தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளமைத் தீபாவளி

5 mins read
aceb3694-3583-4a98-bc10-34c70f0bff80
தேக்காவில் தீபாவளி கொண்டாடும் இளையர்கள்  - படம்: இணையம்

பண்டிகைகள் இளையர்களுக்கு கொண்டாட்டமான காலம். சந்தையில் பிரபலமாகும் புதிய பாணி உடைகள், அலங்காரங்களைத் தேடித் தேடி வாங்குவதில் தொடங்கி, யாரையெல்லாம் சந்திக்கலாம் எங்கெல்லாம் செல்லலாம் என்று திட்டமிட்டுக் கொண்டாடி மகிழும் பருவம்.

மேலும், இணையத்தில் அதிக நேரம் செலவிடும் இளையர்கள், உற்றார் உறவினரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி, நேரம் செலவிடவும் பாரம்பரியங்களைத் தெரிந்துகொள்ளவும் பண்டிகைகள் வாய்ப்பாக அமைகின்றன.

இந்த ஆண்டு தங்களது தீபாவளிக் கொண்டாட்டம் குறித்து சிலர் இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்.

துர்காஷினி லோகநாதன் பிள்ளை, 22 

துர்காஷினி லோகநாதன் பிள்ளை.
துர்காஷினி லோகநாதன் பிள்ளை. -

தீபாவளி பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்றாலும், இந்நாளுக்காக நான் ஆர்வத்துடன் காத்திருப்பேன். எண்ணெய் தேய்த்து குளித்தல், இறைவனை வழிபடுதல், பெற்றோரிடம் ஆசி பெறுதல் என்று நாள் தொடங்கும்.

சிறப்பான காலை உணவு, மதிய விருந்து என்று நாள் தொடரும். மாலையில் புதுச் சேலையை அணிந்து, பெற்றோருடன் பாட்டியையும் உறவினர்களையும் சென்று சந்திப்பேன்.

அனைவரும் ஒன்றுகூடி, அன்பையும் மகிழ்ச்சியையும் பரிமாற தீபாவளி சிறந்த நாளாக அமைகிறது.

திரெஷபிரியா சிதம்பரம், 21 

திரெஷபிரியா சிதம்பரம்.
திரெஷபிரியா சிதம்பரம். -

எங்கள் வீட்டில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் சற்று மாறுபட்டு உள்ளன.

வழக்கமாக எங்கள் வீட்டில் உணவு மத்தாப்பூ ஆகியவற்றுடன் தீபாவளியைக் கொண்டாடுவோம்.

இந்த ஆண்டு  என் சகோதரர்கள் திருமணமாகி தங்கள் புது வீட்டில் வசிப்பதால் நானும் எனது பெற்றோரும் மதிய உணவு நேரத்தின்போதும் இரவு உணவு நேரத்தின்போதும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று தீபாவளி கொண்டாடவிருக்கிறோம். எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது.

ராஜமோகன் துர்காஸ்ரீ, 19 

ராஜமோகன் துர்காஸ்ரீ.
ராஜமோகன் துர்காஸ்ரீ. -

தீபாவளி பண்டிகை என்று சொன்னாலே நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரோடும் நேரம் செலவிடுவதும் நம் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதும்தான் எனக்கு நினைவுக்கு வரும்.

வீட்டில் செய்யும் பலகாரங்களை நண்பர்களிடமும் மற்ற இனத்தைச் சேர்ந்த அண்டைவீட்டாரிடமும் பகிர்ந்துகொள்வதும் என் தீபாவளிக் கொண்டாட்டங்களின் ஓர் முக்கிய அங்கம்.

அதோடு, உறவினர்கள் அனைவரையும் சந்தித்து ஒன்றாகத் தீபாவளியை கொண்டாடுவதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். அதிலும், தாத்தா பாட்டியுடன் அந்த முழு நாளையும் செலவிடுவோம்.

