விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த அலை அலையாகத் திரண்ட மக்கள்

சென்னை: தேமுதிக தலைவரும் முன்னாள் நடிகருமான விஜயகாந்த் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

கேப்டன் என்று அழைக்கப்படும் திரு விஜயகாந்த், ஏற்கெனவே நுரையீரலில் அழற்சி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அத்துடன், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் அவரது நல்லுடல் வைக்கப்பட்டது. அரசியல், திரைத்துறை, தொழில்துறை பிரமுகர்கள் பலரும் ஏராளமாகத் திரண்டு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். கட்சித் தொண்டர்களும் துக்கத்துடன் குவிந்து வரும் நிலையில், அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நுரையீரல் அழற்சி காரணமாக விஜயகாந்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் அவருக்கு செயற்கை சுவாச (வென்டிலேட்டர்) சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே இணைநோய்கள் இருந்த நிலையில் கொரோனாவும் தொற்றியதால், அவரை உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்து மீட்க மருத்துவர்கள் போராடி வந்தனர்.

இருப்பினும், மருத்துவர்களின் முயற்சி பலனளிக்காமல் திரு விஜயகாந்த் வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலை காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் அறிவித்தார்.

அஞ்சலி செலுத்த அலை அலையாகத் திரண்ட மக்கள்

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்துக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு அவரது நல்லுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தொண்டர்களும் பொதுமக்களும் அலை அலையாகத் திரண்டு சென்று கேப்டன் விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் உடலை ஏற்றிச் சென்ற வாகனம், கிட்டத்தட்ட 2 மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் மெல்ல ஊர்ந்து கட்சி அலுவலகத்தை அடைந்தது. வழிநெடுக சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

விருகம்பாக்கம் வழியாக விஜயகாந்தின் உடலைக் கொண்டு சென்றபோது, காவலர்கள் துப்பாக்கி ஏந்தி ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தினர்.

கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம்

வியாழக்கிழமை காலை 6:10 மணியளவில் மறைந்த விஜயகாந்த்தின் உடல், கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை (டிசம்பர் 29) மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என விஜயகாந்தின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

மேலும், இன்றும் (டிசம்பர் 28) நாளையும் கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த்தின் நல்லுடலுக்கு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசியலில் சாதித்த விஜயகாந்த்

154 திரைப்படங்களில் நடித்துள்ள திரு விஜயகாந்த், 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். மறு ஆண்டே சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பத்து விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.

அப்போது அது அரசியலில் பெரும் வியப்பைத் தந்ததோடு திமுக, அதிமுகவுக்கு மாற்று தேமுதிக என்று பேசப்பட்டது.

அதற்கு அடுத்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டு திமுகவைக் காட்டிலும் அதிக தொகுதிகளில் தேமுதிக வென்றது. அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் திரு விஜயகாந்த் அமர்ந்தார்.

சிங்கப்பூரில் நினைவலைகள்

விஜயகாந்தின் மறைவு குறித்து சிங்கப்பூரில் சிலரிடம் தமிழ் முரசு பேசியது.

1989ல் வெளிவந்த ‘நாளை நம் கையில்’ திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்துடன் படக்காட்சி ஒன்றில் நடித்துள்ள சிங்கப்பூரர் நெடுஞ்செழியன் சண்முகம் பிள்ளை, 57, அந்நடிகர் பண்பாகப் பேசுபவர், தன்னடகத்துடன் நடப்பவர் எனப் பாராட்டினார்.

“விஜயகாந்தை முதன்முதலாக நான் 1988ல் சென்னையின் தி. நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் பார்த்தேன். அப்போது அவர் கலையாகவும் கம்பீரமாகவும் தோற்றமளித்தார்,” என்றார் திரு நெடுஞ்செழியன். 

இக்கருத்தை ஆதரிக்கும் வகையில், ‘இந்தியன் மூவி நியூஸ்’ எனும் முன்னாள் திரையுலகச் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியர் எஸ்.ஏ. நாதன், தாம் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நேரடியாகப் பேசியுள்ளபோதும் திரு விஜயகாந்த், பிரபலங்களுக்குள்ள வழக்கமான அகம்பவாம் இன்றி கலகலப்பாகப் பேசுபவர் எனப் புகழாரம் சூட்டினார்.

விஜயகாந்தின் படங்களை 1980கள் முதல் பார்த்து வந்த ரசிகர் திரேசா, அந்நடிகர் நல்லவர் என்றும் கன்னியமானவர் என்றும் கருதுவதாகக் கூறினார். “இப்படிப்பட்ட அற்புதமான நாயகனுக்குப் பிரார்த்தனைக் கூட்டத்தை நான் நிச்சயம் ஏற்பாடு செய்வேன்,” என்று அவர் கண்ணீர்மல்க கூறினார்.

கூடுதல் தகவல் கி.ஜனார்த்தனன், லாவண்யா வீரராகவன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!