அருகிவரும் உள்ளூர்ப் பறவையினங்கள்

சிங்கப்பூர் பறவைகள் திட்டம் 2023ஆம் ஆண்டின் புதுப்பிக்கப்பட்ட பறவைகள் பட்டியலை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது.

பறவைகள், சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாக உள்ளது. சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட உள்ளூர் பறவையினங்கள் உள்ளன. உள்ளூர் பறவை இனம் என்பது முற்றிலும் இயற்கையாக, மனிதத் தலையீடு இல்லாமல் ஒரு பகுதியில் காலம் காலமாக வாழ்ந்து வரும் உயிரினம்.

சிங்கப்பூருக்கு 1920களில் செல்லப் பறவையாக எடுத்து வரப்பட்டு இன்று பெருமளவில் காணப்படும் ஜவான் மைனா, இளஞ்சிவப்பு கழுத்து கொண்ட பச்சைப் புறா, வெளிர் மஞ்சள் நிறமுடைய புல்புல் பறவை, அழகிய மஞ்சள் நிறத்தில் கரும்புள்ளிகளை உடைய ஓரியோல் பறவை, கருஞ்சிவப்பு சூரியப் பறவை என 400க்கும் மேற்பட்ட வண்ணமயமான பறவைகள் பறந்து திரியும் நகரம் சிங்கப்பூர்.

இவற்றின் எண்ணிக்கையையும், வாழ்க்கை போக்கையும் கருத்தில்கொண்டு சிங்கப்பூர் பறவைகள் திட்டத்தில் உள்ள நிபுணர் குழு இவற்றை பல்வேறு வகைகளாகப் பிரித்து பட்டியலிட்டுள்ளது. இந்தப் பட்டியல் ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்படும்.

பாதிக்கப்படக்கூடிய இனங்கள்

‘ஆசிய தேவதை’ எனப்படும் நீலப்பறவை - ஜெலுடாங் டவர் சிங்கப்பூர் பறவைகள் திட்டம் 

அருகிவரும் நிலைக்கான வரம்பை நெருங்கும் 20க்கும் மேற்பட்ட இனங்களைப் பாதிக்கப்படக்கூடிய இனங்கள் எனக் குறிப்பிடுகிறது சிங்கப்பூர் பறவைகள் திட்டம்.

‘ஆசிய தேவதை’ எனப்படும் நீலப்பறவை (Asian fairy-bluebird) அதில் ஒன்று. 24.5-26.5 செ.மீ அளவே உள்ள இப்பறவை பருமனாக இருக்கும். பிரகாசமான சிவப்பு கருவிழிகள் கொண்ட இவற்றில், ஆண் பறவையின் கருமையான பளபளக்கும் உடலில் நீல மேல் பகுதிகள் இருக்கும். பெண் பறவையின் உடலில் டர்க்கைஸ் எனப்படும் மந்தமான நீல நிறம் இருக்கும்.

சிங்கப்பூரில் புக்கிட் பாத்தோக் இயற்கை பூங்கா, புக்கிட் தீமா இயற்கை காப்பகம் உள்ளிட்ட பல பகுதிகளில் காணப்பட்டு வந்த இப்பறவை, இவ்வாண்டு எண்ணிக்கையில் குறைந்து பாதிக்கப்படக்கூடிய இனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அருகிவரும் இனங்கள்

பர்பிள் ஹெரான் - ஜப்பானிய தோட்டம் சிங்கப்பூர் பறவைகள் திட்டம் 

கடந்த மூன்று தலைமுறைகளில் அல்லது பத்தாண்டுகளில் அதிகபட்சமாக 30 விழுக்காடு எண்ணிக்கை குறைந்த இனங்கள் அருகிவரும் இனங்கள் என்று பட்டியலிடப்படும்.

ஏறத்தாழ 15 இனங்கள் அருகி வரும் இனங்கள் பட்டியலில் உள்ள நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு வரை 180,000-380,000 எண்ணிக்கையில் காணப்பட்ட சிங்கப்பூரின் பூர்விகப் பறவையான ‘பர்பிள் ஹெரான்’ (Purple Heron) ஜூன் 2023ல் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தொடங்கி அனைத்து கிழக்காசிய நாடுகளிலும் காணப்படும் இப்பறவை தலை மற்றும் கழுத்தில் தடிமனான கருப்பு கோடுகளுடன், சாம்பல் நிற உடல், மஞ்சள் நிற கால்கள் என வண்ணமயமானவை.

பெரும்பாலும் அடர்ந்த தாவரங்களில் மறைந்திருக்கும் இப்பறவை நன்கு வளர்ந்த நன்னீர் ஈரநிலங்கள், சதுப்பு நிலங்கள், ஏரிகளில் வாழும் தன்மையுடைய இவை, பெரும்பாலும் புலாவ் உபின், பீஷான் பூங்கா பகுதிகளில் தென்படுகிறது.