இந்தப் பண்டிகையை ஒரு காரணமாக வைத்து, நிறைய நாட்களுக்கு பேசாமல் இருந்தவர்களிடம்கூட பேசுவதற்கான வாய்ப்பும் அமையும். அவ்வாறு உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் வலுப்படுத்தவும் தீபாவளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

குகனேஷ்வரன்,24

குகனேஷ்வரன்.
குகனேஷ்வரன். -

இந்த ஆண்டின் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு நானும் எனது குடும்பத்தாரும் சிவப்பு நிற ஆடைகளை அணியவிருக்கிறோம். நாங்கள் ஒரே வண்ணத்தில் ஆடைகள் அணிவது இதுவே முதல் முறை. ஒளிமயமான சிவப்பு நிறம் இருளைப் போக்கி ஒளியைக் கூட்டும் என்ற நம்பிக்கையில் நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.

தாத்தா பாட்டி மற்ற உறவினர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடப்படும் இந்த நாள் நமக்கு மகிழ்ச்சி தருவதோடு நம் குடும்பப் பிணைப்பையும் வலுப்படுத்துகிறது.

செல்வராஐ் விஷாலினி, 20

செல்வராஐ் விஷாலினி.
செல்வராஐ் விஷாலினி. -

தீபாவளி எனக்கு மிகவும் பிடித்த ஒரு திருநாள். வீட்டில் லட்டின் வாசமும் தீபங்களும் அனைவரின் புத்தாடைகளும் இந்த நாளுக்கு அழகு சேர்க்கின்றன. எனது புத்தாடைகளை அணிந்துகொண்டு இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள எனக்கு மிகவும் பிடிக்கும்

நரேஷ் குமரவேல், 23 

நரேஷ் குமரவேல்.
நரேஷ் குமரவேல். -

விடியற்காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, எண்ணெய்க் குளியலுடன் பண்டிகை தொடங்கும். இந்த ஆண்டு நான் பட்டு வேட்டியும் சட்டையும் அணியவிருக்கிறேன். பெரும்பாலும் தீபாவளி அன்று குர்தா அணிவேன். வேட்டி சட்டைதான் தமிழ்ப் பாரம்பரிய ஆடை என்பதால் இம்முறை வேட்டி கட்ட எண்ணியுள்ளேன்.

வழிபாட்டுக்குப் பிறகு இனிப்பு, காலை உணவு ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு உற்றார், உறவினர்களைச் சந்திக்க செல்வேன். பிறகு நானும் என் குடும்பத்தினரும் கோவிலுக்குச் செல்வோம். இரவில் குடும்பத்தாருடன் மத்தாப்பு கொளுத்தி விளையாடுவேன்.

இம்முறை தீபாவளி வாரயிறுதியோடு சேர்ந்து வருவதால் கொண்டாட்டத்துக்குத் தயாராவது எளிதாக இருந்தது. சிறுவயதில் தீபாவளி அன்று  என் அம்மா என்னை எழுப்புவார். அப்போது பட்டாசுடன் ஓடியாடி விளையாடுவதை நான் எண்ணிப் பார்ப்பேன்.

ராஜ்குமார் கமலா லட்சுமி ஸ்ரீநிதி, 21

ராஜ்குமார் கமலா லட்சுமி ஸ்ரீநிதி.
ராஜ்குமார் கமலா லட்சுமி ஸ்ரீநிதி. -

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிக் கொண்டாட்டம் மனத்தை நெகிழ வைக்கும். எனது பரம்பரியத்துடனும் பண்பாட்டுடனும் ஆழமாகப் புரிந்துகொள்ள பண்டிகைகள் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகின்றன.

இந்த ஆண்டு தீபாவளியை என்னுடன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மற்ற இன நண்பர்களுடன் கொண்டாட இருக்கிறேன். எனது பண்பாடு குறித்து அவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

கௌதம் நாகராஜன், 24

கௌதம் நாகராஜன்.
கௌதம் நாகராஜன். -

தீபாவளி அன்று என் வீட்டை வண்ணக் கோலங்களாலும் விளக்குகளாலும் அலங்கரிப்பது எனக்குப் பிடிக்கும்.

பிரியாணி, சமோசா, குலாப் ஜாமுன் ஆகியவற்றையும் விரும்பிச் சாப்பிடுவேன். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்து தீபாவளிப் பாடல்களைக் கேட்டு மகிழ்வேன்.

