொழிலை இன்முகத்துடன் நடத்திச் சென்றார்.

ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கணவரின் திடீர் மறைவு ஜீனாவின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

1985ல் ஜீனாவும் அவரது மறைந்த கணவர் திரு ஜேம்சும் தங்களது குடியிருப்புப் பேட்டையில் வீடு வீடாகச் சென்று தாங்கள் தயாரித்த வடைகளையும் தின்பண்டங்களையும் விற்று வந்தனர்.

வியாபாரம் சூடுபிடிக்க, 1987ல் அவர்கள் முதலில் கேலாங் பாருவில் ‘ஜினாஸ் வடை’ என்ற பெயரில் கடை திறந்தனர்.

90களின் மத்தியில், வடைகளைச் சற்று தனித்துவமிக்க பாணியில் ஜீனா தயாரிக்க ஆரம்பித்தார்.

அப்படி வந்தவைதான் ‘டோஃபு’, ‘சீஸ்’, ‘கிராப் ஸ்டிக்’, ‘இக்கான் பிளீஸ்’ வடைகளாகும்.

ஒரு காலகட்டத்தில் சிறந்த வடைகளுக்கான கடை என்றாலே அது ‘ஜீனாஸ் வடை’ கடையாகத்தான் இருக்கும் என்று பெயர் பெற்ற வியாபாரம், திரு ஜேம்சின் மறைவுக்குப் பிறகு சரிந்தது.

ஒரு கை இழந்தது போல் தத்தளித்த ஜீனா, செய்வதறியாமல் இருந்தார். தனது கணவர் உயிரோடு இருந்தபோது வியாபாரத்தை வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

“இன்று என் கணவர் என்னுடன் இல்லை. அவரது கனவை நனவாக்க முடியாமல் போனது என்னை மிகவும் பாதித்துள்ளது,” என்று கூறிய ஜீனாவின் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

மூன்று மகன்களுக்குத் தாயாரான ஜீனாவுக்கு, இந்நாள் வரை வியாபாரத்தில் நிலைத்து நிற்கக் காரணமாக இருந்தவர் அவரின் அக்கா.

முழுநேரப் பணியில் இருந்த அவரது அக்கா, திடீரென ஆட்குறைப்பு காரணமாக வேலையை இழந்தார்.

தற்போது டன்மன் உணவங்காடி நிலையத்தில் ஜீனாஸ் வடை கடை இயங்கி வருகிறது.

ஜீனாவுடன் அவர் அக்காவும் வியாபாரத்தைக் கவனித்துக்கொள்கிறார்கள்.

கொவிட்-19 காலத்தில் மந்தமாக இருந்த வியாபாரம், அதற்குப் பிறகும் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.

ஒரு நாளில் 10 வாடிக்கையாளர்களுக்கும் குறைவானவர்களைச் சந்திக்கும்போது, “இன்றாவது வியாபாரம் நன்றாக இருக்கும் என்று நம்புவோம், ஆனால் எதிர்பார்ப்பது போல் இருக்காது. வடை வடை என்று கூவாத நாள்களே இல்லை,” என்று சோகம் ததும்பிய குரலில் ஜீனா கூறினார்.

ஜீனாவைப் போல பல உணவங்காடிக் கடைக்காரர்கள் தங்களின் வியாபாரங்களில் சில தடுமாற்றங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிங்கப்பூரில் மொத்தம் 13,000க்கும் மேற்பட்ட உணவங்காடிக் கடைகள் உள்ளன.

பெரும்பாலான உணவங்காடிக் கடைக்காரர்களின் சராசரி வயது 60. உயரும் விலைகள், வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனை போன்ற காரணங்களால் உணவங்காடித் தொழிலின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகி உள்ளது.

சிங்கப்பூரர்கள் நமது நாட்டின் உணவங்காடித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘செகண்ட் சேர்விங்ஸ்’ எனும் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது.

‘அசேன்ஷர்’ நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவான ‘அசேன்ஷர் சோங்’, தங்களின் வியாபாரம் போராட்டமாய் உள்ள மூன்று உணவங்காடிக் கடைக்காரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கதைகளை ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளது.

மூவரில் ஒருவரான ஜீனா, அந்த வாய்ப்பு மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணத் தொடங்கியுள்ளார்.

படைப்பாற்றல், தொழில்நுட்பம் ஆகியவற்றால் கடைக்காரர்களின் வியாபாரங்கள் மேம்படுத்தப்பட்டன.

கணவர் தொடங்கிய தொழிலின் மரபு தொடர வேண்டும். அதே நேரத்தில் நவீன பாணிக்கேற்ப வியாபாரம் பரிணாமம் காண வேண்டும்.

கடையின் முத்திரையிலும் பொட்டலமிடும் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

சிங்கப்பூரர்களின் நவீன ரசனைக்கேற்றவாறு வாடிக்கையாளர்கள் இனிமேல் ஜீனாவின் கடையில் அவர்கள் வாங்கும் வடைகளின் சுவையை மெருகூட்டுவதற்காக மூன்று வகைகளான சாஸ்களை எதிர்பார்க்கலாம்.

‘சால்டட் எக்’, ‘சில்லி கிராப்’, ‘ரோஜாக்’ சாஸ்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.

உள்ளூர் மதுபானக் கடை ஒன்றுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பானங்களை அருந்தும்போது ஜீனாவின் வடைகளைச் சுவைக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ‘ஜீனாஸ் வடை’ என்ற பெயரிலிருந்து, ‘தி சிங்கப்பூரியன் வடை’ என்று அவரது கடை பெயர் மாற்றம் கண்டது.

அந்த மாற்றங்களால் வியாபாரம் 15 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சியில் திளைக்கும் ஜீனா, “எனக்கு முதலில் ஆவணப்படத்தில் எனது கடையைக் காட்சிப்படுத்த வாய்ப்பு கிட்டியபோது நான் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டேன். அசேன்ஷர் சோங் தந்த அந்த வாய்ப்பு மூலம் எனது கடை மீண்டும் எனது கணவர் நினைத்துப் பார்த்தது போல உருவெடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்,” எனப் புன்னகை பூத்த முகத்துடன் கூறினார்.

ஆவணப்படம் இம்மாதம் 13ஆம் தேதியன்று மீடியாகார்ப் சேனல் 5ல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

தனக்குப் பிறகு தனது இளைய மகன் டேனியல் வியாபாரத்தை எடுத்து நடத்துவார் என உறுதிபடக் கூறினார் ஜீனா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!