வெற்றிகளைக் குவித்து வரலாற்றில் தடம் பதிக்கும் சாந்தி பெரேரா

தொடக்கநிலை மூன்றில் பயிலும் போது பள்ளி விளையாட்டு தினத்தன்று ஓட்டப்பந்தயப் போட்டியில் தன் அக்கா வேலரி பெரேரா ஓடுவதைக் கண்டு தானும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கியது வெரோனிகா சாந்தி பெரேராவின் வரலாறு படைக்கும் திடல்தடப் பயணம்.

அன்றிலிருந்து ஓடத் தொடங்கிய சாந்தி, வேகம் குறையாமல் வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

எதிர்பாராத வெற்றிகள்

“அண்மையில் பெற்ற வெற்றிகளை நினைத்து இன்னும் வியப்பில்தான் இருக்கிறேன். நிச்சயமாக என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். இந்த நிலைக்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணம் என் குடும்பத்தினர், பயிற்றுவிப்பாளர் மற்றும் நண்பர்கள்தான். அவர்களின் ஆதரவு இன்றி என் வெற்றிகள் சாத்தியம் இல்லை,” என்று நன்றி கூறினார் சாந்தி.

அனைத்துலக அளவில் திடல்தட உலகின் பிரபலங்களுடன் போட்டியிட வாய்ப்புகள் பெற்றதே மாபெரும் வெற்றி என கூறுகிறார் சாந்தி. அதையும் தாண்டி, ஒன்றன் பின் ஒன்றாக, தொடர்ந்து நடைபெற்ற அப்போட்டிகளில் சிறப்பாக ஓடியது கூடுதல் மன நிறைவு அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

மன உறுதிக்கு ஒரு சோதனை

பல சுற்றுகள், பல போட்டிகள் என ஓடிக்கொண்டே இருக்கிறார் சாந்தி பெரேரா. தொடர்ந்து சிறப்பாக ஓடும் அவர், “போட்டிகள் என்றாலே இவ்வாறு தான் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மன உறுதியை வளர்த்துக்கொள்வது அவசியம்,” என்று கூறினார்.

பிற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு, தன்னைப் பரிசீலித்து, அதற்கு ஏற்றவாறு உடலையும் மனதையும் தயார் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் சாந்தி.

“ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது எளிதானது இல்லை. ஒவ்வொரு நல்ல முடிவும் பயனளிக்கும் என்பதை உணர்ந்து ஒரு முழுமையான வீராங்கனையாக வளர சற்று நாள் எடுத்து, ஒலிம்பிக் அளவில் போட்டியிட ஆசை கொண்டால் அவர்கள் போன்று ஒழுக்கத்தையும் பின்பற்ற ஆசைப்பட வேண்டும்,” என்றார் சாந்தி.

இடைவிடாது நடைபெறும் போட்டிச் சுற்றுகளில் தாக்குப்பிடிக்க மன உறுதியை மேம்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகிறது என்று குறிப்பிடுகிறார் இவர்.

முயற்சியைப் பொறுத்தது வளர்ச்சி

“ஒரு நாளில் இரண்டு முறை பயிற்சிகளில் ஈடுபடுவேன். காலை பயிற்சி நேரத்தில், ஓடுதளத்திற்கோ உடற்பயிற்சிக் கூடத்திற்கோ செல்வேன். அதன் பிறகு சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு மாலைநேரப் பயிற்சிக்கு செல்வேன். கிட்டதட்ட 3, 4 மணி நேரம் வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்,” என்று சாந்தி விளக்கினார்.

நாள்களைக் கவனமாகத் திட்டமிட்டு அதிக சோர்வு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது முக்கியம் என்று கூறும் இவர், பயிற்சியில் ஈடுபடும்போது அதில் முழுக் கவனத்தையும் செலுத்தி எந்த ஒரு கவனச்சிதறலும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறார்.

“ஒவ்வொரு பயிற்சி வகுப்பின்போதும் எவ்வாறு மேலும் சிறப்பாக செயல்படலாம் என்பதை ஆராய்வேன். போட்டி நெருங்கும் சமயத்தில் இதர வேலைகளுக்கு இடம் தருவதில்லை. ஏறத்தாழ இரு வாரங்கள் இருக்கையில் முழுமையாகப் பயிற்சி செய்வதிலும் ஓய்வு எடுப்பதிலும் ஈடுபட்டிருப்பேன்,” என்று பகிர்ந்துகொண்டார் சாந்தி.

எனவே, போட்டிகள் நெருங்கும் நாள்களில், மனதை ஒருநிலைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். நீண்ட நாட்களுக்கு இடம்பெறும் போட்டிச் சுற்றுகளில் தாக்குப்பிடிக்க எதிர்மறையான எண்ணங்கள், கருத்துகள் அனைத்தையும் தன்னை பாதிக்காது இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.

நீண்ட பயணம், நிலையான நம்பிக்கை

தொடக்கநிலைப் பள்ளி காலத்திலிருந்தே ஓடி, ஓடி பதக்கங்கள் பல பெற்று வருகிறார் சாந்தி. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பள்ளியைப் பிரதிநிதித்து ஓடியதிலிருந்து தற்போது உலக அளவில் போட்டிகளில் தேசத்தைப் பிரதிநிதிக்கும் நிலை வரை நீண்டதூரம் கடந்து வந்துள்ளார்.

