‘என் பங்களிப்பு அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும்’

“குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது நான் எதிர்பாராத ஒன்று. எனினும், அந்த வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டதாக நினைக்கிறேன்,” என்கிறார் இளம் நாயகி மிர்ணாளினி.

‘எனிமி’ படத்தில் விஷால், ஆர்யா, ‘கோப்ரா’ படத்தில் விக்ரம், ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தில் சசிகுமார் ஆகியோருடன் நடித்து முடித்து இருப்பவர் தற்போது ‘ரோமியோ’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்துள்ளார்.

“பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடிப்பதன் மூலம் பலவற்றைத் தெரிந்துகொண்டேன். திரைத்துறை குறித்த தெளிவும் ஏற்பட்டுள்ளது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக நடந்தவற்றை அசைபோட்டு பார்க்கும்போது மனதளவில் ஒருவித வெறுமையை உணர்கிறேன்.

“ஒரு தனி ஆளாக அப்படி என்ன சாதித்துவிட்டேன் என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. இத்தகைய எண்ணம் மனதில் பதியத் தொடங்கிய வேளையில்தான் ‘ரோமியோ’ படவாய்ப்பு தேடி வந்தது.

“சரியான நேரத்தில் கிடைத்த பொருத்தமான வாய்ப்பாக இதைக் கருதுகிறேன். இந்த படம் வெளியான பின்னர் மிர்ணாளினியாக நான் என்ன செய்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியவரும்,” என்கிறார் மிர்ணாளினி.’

விநாயக் வைத்தியநாதன் இயக்கி உள்ள ‘ரோமியோ’ படத்தின் பல்வேறு பகுதிகள் தனது சொந்த வாழ்க்கையை ஒத்திருப்பதாகச் சொல்கிறார் இந்த இளம் நாயகி. அப்படத்தின் கதை, திரைக்கதையைப் படித்து முடித்தபோது, தனது சுயசரிதையைப் படித்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாம்.

“தனிப்பட்ட வகையில் நான் எவ்வாறு திரைத்துறையில் இணைய முடிவு செய்தேனோ, அது போன்றுதான் விநாயக் பட நாயகியும் ஒரு முடிவு எடுப்பார்.

“இதுவரை நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் இந்தப் புதிய பாத்திரத்திற்கு என் மனதில் தனி இடம் உண்டு. எனக்கு முழுமையான மனநிறைவு அளித்த கதாபாத்திரம் இது.

“வலுவான விருப்பங்களும் எண்ணங்களும் கொண்ட ஒரு பெண்ணைத் திரையில் காணப்போகிறீர்கள். தொழில் சார்ந்த தனது விருப்பங்களை எட்டிப்பிடிக்க அவள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவள். ஒருவகையில் சுயநலவாதி என்றும் அராஜக போக்கு கொண்டவள் என்றும் குறிப்பிடலாம்.

“எப்போதுமே ஒரு நடிகையாக சில அம்சங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். ரசிகர்களை மகிழ்விக்கும் பெண் கதாபாத்திரங்கள், தாம் நம்பக் கூடியவற்றை அடைவதற்காக அராஜகமாக செயல்படக்கூடிய பெண்கள் ஆகிய இரண்டு தன்மைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.

“ரசிகர்களைத் தற்காலிகமாக மகிழ்விக்கும் கதாபாத்திரங்கள் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாது. ஆனால் சவாலான கதாபாத்திரங்களை ஏற்கும்போது நமது நடிப்பின் மூலம் ரசிகர்களால் அதை நன்கு புரிந்துகொள்ள முடியும்.

“நம் சமூகத்தில் வெற்றிபெற்ற பெண்கள் அனைவருமே அராஜகவாதிகளாகத்தான் அறியப்படுகிறார்கள். ஆனால் அவ்வாறு செயல்படாமல், அதுபோன்று பெயர் வாங்காமல் நினைத்ததைச் சாதிக்க இயலாது,” என்று ஆய்வுபூர்வமாகப் பேசுகிறார் மிர்ணாளினி.

இவர் திரையுலகில் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. தனக்கென பெரிய லட்சியங்கள், இலக்குகள் இல்லை என்று சொல்பவர், அனைவருக்கும் வாய்ப்புகள் உரிய நேரத்தில் வந்து சேரும் என்று நம்புகிறார்.

“நடிக்க வந்த புதிதில் கேமரா முன் நிற்பதற்கு நான் தயாராக இல்லை. எவ்வாறு ஒப்பனை போட்டுக்கொள்வது, உடைகளை உடுத்துவது என்பதெல்லாம் தெரியாது. என்னுடைய திரைப்பயணத்தையும் பாதையையும் ஒவ்வொரு செங்கலாக எடுத்துவைத்து நானே கட்டமைத்துக் கொண்டேன்.

“இனி நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அவற்றைத் திரையில் காணும் ரசிகர்களின் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த ஒரு படத்திலும் எனது பங்களிப்பு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

“எங்கு சென்றாலும் உங்களுக்குப் பிடித்தமான நடிகர் யார் என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. ஒரு நல்ல படைப்பில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும். எனது நடிப்பு நான் ஏற்று நடிக்கும் பாத்திரத்திற்கு நீதி செய்வதாக இருக்க வேண்டும். இதில் மட்டுமே எனது கவனம் குவிந்திருக்கும்.

“யார் நாயகன், படத்தில் இடம் பெற்றுள்ள மற்ற கலைஞர்கள் யார் யார் என்பன போன்ற விஷயங்கள் குறித்து நான் யோசிப்பதே இல்லை,” என்கிறார் மிர்ணாளினி.

‘டிக்டாக்’ தளத்தில் மிகத் தீவரமாக இயங்கி வந்த இளையர்களில் இவரும் ஒருவர்.

லட்சக்கணக்கானோர் இவரது காணொளிகளைக் கண்டு ரசித்து வருகின்றனர். அண்மைக் காலங்களில் சமூக ஊடகங்கள் மூலம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டதாக குறிப்பிடுபவர், சமூக ஊடகங்கள் மூலமாகவே தாம் இன்று உள்ள இடத்தை பெற்றதாகக் கூறுகிறார்.

தொலைக்காட்சித் தொடர்களிலும் ‘ரியாலிட்டி’ நிகழ்ச்சிகளிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் பல தேடி வந்தனவாம்.

எனினும் திரைத்துறையில்தான் முதலில் அறிமுகமாக வேண்டும் என விரும்பியுள்ளார்.

“எனக்கான வாய்ப்புகளை ஏற்பது குறித்து நானே முடிவு எடுப்பேன். எனக்கான பாதையை நானே வகுத்துக்கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதைத்தான் இன்று வரை செய்துவருகிறேன்.

“இதுவே எனக்கான தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுத்தரும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது,” என்று திட்டவட்டமாகவும் தெளிவாகவும் பேசுகிறார் இளம் நாயகி மிர்ணாளினி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!