சிங்கப்பூரின் திரையுலகக் கலாசாரத்துக்கு தனித்துவமான அடையாளம் உள்ளது. புத்தாக்கச் சிந்தனை, மாறுபட்ட கதைக்களம் போன்றவை சிங்கப்பூர்த் திரைப்பட ஆளுமைகள் பலரையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன.

உள்ளூர் திரைத்துறையில் ஒரு தனித்துவ நட்சத்திரம்

இளவயதிலிருந்தே திரைப்படங்கள்மீது நாட்டம் கொண்டுள்ளவர் 28 வயதான கெவின் வில்லியம். அந்த வேட்கை 11 ஆண்டுகால உழைப்பின் பிறகு இன்று வேரூன்றி நிற்க, தனது தொடக்கப் பாதையை தமிழ் முரசு நாளிதழிடம் நினைவுகூர்ந்தார் கெவின்.

“என் முதல் படத்தை இயக்க கைத்தொலைபேசியைத்தான் பயன்படுத்தினேன். அப்போது எனக்கு 16 வயதுதான். அனுபவம் ஏதும் இல்லாவிடினும் என் நண்பர் அளித்த ஊக்கத்தினால் அந்த முயற்சியை மேற்கொண்டேன்,” என்கிறார் கெவின்.

18 வயதில் கெவின், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் திரைத்துறை தொடர்பான ஈராண்டுக் கல்வியைப் பயின்றார். அதேநேரத்தில், அனுபவம் பெறவேண்டி, உள்ளூர்த் தயாரிப்பு நிறுவனங்கள் சிலவற்றில் பணிபுரிந்தார். 

“தொடர்ந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதா நானே புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவதா என்ற கேள்விகள் என்னுள் எழ ஆரம்பித்தன. 

“எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்த ஆசைப்பட்டேன். என் கலைத்திறனைக் கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை,” என்றார் கெவின்.

அந்த எண்ணத்திலிருந்து பிறந்தது ‘ஃபிலிமோஹாலிக் பிக்சர்ஸ்’ எனும் அவரது திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். பதின்ம வயதான கெவினுக்கு அவரது திரைப்பட ஆர்வம் ஓர் ஆயுதமாக இருந்தது. 

“நான் சிறு வயதிலிருந்தே திரில்லர் ரகத் திரைப்படங்களை அதிகம் காண்பேன். புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநர் செல்வராகவன், உள்ளூர் இயக்குநர்கள் அப்பாஸ் அக்பர் மற்றும் கண்ணன் விஜயகுமார் கதை அமைப்பில் உருவான  திரைப்படங்களை ஒரு முன்மாதிரியாகக் கருதி, அவர்கள் தங்கள் இயக்குநர் பயணத்தில் பயன்படுத்திய உத்திகளைப் பார்த்துப் பெரிதும் கற்றுக்கொண்டேன்,” என்றார் கெவின்.

2016ஆம் ஆண்டு ஃபிலிமோஹாலிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்தது ‘யோகி’ எனும் முழுநீளத் திரைப்படம். தனது திரைக் கனவுகள் நனவான முதல் மைல்கல்லை கெவின் இன்றுவரை மறக்கவில்லை. 

“யோகியின் முதல் காட்சி ஜி வி ஈசூன் திரையரங்குகளில் இடம்பெற்றது. முதல் நாளன்று எதிர்பாரா வகையில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டபோதிலும், என் சக குழுவினர், நண்பர்கள், உற்றார், உறவினர் அனைவரும் அளித்த ஊக்கமும் ஆரவாரமும் எனக்கு உறுதுணையாக இருந்தன. வியக்கத்தக்க வகையில் இரண்டாம் நாள் காட்சிக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன,” என்று நினைவுகூர்ந்தார் கெவின்.

அப்போது கெவினுக்கு வயது 20. இந்த வெற்றியால் ஏற்பட்ட உற்சாகம் அவருக்குள் ஒரு தீப்பிழம்புபோல் கனன்றுகொண்டே இருந்தது. மேலும் பல முழுநீளத் திரைப்படங்களைத் தயாரித்து இயக்கும் வேகம் பிறந்தது. இருப்பினும், சிறு வீழ்ச்சிகளையும் அவர் எதிர்கொண்டார்.  

“யோகிக்குப் பிறகு நான் மற்றொரு முழுநீளப் படத்தயாரிப்பில் ஈடுபட்டேன். ஆனால், அது நினைத்ததுபோல் வராததால் அதைக் கைவிடும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டது,” என்றார் கெவின்.

இருப்பினும் மனம் தளராது, தனது பிழைகளிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டார் கெவின். புது முகங்கள், புதுத் தயாரிப்பாளர், புதிதாகக் கற்ற அம்சங்களின் துணையுடன் 2017ஆம் ஆண்டில் வெளிவந்தது ‘எந்தன் உயிர்த் தோழி’ எனும் இரண்டாவது முழுநீளத் திரைப்படம். 

“நான் எதிர்பார்த்ததைப்போல் அந்தப் படம் நன்றாக இல்லை என்பதை ஒப்புக்கொள்வேன். ஆனால், அந்தச் சிறு சறுக்கல் எனக்குப் பெரிய பாடத்தைக் கற்பித்துள்ளது என்று திடமாக நம்பினேன். துணிச்சலுடன் கால்பதித்த இந்தத் துறையில் நான் சிறப்பேனா, வேறொரு பணியில் ஈடுபடலாமா என்ற ஐயங்கள் தொடர்ந்து என்னை வாட்டிய போதிலும், இந்தப் பயணத்தைத் தொடர்வதில் பிடிவாதமாக இருந்தேன். அதற்கான வாய்ப்புகளும் எனக்கு அமையத் தொடங்கின,” என்றார் அவர்.

