தேசிய சின்னங்களின் பயன்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்படும்

தவறான பயன்பாட்டைத் தடுக்க கூடுதல் பாதுகாப்புகள்

தேசிய சின்னங்கள் சட்டமும் அதன் விதிமுறைகளும் ஆகஸ்ட் முதல் தேதி நடப்புக்கு வரும்போது, தேசியக் கொடியின் பயன்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு திங்கட்கிழமை அறிவித்தது.

தேசிய சின்னங்கள் தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்க வலுவான பாதுகாப்புகளும் நடப்புக்கு வரும் என்று அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரர்களும் தொழில் நிறுவனங்களும் தேசியக் கொடியின் இரு பயன்பாடுகளுக்கு கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரிடமிருந்து அனுமதி பெற வேண்டியதில்லை:

தேசிய தின காலகட்டமான ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை வர்த்தக அல்லது அலங்காரப் பயன்பாட்டுக்கு தேசியக் கொடியை அல்லது அதன் படத்தைப் பயன்படுத்துவதற்கு

வர்த்தகமல்லாத நோக்கத்திற்காக ஆண்டு முழுவதும் தேசியக் கொடியை அல்லது அதன் படத்தை ஆடைகளில் அச்சிடுவதற்கு.

தேசியக் கொடியைப் பயன்படுத்தி தேசியப் பெருமையை வெளிப்படுத்த இந்த மாற்றம் ஊக்குவிக்கும். ஆனால், கொடியும் அதன் படமும் மரியாதைக்குரிய முறையில் பயன்படுத்தப்படவேண்டும்.

மற்றொரு முக்கிய மாற்றமாக, தேசிய தின காலகட்டத்திற்கு அப்பாற்பட்ட காலங்களிலும் தேசியக் கொடியைக் காட்சிப்படுத்த கலாசார, சமூக, இளையர் அமைச்சர் அனுமதி அளிக்கக்கூடும்.

குறிப்பிட்ட காலகட்டத்திற்கு, கொடிக்கம்பமும் இரவில் ஒளியூட்டலும் இல்லாமல் தேசியக் கொடியைக் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, ஒரு விளையாட்டுச் சாதனையை தேசிய அளவில் கொண்டாடுவதற்கு, வீடுகளில் கொடியைப் பறக்கவிட ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை அமைச்சர் அறிவிக்கலாம்.

“தேசிய தினத்துக்கு அப்பாற்பட்ட தேசிய முக்கியத்துவம் மிகுந்த தருணங்களில், தேசியப் பெருமையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில், வீடுகளில் தேசியக் கொடியைப் பறக்கவிட சிங்கப்பூரர்கள் அனுமதி கேட்டதைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது,” என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் மற்ற தேசிய, அதிபர் சின்னங்களைத் தகுந்த விதத்தில் பயன்படுத்த ஊக்குவிக்கும் கட்டமைப்பையும் சட்டம் வழங்குகிறது.

தேசியக் கொடியுடன், தேசிய கீதம், தேசியப் பற்றுறுதி, தேசிய சின்னம், சிங்கத் தலை சின்னம், தேசிய மலர், பொது முத்திரை ஆகியவையும் தேசிய சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்கீழ், அதிபர் சின்னம், அதிபர் முத்திரை ஆகியவையும் அதிபர் சின்னங்களாக அங்கீகரிக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் சின்னங்கள், கொடி, தேசிய கீதம் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம் நடப்புக்கு வருகிறது.

தேசிய, அதிபர் சின்னங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாக்க, புதிய சட்டத்தில் வலுவான பாதுகாப்புகள் உள்ளன.

தேசிய சின்னங்களின் மின்பதிப்புகளையும் மறுபதிப்புகளையும் உரிய மரியாதையுடன் பயன்படுத்த புதிய விதிமுறைகள் நடப்புக்கு வருகின்றன.

எடுத்துக்காட்டாக, மாற்றியமைத்த அல்லது சீர்குலைந்த வடிவிலான தேசியக் கொடியின் தயாரிப்பும் காட்சிப்படுத்தலும் தடை செய்யப்பட்டுள்ளன. தேசிய சின்னம், அதிபர் சின்னம் ஆகிய வடிவங்களை சீர்குலைக்கவோ மாற்றியமைக்கவோ அனுமதிக்கப்படாது.

தேசிய கீதத்தை வர்த்தக நோக்கங்களுக்குப் பயன்படுத்த விரும்புவோர் கலாசார, சமூக, இளையர் அமைச்சரிடம் அனுமதி பெறவேண்டும். அனைத்து வகையான ஒலிப்பதிவுகளுக்கும் தேசிய கீதப் பயன்பாட்டு விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தேசியப் பற்றுறுதி எப்போதுமே நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றில் முழுமையாக வாசிக்கப்படவேண்டும். அமைச்சரின் அனுமதியின்றி அதனை வர்த்தக நோக்கங்களுக்குப் பயன்படுத்த முடியாது.

தேசிய சின்னங்களின் பயன்பாடு தொடர்பில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட யோசனைகளும் கருத்துகளும் தொடர்ந்து ஆராயப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!