விறுவிறுப்பான 3ஆம் கட்ட வாக்களிப்பு

கவுகாத்தியில் மூன்றாம் கட்டத் தேர்தலில் வாக்களிக்க மழையையும் பாராது ஜனநாயகக் கடமையாற்ற வரிசை பிடித்து நிற்கும் மக்கள். படம்: ஏஎஃப்பி

குஜராத்: உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

அதேபோல் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

நாட்டின் அடுத்த ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தலின் மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இந்திய நேரம் மாலை 5 மணி நிலவரப்படி  60.19% வாக்குகள் பதிவானதாகக் கூறப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும் வெற்றிகளைத் தந்த பகுதிகளில்தான் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

முக்கியமான இந்த மூன்றாவது கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் 79 தொகுதிகள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வசம் இருப்பவை, இவற்றைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாஜக கூட்டணி.

குஜராத்திலுள்ள 26 தொகுதிகளும் (சூரத்தில் போட்டியின்றி பாரதிய ஜனதா வெற்றி பெற்றுவிட்டது) கர்நாடகாவில் எஞ்சியுள்ள 14 தொகுதிகளும் மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகளும் உத்தரப் பிரதேசத்தில் 10-ல் 9 தொகுதிகளும் மகாராஷ்டிரத்தில் 11-ல் 7 தொகுதிகளும் சத்தீஸ்கரில் 7-ல் 6 தொகுதிகளும் பீகாரிலுள்ள 5 தொகுதிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வசமிருப்பவை.

இந்தியா கூட்டணியின் வசமிருப்பவை 10 தொகுதிகள்தான். மகாராஷ்டிரத்தில் 7-ல் 4, மேற்கு வங்கத்தில் 4-ல் 3, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று.

மூன்றாம் கட்ட வாக்குப் பதிவில் குஜராத்தைத் தவிர பல தொகுதிகளில் வெற்றி பெற தங்க வாய்ப்பு உள்ளதாக இண்டியா கூட்டணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் 25 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தனது சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் பிரதமர் மோடி தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வருகை தந்திருந்தார். இதையொட்டி நிஷான் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

வாக்களித்த பின்னர் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “உலகில் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு எல்லாம் ஓர் உதாரணமாக இந்தியாவின் தேர்தல் நடைமுறை உள்ளது. ஜனநாயகத்தைக் கொண்டாடுவது போல இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.

“நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்களிக்கவேண்டும். ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாட வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

இந்தத் தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் அமோக வெற்றிபெறும்: கார்கே

இதனிடையே, கர்நாடகா மாநிலத்தின் எஞ்சியுள்ள 14 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடந்தது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது மனைவி ராதாபாய் கார்கேவுடன் கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த 50 ஆண்டுகளாக நான் வாக்களித்து வருகிறேன். கர்நாடகாவில் பழமைவாய்ந்த கட்சியாக விளங்கும் நாங்கள் பெரும்பான்மையுடன் அமோக வெற்றிபெறுவோம்.

“பெங்களூரு தொகுதியில் கொஞ்சம் சிரமத்தை எதிர்நோக்கினோம். ஆனால் எங்களுக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

“என்னுடன் நின்ற ஏழை மக்களுக்கு நன்றி உள்ளவனாக நான் அவர்களுடன் இருக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டா மணி கலாபுர்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!