முன்னர் செய்த பிழைகளை மீண்டும் செய்யக்கூடாது என்று கெவின் உறுதிபூண்டார். அவர் தனது அடிப்படை ராணுவப் பயிற்சியை நிறைவு செய்த காலத்தில் பிறந்தது ‘யோகி - இரண்டாம் பாகம்’ தொடர்பான ஆர்வம். கெவின் மற்றொருமுறை வாகை சூட ஆயத்தமானார். 

“தற்போதைய தலைமுறையினர் பலரும் சமூக ஊடகங்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு திரைப்படம், ஒரு கதை, அல்லது கலை தொடர்பான எதுவாயினும், அதை முறையாக சந்தைப்படுத்துவது மிக அவசியம் என்று புரிந்துகொண்டேன். சமூக ஊடகங்கள் அதில் பெரும்பங்கு வகிக்கின்றன,” என்கிறார் கெவின்.

‘யோகி - இரண்டாம் பாகம்’ எனும் மூன்றாவது முழுநீளப் படப்பிடிப்பு தொடங்குமுன் அது சமூக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டது. விளம்பரங்கள், படத்தின் ‘டீசர்’, விளம்பரத் தட்டிகள் போன்றவை பரவலாகச் சந்தைப்படுத்தப்பட்டன. படப்பிடிப்பு தொடங்கி, படத் தொகுப்பாக்கம் வரையில் உரக்க ஒலித்தது அந்தத் திரைப்படத்தின் குரல்.

“எங்கள் கடின உழைப்பு, உள்ளூர்த் திரைத்துறையில் பெயர்பெற்ற பிரபலங்கள் முதல் அந்நியர்கள் வரை எட்டியது. இம்முறை பிரம்மாண்ட தயாரிப்புக் குழு, நட்புக்காகத் திரையில் தோன்றிய அனுபவம் மிக்க நடிகர்கள் சிலர், வெளிநாட்டில் இருந்து கரம் கொடுத்த கலைஞர்கள் பலரும் இதில் என்னுடன் இணைந்தனர்,” என்கிறார் இவர்.

‘யோகி - இரண்டாம் பாகம்’ முதல் காட்சி 2019ஆம் ஆண்டு கார்னிவல் சினிமாஸ் திரையரங்கத்தில் வெகு விமரிசையாக திரையிடப்பட்டது. மக்கள் கூட்டம் அலைமோதிய தருணத்தில், சிக்கல்களை விரைவில் கடந்து, மீண்டும் வெற்றிக் கனியைச் சுவைத்தார் கெவின். உன்னதமாக சந்தைப்படுத்துவதன் அவசியத்தைப் புரிந்துகொண்டு, தமது சொந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் திட்டமிடத் தொடங்கினார்.

“மற்றவர்களின் மாறுபட்ட கருத்துகளைப் பொருட்படுத்தாது, நமது கலையையும் உழைப்பையும் தூக்கிப்பிடிக்க நம் குரல் உரத்து ஒலிக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்படி உயர்வது?” என்று வினவினார் கெவின். 

அவரது கலைத்திறன் மேலோங்க அண்மையில் உருவானது ‘தி குவிக் எய்ட்’ எனும் எட்டு தொடர் குறும்படங்கள். சமூக ஊடகங்களில் தற்போது சிறப்பாகப் பேசப்படும் இந்தத் தொடரின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இடம்பெற்ற எட்டுப் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு நிமிட நீளம் கொண்டவை.

“ஒரு தரமான முழுநீளத் திரைப்படத்தில் மூன்று கட்ட கதை அமைப்புகள் உள்ளன. அதை எப்படி ஒரு நிமிடத்திற்குள் கொண்டுவருவது என்பது நான் எதிர்கொண்ட சவால்,” என்கிறார் கெவின்.  

கடந்த 11 ஆண்டுகளில் இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் எனக் கலைத்துறையில் பல தடங்களைப் பதித்துள்ளார் இவர். 28 தயாரிப்புகளை நிர்வகித்த கெவின், தொடர்ந்து தனது முயற்சிகளை விவேகத்துடன் மேற்கொள்கிறார்.

“சிங்கப்பூரிலும் திரைப்படங்கள் தழைத்தோங்குவதை மக்கள் அடையாளம் காண வேண்டும். தனிப்பட்ட முறையில் செயல்படும் நம்மில் பலருக்குப் புதுமையான கதை குறித்த சிந்தனைகள், கதைக் கருக்கள் இருந்தாலும், அவற்றைப் பயிரிட நாம் பெரிதும் அச்சப்படுவதுண்டு. அதைத் தவிர்த்து, நம்பிக்கையுடன் இயங்க முற்பட வேண்டும். வளர்ச்சிக்கான அடித்தளத்தின் முதல் பாத சுவடுகள் நம்முடையவையாக இருக்கவேண்டும்,” என்று வலியுறுத்தினார் கெவின்.

சிங்கப்பூர்த் திரைத்துறையில் ஒரு தனி முத்திரை பதிக்க பலர் இடைவிடாது உழைக்கின்றனர். அதில் பலமுறை வெற்றிக்கொடியை நாட்டிய இந்தத் திரைக்கலைஞரின் உத்வேகத்திற்கும் ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கும் எல்லையே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!