அஷ்வினி திருப்பதி, 18

அஷ்வினி திருப்பதி.
அஷ்வினி திருப்பதி. -

தீபாவளி என்பது ஒளியின் திருநாள். இது இருளை நீக்கி ஒளியை வரவேற்கும் நாளாகும். தீமையை வென்று நன்மை வெற்றி பெற்றதை நினைவூட்டும் நாள் குடும்பத்தாரும் நண்பர்களும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் தருணம்.

அன்பு, ஒற்றுமை, நம்பிக்கை ஆகியவற்றை நினைவூட்டும் அழகான விழாவாகத் தீபாவளி திகழ்கிறது.

சுருதிகா குமார், 22

 சுருதிகா குமார்.
 சுருதிகா குமார். -

தீபாவளி என்பது இருளை அகற்றி நம்பிக்கையின் ஒளியைப் பரப்பும் விழா. குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து, சிரித்து, கொண்டாடும் நாள் இது.

தீபாவளி அன்று நாம் ஏற்றும் தீபங்கள் நம் வீடுகளுக்கு மட்டுமல்ல, நம் இதயங்களுக்கும்தான்.

பலகாரங்களின் மணமும், புதிய ஆடைகளின் மகிழ்ச்சியும், பட்டாசின் சத்தமும், உறவுகளின் சிரிப்பும் இணைந்து மகிழ்ச்சி பொங்கும் திருநாள் தீபாவளி.

தீபங்கள் பேசும்

இருளின் நிழல்கள்

மெதுவாய் உதிர்ந்து,
நகரத்தின் மூலைகளில்

ஏற்றும் நம் தீபங்கள்
சொல்லாதக் கதைகளை

நாணமின்றி பேசும்!

இருளில் ஒளி பிறக்கும் நாள் இது,
நம்பிக்கையின் தீபங்களை ஏற்றும் நாள் இது,

புதிய தொடக்கம் மலரும் நாள் இது,

அழகான தீபங்களை ஏற்றி,

ஆசையுடன் ஆடைகளை அணிந்து,

இனிமையான பலகாரங்களைச் சாப்பிட்டு,

சிறுவர்கள் பட்டாசு வெடித்து,

மனம் ஒளியால் நிறையட்டும்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

வர்ஷிகா கண்ணன்

வர்ஷிகா கண்ணன்
வர்ஷிகா கண்ணன் -

பொம்மை விளக்கு 

குச்சி மத்தாப்பு 

பரபரப்பாகச் செய்த முறுக்கு  

எல்லாம் ஒரு நாள் தான்

விருந்தினர் வருவர் போவர் 

காசுப் பைகள் வரும் போகும் 

மூன்று வேலையும் சுவைதரும் உணவு 

கூடவே சிலபல பலகாரங்கள் ..

எல்லாம் ஒரு நாள் தான்

இந்த ஒரு நாளுக்காகவா 

இவ்வளவு ஆவல் ?

இந்த ஒரு நாளுக்காகவா 

இவ்வளவு பரபரப்பு ?

என்னுடையை பண்டிகை

ஒவ்வொர் ஆண்டும் வரும்போது,

இதயத்தின் ஓரத்தில்

ஓர் ஒளி எழுகிறது

சிறிய நம்பிக்கையாய்,


சின்னஞ்சிறிய நினைவாய்

ஆண்டு முழுவதும் நெஞ்சுக்குள் நின்றுவிடும்

நினைவுகளே இனிமையானது

அது

என்னை மீண்டும்,
மீண்டும் காத்திருக்க வைக்கிறது ,


தீபாவளிக்காக அல்ல ,


என் தீபவொளிக்காக

மஹாலட்சுமி

தீபாவளி நெருங்கும்போது புத்தாடைகள் வாங்குவதற்கும் போட்டுக்கொள்வதற்கும் மிகவும் ஆவலாக இருக்கும். இந்த ஆண்டு தீபாவளியை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கொண்டாட இருக்கிறேன். 

என் நண்பர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு உணவுப் பொருளைக் கொண்டு வருவதாகக் கூறினர். அனைவரும் வேலைப்பளுவில் மூழ்கியிருக்கும் இவ்வேளையில் எங்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க இது நல்ல வாய்ப்பாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்