‘என்னை மன்னிக்கவும், குழந்தை வெளிவருகிறது’: கிராப் காரில் குழந்தையை ஈன்றெடுத்த மாது

பிரசவ வலி ஏற்பட்டவுடன் தனியார் வாடகை காரில் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தார் திருவாட்டி சித்தி நூர் ஷஃபியத்துல், 30.

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தம்முடைய இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்க இதைதான் அவர் செய்தார்.

ஆனால், அவருடைய மூன்றாவது குழந்தையால் காத்திருக்க முடியவில்லை. டிசம்பர் 6ஆம் தேதி மருத்துவமனையை நெருங்கிவிட்ட வேளையில், தனியார் வாடகை காரில் அது பிறந்துவிட்டது.

அந்த ஆண் குழந்தை டிசம்பர் 13ஆம் தேதிதான் பிறக்கும் என தேதி குறிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 6ஆம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக திருவாட்டி ஷஃபியத்துல் மருத்துவமனைக்குச் செல்லவிருந்தார்.

ஆனால், காலை 7.30 மணிக்கு அவர் எழுந்தவுடன் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

திருவாட்டி ஷஃபியத்துலுக்கு இரண்டு வயதிலும் ஒன்றரை வயதிலும் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களைப் பள்ளியில் விடுமாறு தம்முடைய கணவரிடம் கூறிய திருவாட்டி ஷஃபியத்துல், மருத்துவமனைக்குச் செல்ல கிராப் காரை செயலியில் அழைத்தார்.

காலை 9 மணிக்கு கார் வந்தவுடன், சுவா சூ காங்கில் உள்ள தமது வீட்டிலிருந்து கீழே இறங்கிச்செல்ல அவர் சிரமப்பட்டார்.

அந்த 40 நிமிட கார் பயணம் முழுவதும் பரிவுடன் செயல்பட்ட ஓட்டுநர், தம்மைப் பார்த்துக்கொண்டதாக திருவாட்டி ஷஃபியத்துல் நினைவுகூர்ந்தார்.

மருத்துவமனையை நெருங்கிவிட்ட நிலையில், காரில் குழந்தை பிறக்கப்போவதை அவர் உணர்ந்தார்.

“என்னை மன்னிக்கவும், குழந்தை வெளிவருகிறது,” என்று ஓட்டுநரிடம் திருவாட்டி ஷஃபியத்துல் கூறினார்.

செய்வதறியாது பதற்றமடைந்த திருவாட்டி ஷஃபியத்துல், கார் கதவுக் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டார். கருப்பையில் பனிக்குடம் உடைந்ததும் குழந்தை பிறந்துவிட்டது.

“குழந்தை இவ்வளவு விரைவில் பிறந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், நான் கிராப் காரில் மருத்துவமனைக்குச் சென்ற பிறகுதான் என்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்தது.

“எனவே, இப்போதும் அதேபோலதான் நடக்கும் என நினைத்தேன். மருத்துவமனையைச் சென்றடைந்தவுடன், குழந்தையை என் கையில் வைத்திருந்தேன். தொப்புள்கொடி ஏற்கெனவே தொங்கிக்கொண்டிருந்தது,” என்று திருவாட்டி ஷஃபியத்துல் நினைவுகூர்ந்தார்.

மருத்துவமனையைச் சென்றடைந்ததும் ஓட்டுநர் உடனடியாக மற்றவர்களிடம் உதவி நாடினார். தம் கணவரைத் தொலைப்பேசியில் அழைக்குமாறு அங்கிருந்த ஒருவரிடம் திருவாட்டி ஷஃபியத்துல் கேட்டுக்கொண்டார்.

ஏற்கெனவே மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்த கணவருக்கு, திருவாட்டி ஷஃபியத்துல் காரில் குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு ஆச்சரியமடைந்தார்.

காருக்குச் சென்ற தாதியரும் மருத்துவர்களும் குழந்தையைப் போர்த்தி தொப்புள்கொடியை வெட்டி எடுத்தனர். பிரசவ அறைக்குக் கொண்டுசெல்லப்பட்ட திருவாட்டி ஷஃபியத்துலுக்கு கிராப் ஓட்டுநருக்கு நன்றி தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

$30 சவாரிக் கட்டணத்துக்கு மேலாக கிராப் செயலியில் ஓட்டுநருக்கு $20 ‘டிப்ஸ்’ வழங்கிய திருவாட்டி ஷஃபியத்துல், அவருக்கு நல்ல மதிப்பீடு வழங்கி செய்தியைப் பதிவிட்டார்.

“அவருக்கு அதிர்ச்சியான அனுபவத்தைத் தந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, நிதானத்துடன் இருந்ததற்காக நன்றியும் கூறினேன்.

“பிறகு என்னைத் தொடர்புகொண்ட கிராப் நிறுவனம், இச்செய்தி ஓட்டுநரிடம் கொண்டுசேர்க்கப்படும் எனக் குறிப்பிட்டது,” என்றார் திருவாட்டி ஷஃபியத்துல்.

அடுத்த நாள் டிசம்பர் 7ஆம் தேதி திருவாட்டி ஷஃபியத்துல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். குழந்தை இன்னும் மருத்துவமனையில் உள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் டிசம்பர் 8ஆம் தேதிவரை இருந்த அக்குழந்தை, உடல்நிலை சீரானதும் சிறப்புப் பராமரிப்பு அறைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், திருவாட்டி ஷஃபியத்துலிடம் கிராப் நிறுவனம் பேசியதாகக் குறிப்பிட்ட அதன் பேச்சாளர், “தாயும் சேயும் நலமாக இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் ஓட்டுநரின் கனிவன்புமிக்க உதவிக்காக அவருக்கு எங்கள் பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!