ஆபத்தான நிலையில் உள்ள இனங்கள்

ஸ்பாட்டட் வுட் ஔல் - பாசிர் ரிஸ் பூங்கா சிங்கப்பூர் பறவைகள் திட்டம் 

மூன்று தலைமுறைகள் அல்லது பத்தாண்டுகளில் 50 விழுக்காடுக்கும் மேற்பட்ட அளவில் குறையும் எண்ணிக்கை கொண்ட பறவை இனங்கள் ஆபத்தான நிலையில் உள்ள இனங்கள் என்று அறியப்படுகின்றன.

ஏறத்தாழ 25 உள்ளூர் பறவைகள் இந்த பட்டியலில் உள்ளன. ‘ஸ்பாட்டட் வுட் ஔவல்’ எனப்படும் ஆந்தை கடந்த 2016ஆம் ஆண்டு வரை அதிகம் காணப்பட்டு வந்த நிலையில் இவ்வாண்டு அதன் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆரஞ்சு நிறமும் , கருமையான கண்கள் கொண்ட நடுத்தர அளவிலான ஆந்தையின் அடிப்பகுதி வெண்மையாகவும், மெல்லிய அடர் பழுப்பு நிறக் கோடுகளுடன் அடர்த்தியாகவும் இருக்கும்.

நகர்ப்புறத்திலும் கட்டடப் பகுதிகளுக்கு அருகில் உள்ள பூங்காக்களிலும் வாழும் இவை அங் மோ கியோ பூங்கா, பாசிர் ரிஸ் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.

தேசிய அளவில் அழிந்து விட்டதாகக் கருதப்படும் இனங்கள்

மலேசிய புளோவர் - மரினா ஈஸ்ட் டிரைவ்  சிங்கப்பூர் பறவைகள் திட்டம் 

ஏறத்தாழ 15க்கும் மேற்பட்ட உள்ளூர் பறவைகளுடன் ‘மலேசிய புளோவர்’ (Malaysian Plover) எனப்படும் 14-16 செ.மீ அளவே உள்ள அழகிய சிறிய பழுப்பு நிறப் பறவை, இவ்வாண்டு தேசிய அளவில் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. துவாஸ், மரினா அணைக்கட்டு பகுதிகளில் காணப்பட்ட இப்பறவை, 2017ஆம் ஆண்டு வரை 6,700-17,000 எண்ணிக்கையில் இருந்து இப்பொழுது ஏறத்தாழ அழிந்துவிட்டது.

இதுபற்றி கால்நடைத் தாதியாகப் பணிபுரிந்த திரு முஹம்மது நஸ்ரி, 24, கூறுகையில், “பல்வேறு உள்ளூர் பறவைகள் அழிந்து வருவது உண்மைதான். அதனை மீட்க நகர்ப்புற காடுகள் உருவாக்கப்பட்டாலும் அடர்ந்த, இருள் சூழ்ந்த, ஈரப்பதம் நிறைந்த காடுகளுக்குப் பழகிய பறவைகளை மீட்க இயலாது. எனினும், தொடர்ந்து நகர்புற புல்வெளிகளில், காலநிலை மாற்றங்களை ஏற்றுக்கொண்டு மனிதர்களுடன் வாழப் பழகும் பல புலம்பெயர் பறவை இனங்களை வளர்ப்பது சாத்தியம் தான்,” என்கிறார்.

பறவைகளுடனான தனது அனுபவத்தை பகிர்ந்த இவர்,‘“கிரேட்டர் ராக்கெட்-டெயில் ட்ரோங்கோ” எனும் தனித்துவம் வாய்ந்த பறவையைப் பற்றி குறிப்பிட்டார். கோஷாக் பறவை, சில வகை தவளைகள் என ஏறத்தாழ 51 உயிரினங்களின் ஒலிகளை எழுப்பக்கூடிய இப்பறவை, வேறு பறவைகளைப் போல் குரலெழுப்பி உணவைக் களவாடுதல், பாதுகாப்பிற்காக கூட்டம் சேர்த்தல் என அறிவார்ந்து செயல்படும்’ என்கிறார்.

மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பறவைக் காப்பாளர் திருவாட்டி நாராயணீ சிங்காரம், 34, “பறவைகளைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். அழியும் நிலையில் உள்ள பறவைகளை அனுமதி இன்றி வளர்ப்பது, புலம்பெயர் செல்லப் பறவைகளை வெளியே விடுவது எனச் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது, பறவையினங்களை பாதுகாக்க உதவியாக இருக்கும் என்கிறார்.

மேலும், பறவை ஆர்வலர்கள் பறவைகளை வீட்டில் வளர்ப்பதை விட, உரிய அமைப்புகளுக்கு உதவுவதும், இயன்ற அளவு மற்றவர்களுக்கு பறவைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் சிறந்தது என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!