அஞ்சல் கட்டணங்களை உயர்த்த சிங்போஸ்ட் அனுமதிக்கப்படலாம்

இக்காலச் சூழலில் கடிதங்களுக்குப் பதிலாகப் பலரும் இணையம்வழி தொடர்பு கொள்வதால், சிங்கப்பூர் அஞ்சலகம் (சிங்போஸ்ட்) வருங்காலத்தில் ‘அஞ்சல் கட்டணத் திருத்தங்களை அறிமுகப்படுத்த’ அரசாங்கம் அனுமதிக்கக்கூடும் என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியெட் ஹாவ் புதன்கிழமை தெரிவித்தார்.

அஞ்சல் தொழிலின் செலவைக் கட்டணத் திருத்தங்கள் மேலும் அதிகமாக உள்ளடக்கும் என்றும், அரசாங்கத்தின் நேரடி நிதியளிப்பின்றி சிங்போஸ்ட் தொடர்ந்து செயல்படுவதற்குப் ‘போதுமானதாக’ இருக்கும் என்றும் திரு டான் நாடாளுமன்றத்தில் கூறினார்.

சிங்போஸ்ட்டின் உள்நாட்டு அஞ்சல், பொட்டலத் தொழிலைக் கட்டிக்காக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று திரு சியா கியன் பெங் (மரீன் பரேட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்) எழுப்பிய கேள்விக்குத் திரு டான் பதிலளித்தார்.

சிங்கப்பூரர்களுக்கு அஞ்சல் சேவைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் திரு சியா கூடுதல் விவரம் கேட்டிருந்தார்.

திரு சியாவுக்குப் பதில் அளித்த திரு டான், இவ்வாண்டு ஜனவரி மாதம் நடப்புக்கு வந்த ‘சிறிய கட்டண உயர்வு’ தவிர, 2014 முதல் உள்நாட்டு அஞ்சல் கட்டணங்கள் பெரும்பாலும் மாற்றமின்றி நீடித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

பொருள், சேவை வரி உயர்வு, மனிதவள, எரிபொருள், மின்சார விலை அதிகரிப்புகள் ஆகியவற்றுக்கு ஏற்ப, அஞ்சல், பொட்டல விநியோகக் கட்டணங்களை சிங்போஸ்ட் உயர்த்தியது.

சிங்போஸ்ட் பொது அஞ்சல் சேவை உரிமம் பெற்றிருக்கும் அதே சமயத்தில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட தனியார் நிறுவனமாகவும் இருப்பதால், சாத்தியமான தொழில் முறையை நிலைநாட்டவேண்டிய கடமை இருப்பதாகத் திரு டான் குறிப்பிட்டார். தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் சிங்போஸ்ட்டுடன் சேர்ந்து அதன் செலவுகளையும் செயல்பாடுகளையும் மறுஆய்வு செய்யும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்நாட்டுக் கடிதங்களின் எண்ணிக்கை 2015 நிதியாண்டில் சுமார் 490 மில்லியனாக இருந்தது. ஆனால், 2022 நிதியாண்டில் 260 மில்லியனுக்குக் குறைந்தது.

பெரும்பாலான அரசாங்க அமைப்புகளும் இணையம்வழி குடிமக்களுடன் தொடர்புகொள்ளத் தொடங்கிவிட்டதால் இந்தச் சரிவு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சல் பயன்பாட்டாளர்களில் 80 விழுக்காட்டுக்கு மேற்பட்டவை தொழில் நிறுவனங்கள். சராசரி வாடிக்கையாளர் மாதத்திற்கு ஒரு கடிதத்திற்கும் குறைவாகவே அஞ்சலில் அனுப்புவதாகத் திரு டான் குறிப்பிட்டார்.

“இந்தச் சரிவினால், தற்போதைய செயல்முறையையும் அஞ்சல் கட்டணங்களையும் கொண்டு தொடர்ந்து தொழில் நடத்துவது சிங்போஸ்ட்டுக்குச் சவால்மிக்கதாக இருக்கும்,” என்றார் அவர்.

சிங்போஸ்ட்டின் அஞ்சல், பொட்டலச் சேவைப் பிரிவு, முதல்முறையாக நட்டம் ஏற்பட்டிருப்பதாக மே மாதம் அறிவித்தது. கடந்த நிதியாண்டில் இப்பிரிவின் மொத்த நட்டம் $15.9 மில்லியன். சென்ற ஆண்டு $24.9 மில்லியன் லாபம் கிடைத்திருந்தது.

மார்ச் மாதம் முடிவடைந்த நிதியாண்டில் சிங்போஸ்ட்டின் நிகர லாபம் சென்ற ஆண்டைவிட 70.3 விழுக்காடு குறைந்து $24.7 மில்லியனாக இருந்தது. அஞ்சல், பொட்டலப் பிரிவே இதற்கு முக்கியக் காரணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!