தீராத சர்ச்சைக்குத் தீர்வுகாண முயலும் ஆவணப்படம்

‘ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?’ என்ற வினாவிற்கு விடைகாணும் முயற்சியில், தமிழக வரலாற்று ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளனர் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்கள்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1), மாலை 6 முதல் 8 மணி வரை, தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

ஆவணப்பட வெளியீட்டுக்காக மக்கள் பலர் ஒன்றுகூடினர். படம்: ரவி சிங்காரம்

‘மக்கள் மனம்’ இதழாசிரியரும் ‘கவிமாலை’ அமைப்பின் நிறுவனருமான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை, தமிழ்க் கற்றல் பயணத்தின்போது கண்ட மாணவர்கள், ஆதித்த கரிகாலனின் மர்மமான கொலை பற்றிய சர்ச்சைக்குத் தீர்வுகாண விரும்பினர்.

சென்ற ஆண்டு ‘நாடோடிகள்’, ‘எண்ணங்கள் நிலையானவை அல்ல’ என்ற இரு குறும்படங்களை வெளியிட்ட இம்மாணவர்கள், முதன்முறையாக ஆவணப்படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர்.

ஆதித்த கரிகாலனின் கொலை பற்றி ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமும் கல்கி, நீலகண்ட சாஸ்திரி போன்ற வரலாற்றாசிரியர்களின் படைப்புகளும் மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கின்றன.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஆதித்த கரிகாலன் பற்றி மக்களுக்காக ‘கஹூட்’ கேள்வி-பதில் அங்கம் நடைபெற்றது. பின்பு ஆவணப்படம் ஒளிபரப்பானது. படத்தில்: (இடம்) திவ்யா, 17, ஷகினா, 17. படம்: ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்ட மாணவர்கள்

“சதிசெய்து கொன்றது பாண்டியனின் ஆபத்துதவிகளா? ஆதித்த கரிகாலனின் சிறிய தந்தை உத்தம சோழனா? தங்கை குந்தவையா? சோழச் சிற்றரசர்களா?” என்ற கேள்விகளுக்குப் பதிலாக ஆவணப்படத்தில் தம் ஊகங்களை முன்வைத்தனர் மாணவர்களும் ஆசிரியர்களும்.

பல வரலாற்று ஆவணங்கள்மூலம் மாணவர்கள் கருத்துகளைச் சேகரித்த விதம் குறிப்பிடத்தக்கது. ஓரிரு மாணவர்கள் தஞ்சைக் கோவிலுக்கு நேரில் சென்று கல்வெட்டுகளைப் பார்த்துவந்தனர்.

நிகழ்ச்சியின் இரண்டாம் அங்கமாக, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்வண்ணம் பத்து நொடிச் சிறுகவிதைகளை வழங்கினர் மாணவர்கள்.

சுற்றுப்புறம், மன்னிப்பு, தூக்கம், விவசாயம், போன்ற தலைப்புகளில் இடம்பெற்ற கவிதைகள், ஆழமான கருத்துகளைச் சுருக்கமாக வழங்கின.

இந்த இரு முயற்சிகளுக்கும் துணைபுரிந்தனர் வழிகாட்டி ஆசிரியர் முனைவர் வீரமுத்து கணேசன், திருவாட்டி கமலவாணி மற்றும் திருவாட்டி சுந்தரேஸ் தேக்வாணி.

ஆசிரியர்களின் உழைப்புக்கு நன்றிகூற, மாணவர்கள் தாமே எழுதிய உருக்கமான கவிதைகளை வாசித்து, புகைப்படத் தொகுப்புகளை வழங்கி கெளரவித்தனர்.

மாணவர்கள் புகைப்படத் தொகுப்பை ஆசிரியை கமலவாணிக்கு வழங்கினர். முன்னாள் மாணவி சரண்யா முசிலா அவருக்காக இயற்றிய கவிதையையும் வாசித்து நன்றிகூறினார். படம்: ரவி சிங்காரம்
ஆவணப்பட வெளியீட்டுக்குத் தூண்டுகோலாக இருந்த வழிகாட்டி ஆசிரியர் முனைவர் வீரமுத்து கணேசனுக்கு மாலை, புகைப்படத் தொகுப்பு வழங்கி கெளரவித்தனர் மாணவர்கள். மாணவர் ரகுநந்தன் அவருக்கென எழுதிய கவிதையையும் வாசித்தார். படம்: ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்ட மாணவர்கள்

“பொன்னியின் செல்வன் போன்ற வரலாறு சார்ந்த புத்தகங்களைப் படிப்பது எனக்குப் பிடிக்கும். அதனால், இம்முயற்சியில் பங்குபெற்றது பெரும் மகிழ்ச்சியளித்தது,” என்றார் நிகழ்ச்சியில் நடித்த ரவி கீதா திவிஜா, 16.

படத்தயாரிப்பில், பத்து நொடிக் கவிதைகளில் பங்குபெற்ற தொடக்கக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள், ‘ஏ’ நிலைத் தேர்வுகள் நெருங்கும் வேளையிலும் தமிழார்வத்தால் இம்முயற்சியை வெற்றியாக்கியுள்ளனர்.

“சரியாகத் திட்டமிட்டு நேரத்தை வகுத்துக்கொண்டதால்தான் இது சாத்தியமானது. இந்த அனுபவம் மிகவும் புத்தாக்கம் மிகுந்ததாக இருந்தது,” என்றனர் ஏற்பாட்டுக் குழுத் தலைவர்கள் ரகுநந்தன், மகாலெட்சுமி, ஸ்ரீராம், அஷ்வின்ராஜ்.

ஆதித்த கரிகாலனாகவும் அவரது சுற்றத்தாராகவும் வேடமிட்டு வரலாற்றை நேரில் கொண்டுவந்த மாணவர்கள். இடமிருந்து: படைவீரராக சீனிவாசன், 17, ஆதித்த கரிகாலனாக ரகுநந்தன், 19, அரண்மனைப் பெண்ணாக ரவி கீதா திவிஜா, 16. படம்: ரவி சிங்காரம்

தேசிய தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டத்தின் பலனாக இந்த இலக்கியம்சார்ந்த நிகழ்வு நடைபெற்றது. தற்போது இரு தொடக்கக் கல்லூரிகள் இத்திட்டத்தில் பங்குபெறுகின்றன. பங்குபெறும் மற்றொரு பள்ளி, தேசியத் தொடக்கக் கல்லூரி.

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம், கவிதைகள், முந்தைய இரு குறும்படங்களை https://www.youtube.com/@asrtlep23 என்ற இணையப்பக்க முகவரியில் காணலாம்.

ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள். படம்: ரவி சிங்காரம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!