தொழில்நுட்ப நிறுவனங்கள் விதிமீறினால் பெருந்தொகை அபராதம்: ஆஸ்திரேலியா

தொழில்நுட்ப நிறுவனங்கள் விதிமீறினால் பெருந்தொகை அபராதம்: ஆஸ்திரேலியா

படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

24 Nov 2026 - 4:17 pm

2 mins read

சிட்னி: தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம், அடிமையாக்கும் அம்சங்களை அகற்றத் தவறினால், கூகல், மெட்டா உள்ளிட்ட இணைய நிறுவனங்களின் உலகளாவிய வருவாயில் 5 விழுக்காடு வரை அபராதமாக விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

செனட் சபையில் இடதுசாரி சார்புடைய பசுமைக் கட்சியினருடன் ஓர் உடன்பாட்டை எட்டிய பிறகு, மிதவாத-இடதுசாரி தொழிலாளர் கட்சி அரசாங்கம், தனது முன்மொழியப்பட்ட ‘மின்னிலக்கக் கடமைப் பாதுகாப்பு’ சட்டத்தின் கீழ், தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் தளங்கள் மீது வழக்குத் தொடர தனிநபர்களுக்கு உரிமை வழங்கும் என்றும் கூறியுள்ளது.

சில தளங்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் வருவாயை ஈட்டுவதால், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) கோடிட்டுக் காட்டப்பட்ட இந்த விவரங்கள், முன்னர் முன்மொழியப்பட்ட 109 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$93 மில்லியன்) அபராதத் தொகையை விட கணிசமான அதிகரிப்பைக் காட்டுகின்றன.

இரு தரப்பினருக்கும் இடையிலான உடன்பாட்டின் விளைவாக, இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி சட்டமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது.

“இது ஒரு மிகப்பெரிய சீர்திருத்தம், அவசரமான சீர்திருத்தம். இந்தச் சீர்திருத்தத்தை இந்த வாரமே நாடாளுமன்றத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்காக நாங்கள் நிறைவேற்றிக் காட்டுவோம்,” என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அனிகா வெல்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குறிவைக்கப்பட்ட தீங்குகளில், குழந்தைப் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளடக்கங்கள், அனுமதியின்றி வெளியிடப்படும் போலியான நிர்வாணக் காட்சிகள், பாலின அடிப்படையிலான வன்முறை, தற்கொலையைத் தூண்டுதல், பயங்கரவாதம் ஆகியவை அடங்கும்.

“இது, வெளிநாட்டுக்குச் சொந்தமான தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பதிலாக, பெற்றோர், குழந்தைகளின் பக்கம் நின்று ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுப்பது குறித்த விஷயமாகும்,” என்று பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்