வீட்டு விலை உயர்ந்துகொண்டே இருக்காது: அமைச்சர் சூசகம்

சிங்கப்பூரில் வீட்டு விலை கால வரம்பின்றி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

பொது மற்றும் தனியார் சொத்துச் சந்தையில் விலை நிலவரம் மட்டுப்படுவது கவனத்திற்குரியது என்றார் அவர்.

வீட்டுக் கடன் விகிதங்கள் தொடர்ந்து உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இது வீடு வாங்குவோருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கும் சீனமொழி நாளிதழான சாவ்பாவுக்கும் அளித்த பேட்டியில் அமைச்சர் லீ கூறினார்.

“வட்டி விகிதங்கள் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அவை 3.7 விழுக்காட்டிலிருந்து 4.4 விழுக்காடு வரை இருக்கும். எனவே, இது தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார் அமைச்சர் லீ.

சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு அதிக அளவில் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில் சிங்கப்பூரர்கள் பலர் சிக்கனத்துடனும் மிகுந்த கவனத்துடனும் உள்ளனர் என்று திரு லீ கூறினார்.

மத்திய கிழக்கு, ஐரோப்பா ஆகியவற்றில் நடந்துவரும் போர்களை உதாரணம் காட்டிய அமைச்சர் லீ, புவிசார் அரசியல் பதற்றநிலை காரணமாகப் பணக்கார நாடுகளின் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என்று தெரிவித்தார்.

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது வீடுகளுக்கான தேவை அதிகரித்தது.

2017க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2020க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளுக்கான (பிடிஓ) முதல்முறையாக விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை 80 விழுக்காடு அதிகரித்தது.

கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாகக் கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்களுக்கான விநியோகத்துடன் ஊழியர் எண்ணிக்கையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

இதனால் பிடிஓ வீடுகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நேரம் அதிகரித்தது.

இதனால் வீவக மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை அதிகரித்து அவற்றின் விலை அதிகரிக்க காரணமாக அமைந்தது என்று திரு லீ கூறினார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக திரு லீ கூறினார்.

தனியார் வீடுகளுக்கும் இது பொருந்தும் என்றார் அவர்.

2021ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 100,000 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு நிலவரப்படி ஏறத்தாழ 63,000 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. இவ்வாண்டு 19,600 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட உள்ளன.

பிடிஓ வீடுகளுக்கான விண்ணப்ப விகிதங்கள் சீரடைந்திருப்பதாக திரு லீ தெரிவித்தார்.

இதற்கிடையே, தனியார் குடியிருப்புகளுக்காக ஒதுக்கப்படும் நிலம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லீ கூறினார்.

அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் 15 இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 9,250 தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டதாக அமைச்சர் லீ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!