ஆடுபுலி ஆட்டம், ரங்கோலியுடன் களைகட்டிய ஆண்டிறுதிக் கொண்டாட்டம்

அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் மாதத்தை முன்னிட்டு, ஒன்றிணைந்த சிங்கப்பூர் எனும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆண்டிறுதிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் யூனோஸ் வட்டாரத்தைச் சுற்றியுள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ஹோப் இனிஷியேடிவ்ஸ் அலையன்ஸ், தாவோயிஸ்ட் ஃபெடரே‌‌ஷன், லோரோங் கூ சியே ‌ஷெங் ஹோங் டெம்பிள் சங்கம், மக்கள் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

அல்ஜுனிட் அடித்தள அமைப்பின் ஆலோசகர் சுவா எங் லியோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி டிசம்பர் 31ஆம் தேதி யூனோஸ் கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

இந்தியா, பங்ளாதேஷ், இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பதினான்கு தொண்டூழியர்கள் இணைந்து அந்தந்த நாடுகளின் கலாசார அடையாளங்களைக் காட்சிப்படுத்தும் வகையிலான சாவடிகளை அமைத்திருந்தனர்.

இந்திய முஸ்லிம் இளையர் அமைப்பு, தமிழரின் தொன்மையான விளையாட்டுகளில் ஒன்றான ஆடுபுலி ஆட்டத்தைக் கற்றுத்தரும் சாவடியை அமைத்திருந்தது. ‘டார்ம் மாம்’ எனும் மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஹிமான்ஷி வரதராவ் ரங்கோலி வரையும் சாவடியை அமைத்திருந்தார். பஞ்சாபி இன மக்களின் அடையாளமான தலைப்பாகையை அணியவும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

‘சப்தே’ விளையாட்டு, ‘கெத்துபாட்’ கைவினைக் கலை, காகிதத்தில் கூண்டு விளக்கு செய்தல் போன்றவையும் கற்றுத் தரப்பட்டன.

பஞ்சாபி பாங்ரா நடனம், இசை நிகழ்ச்சி, நவீன நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை வெளிநாட்டு ஊழியர்களைக் குதூகலப்படுத்தின. அனைத்துச் சாவடிகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசீதுகளைச் சேகரிக்கும் முதல் 200 ஊழியர்களுக்கு ‘யூனோஸ் கலாசார நிலைய’ புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.

இதில் கலந்துகொண்ட இந்திய முஸ்லிம் இளையர் அமைப்பின் ஹைருல் ஷபீக், 25, “வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரின் கட்டமைப்பில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றனர். அவர்களை சமூகத்துடன் இணைக்கும் விதமாக இவ்வகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது மகிழ்வளிக்கிறது,” என்றார்.

மற்றொரு தொண்டூழியர் அஜ்மல் சுல்தான், 21, “வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பாலும் உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் பணிகளை அன்றாடம் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மாற்றமாக, குழுவாக இணைந்து, திட்டம் வகுத்து, விளையாடி மகிழும் வாய்ப்பாக இந்த ஆடுபுலி ஆட்டம் அமையும் என நம்புகிறோம்,” என்றார்.

தொண்டூழியர் முஹம்மது ஹர்ஷத், 26, “வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாலும் அவர்கள் நம்மில் ஒருவர். குறைவான விடுமுறை நாள்கள் கொண்ட அவர்களுக்கு, இது போன்ற நிகழ்ச்சிகள் மன மாற்றத்தைத் தரும்,” என்றார்.

ரங்கோலி வரையக் கற்றுத் தந்த ஹிமான்ஷி வரதராவ், 42, “பெருந்தொற்றுக் காலத்தில் மற்றவர்களைவிட வெளிநாட்டு ஊழியர்கள் அடைந்த சிரமங்கள் அதிகம். எனவே அவர்களை சமூகத்தில் ஒன்றிணைக்கவும் அவர்களுக்கு அன்பைப் பரிமாறவும் இந்த அமைப்பைத் தொடங்கினோம். இன்று இந்திய கலாசார அடையாளங்களில் ஒன்றான வண்ண ரங்கோலியை வரைய அவர்களுக்குக் கற்றுத் தந்ததில் மகிழ்ச்சி,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளிநாட்டு ஊழியர் தெய்வ சிகாமணி பாஸ்கரன், “நான் ஓட்டுநராக வேலை செய்கிறேன். பெரும்பாலான நேரம் வேலையிலேயே கழிந்து விடுவதால் அவ்வப்போது இப்படிப் பலரை சந்தித்துப் பேசி, சிரிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது,” என்றார்.

கட்டுமானத் துறையில் பணிபுரியும் பாஸ்கர், 27, “நான் சிங்கப்பூர் வந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. சக ஊழியர்கள் பலருடன் வந்துள்ளேன். அனைவரும் இந்நிகழ்ச்சியில் பாட்டு, நடனம் உள்ளிட்டவற்றைக் கண்டு, கேட்டு மகிழ்ந்தோம்,” என்றார்.

சாரம் கட்டும் பணியில் ஈடுபடும் ராமச்சந்திரன், தன் நிறுவன சக ஊழியர்களோடு கலந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

ஹோப் இனிஷியேடிவ்ஸ் அலையன்ஸ் அமைப்பின் தலைவர் ரெவ் இசக்கியெல் டான், “சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பெரும்பாலும், சிங்கப்பூர் சமூகத்தினருடன் ஒன்றிணைந்து பழக வாய்ப்பு குறைவாகவே இருக்கின்றது. இது ஒரே இரவில் நடந்தேறாது. ஆனாலும் மெதுவாக அதனை ஏற்படுத்தும் நோக்கில்தான் இந்த முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன. பல்வேறு அமைப்புகள் இதற்குப் பங்களிக்கும் வேளையில், எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புகள் எங்களுடன் கைகோத்துச் செயல்படும் என நம்புகிறேன்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!