கொளுத்தும் வெயிலில் மக்கள் வாக்களிப்பு

சென்னையிலிருந்து
கு. காமராஜ்

சென்னையில் கொளுத்தும் வெயிலிலும் மக்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறவில்லை.

உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் ஒரு திருவிழா போன்று நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6.00 மணி வரை வரிசையில் காத்திருந்தவர்களும் வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த காளியம்மாள், 69, “வெயில் கடுமையாக இருக்கிறது, உட்கார்ந்து உட்கார்ந்து வந்து சேர்ந்தேன்,” என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“வெயிலைப் பார்த்தால் முடியுமா, நமது உரிமையை விட்டுக் கொடுக்க முடியுமா,” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

இதே இடத்தில் வாக்களித்த அருண், 30, “வெயில் அதிகமாகத்தான் இருக்கிறது, ஆனால் வாக்களிப்பது ரொம்ப முக்கியம்,” என்றார்.

ஆனால் திருமதி விஜயஸ்ரீ, 54, குடும்பத்தினர் வெயில் சற்றுத் தாழ்ந்த பிறகு வாக்களிக்க வெளியே வந்தனர்.

நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க இவர் தமது மகள்களுடன் வந்திருந்தார்.

“வெயிலில் வருவது சிரமமாக இருந்தாலும் வாக்களிப்பது நமது கடமை, வாக்குப் போட்டுத்தான் ஆகவேண்டும்,” என்று தமிழ் முரசிடம் விஜயஸ்ரீ தெரிவித்தார்.

வாக்குப் போட்ட அனுபவத்தை தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்ட அவர், “வாக்குப் போட்டேன். புளு பொத்தானை அழுத்திட்டு சரியா விழுகிறதா என்ற சந்தேகத்தில் திரையைப் பார்த்தேன். அதில் நான் வாக்குப் போட்டவரின் புகைப்படம், சின்னம், பெயர் எல்லாம் தெரிந்தது. அது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

இவரது இளைய மகள் இலக்கியா, 20, முதல்முறையாக வாக்களித்தார்.

“நான் வாக்களிப்பதற்கு மிகவும் ஆவலாக இருந்தேன். என்னுடைய நண்பர்கள் எல்லாம் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுவிட்டார்கள். ஆனால் என்னுடைய அம்மா இப்போதுதான் அழைத்து வந்தார்கள். வாக்குப் போட்டது மகிழ்ச்சியாக இருந்தது,” என்று இலக்கியா சொன்னார்.

வாக்குப் போட்டதை உறுதி செய்யும் விவரங்களை திரையில் பார்க்காதது இவருக்கு சற்று வருத்தம்.

காலையில் வாக்குப் பதிவு சுறுசுறுப்பாக நடைபெற்றாலும் மதிய வேளையில் மந்தமாக காணப்பட்டது. மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.

பலர் வெயில் தணிந்தபிறகு வாக்களிக்கலாம் என்று இருந்துவிட்டனர். இதனால் மாலையில் வாக்களிப்பு மீண்டும் சூடுபிடித்தது.

மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சென்னை முழுவதும் கடைகள் மூடப்பட்டன.

சென்னை பாண்டிபஜார் மற்றும் பனகல் பூங்காவில் உள்ள போத்தீஸ், லலிதா ஜூவல்லரி, சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய கடைத் தொகுதிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் வழக்கமான பரபரப்பையும் மக்கள் கூட்டத்தையும் பார்க்க முடியவில்லை.

தமிழகத்தில் மாலை 3:00 மணி வரை மொத்தம் சராசரியாக 51.4 விழுக்காடு வாக்குகள் பதிவானது.

பதினெட்டாவது மக்களவையின் 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்தியா முழுவதும் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். அப்போது இந்தியாவை ஆளும் கட்சி எது என்பது தெரிந்துவிடும்.

முதல் முறையாக வாக்களித்த இலக்கியா, 20, படம்: தமிழ் முரசு
வாக்களித்துவிட்ட திரையைப் பார்த்து உறுதி செய்துகொண்ட விஜயஸ்ரீ, படம்: தமிழ் முரச
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!