“எனக்குப் பிடித்த ஒன்றாகவும் என்னால் சிறப்பாக செய்யமுடியும் ஒன்றாகவும் ஒட்டப்பந்தயங்கள் அமைந்தன. அது எனக்கு மகிழ்ச்சி அளித்ததால் தொடர்ந்து அதில் ஈடுபட்டேன். பின்பு அதையே செய்ததால் அதில் திறன்கள் வளர என்னைத் தேடி வாய்ப்புகள் வந்தன. வந்த வாய்ப்புகளை தவற விடாது பற்றிக்கொண்டேன்,” என தெரிவித்தார் சாந்தி.

முன்னுதாரணமாக இருப்பதில் மகிழ்ச்சி

சிங்கப்பூர் வரலாற்றில் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகப் போற்றப்படும் திடல்தட வீராங்கனையான சாந்தி மேற்கொண்ட சாதனைகளும் பயணமும் மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக உள்ளன.

“இவ்வளவு அங்கீகாரம் கிடைத்ததில் பெருமையாக உள்ளது. என் செயலில் முழுமனதுடன் ஈடுபடுவதையே என் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். இது பிறருக்கு உதவியாக அமைவது மன நிறைவு அளிக்கிறது,” என்று கூறினார் சாந்தி.

“பட்டப்படிப்பு பெரும் காலத்தில் அவ்வளவு ஆர்வம் இன்றி ஒரு துறையை தேர்ந்தெடுத்திருந்தேன். அந்தச் சமயத்தில், திடலில் பெரிதாக எதுவும் முன்னேற்றம் இல்லை. அந்த காலம் வாழ்வில் அடிமட்டத்தில் இருந்தது போன்ற உணர்வை தந்தது. எதிலும் பிடிப்பினை இன்றி தன்னம்பிக்கையையும் வாழ்வின் பயனையும் இழந்துவிட்டதுபோல உணர்ந்தேன்,” என்று பகிர்ந்துகொண்டார் சாந்தி.

ஒரு கட்டத்திற்குப் பிறகு, தன் எண்ணங்களால் சோர்வடைந்த சாந்தி, தான் மாறவேண்டும் என்று உணர்ந்து எதிர்மறை எண்ணங்களை ஒழிக்க முடிவெடுத்தார்.

“பொதுவாக, இளையர்களாக நாம் எதிர்நோக்கும் மன உளைச்சல் பிறரின் எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட சிரமப்படுவதால் எழுகின்றன. எனவே, எந்த செயலில் ஈடுபட்டாலும், பிறரின் எதிர்பார்ப்புகளைக் காரணமாக கொண்டு செய்யாமல் நமக்காக உழைப்பதுதான் மகிழ்ச்சியான தருணங்களைத் தரும்,” என்றார் அவர்.

ஆடை, அலங்காரம் அளிக்கும் மன அமைதி

சிறு பருவத்திலிருந்தே ஆடை, அலங்காரத்தில் ஆர்வம் கொண்டுள்ளதாகக் கூறினார் சாந்தி. “போட்டி தொடங்குவதற்கு முன் சற்று நேரம் ஒதுக்கி முக ஒப்பனை செய்வது பதற்றமான மனதை அமைதிப்படுத்தும். பாடல் கேட்டுக்கொண்டே முக ஒப்பனை செய்து போட்டிக்கு என்னைத் தயார்ப் படுத்திக்கொள்வேன்.

“ஒட்டப் பந்தயங்களின் மூலம் என் நீண்ட நாள் ஆர்வமான ஆடை அலங்காரத்திலும் ஈடுபட முடிந்தது,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் சாந்தி.

எதிர்கால இலக்குகள்

எதிர்வரும் போட்டிகளிலும் தொடர்ந்து தனது முழு முயற்சியைச் செலுத்தி சாதிக்கும் வேட்கையுடன் இருக்கிறார் சாந்தி.

“சவால்கள் எதுவாயினும் அவற்றைக் கடந்து வந்தபின் கற்றுக்கொண்ட பாடங்கள் பல இருக்கும். நமக்கு துன்பம் அளித்தாலும் வாழ்வின் சரிவுகளும் பிரச்சினைகளும்தான் நம்மை வலிமையாக்குகின்றன. நம்மால் முடிந்த அளவு மீள்திறனுடன் செயல்பட வேண்டும். தோல்வியைக் கண்டு அஞ்சினால் வெற்றிப் பாதையில் செல்வது கடினம் என்பதை இளம் சிங்கப்பூரர்கள் நினைவில் கொள்ளவேண்டும்,” என்று வலியுறுத்தினார் சாந்தி.

சிங்கப்பூரின் வரலாற்றில் அசைக்க முடியாத இடம்பிடித்துள்ள சாந்தி பெரேரா, தொடர்ந்து பல வெற்றிகளையும் தேசத்திற்கு பெருமையையும் பெற்றுத் தரும் நம்பிக்கையுடன் வேகம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!