தந்தையுடன் இணைந்து தன்னலமற்ற சேவை

2 mins read
ddd46d0d-0005-417c-92ef-394d2f0fcdba
ஜூலை 26ஆம் தேதி நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியன் மருத்துவப் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற டாக்டர் விக்னேஷ்வரன் செந்தமிழ்ச்செல்வன், 26. - படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

ஐந்து வயதிலிருந்தே தந்தையுடன் சேர்ந்து சமூகத் தொண்டாற்றி வந்துள்ளார் டாக்டர் விக்னேஷ்வரன் செந்தமிழ்ச்செல்வன், 26.

ஜூலை 26ஆம் தேதி நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியன் மருத்துவக் கழகத்தில் பட்டம் பெற்ற அவர், தற்போது கே கே மகளிர், குழந்தை மருத்துவமனையில் ‘ஹவுஸ்மேன்ஷிப்’ பயிற்சி மேற்கொண்டுவருகிறார்.

“நான் பிறந்ததிலிருந்தே மருத்துவப் பட்டம் பெறும் தருணத்துக்காகத்தான் என் தந்தை காத்துக்கொண்டிருந்தார்,” என்றார் விக்னேஷ்வரன். தந்தை டாக்டர் செந்தமிழ்ச்செல்வன், கூ டெக் புவாட் மருத்துவமனையில் நவீன உள்மருத்துவ (advanced internal medicine) மூத்த ஆலோசகர்.

டாக்டர் விக்னேஸ்வரனின் மருத்துவக் கல்விப் பயணம் சுமுகமானதன்று. மூன்றாம் ஆண்டில் பயின்றபோது வயிற்றில் அவசரமாக இரண்டு, மூன்று சிகிச்சைகளை அவர் மேற்கொள்ளவேண்டியிருந்தது.

“அதனால் ஒரு மாதம் என்னால் தண்ணீர் அருந்தவோ உணவு உண்ணவோ முடியவில்லை. குழாய்வழிதான் உட்கொள்ளவேண்டியிருந்தது. மயக்கமான நிலையில் மருத்துவமனையிலிருந்தே இணைய வகுப்புகளில் பங்கேற்றேன். நண்பர்களும் உதவினார்கள். பெற்றோர் என் படுக்கையருகிலேயே இருந்தனர்,” என்றார் விக்னே‌ஷ்வரன்.

ஐந்து வயதிலிருந்தே, குடியிருப்பாளர்க் குழு நடத்தும் இலவச மருத்துவப் பரிசோதனைகளில் தந்தையுடன் தொண்டாற்றி வந்துள்ளார் விக்னேஷ்வரன்.

தந்தையுடன் 2015 முதல் ஆண்டுக்கு ஓரிரு முறை தமிழகத்திலுள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று வயதான, வசதிகுறைந்த கிராமவாசிகளுக்குச் சுகாதாரப் பரிசோதனைகள் நடத்திவருகிறார் அவர்.

எலும்புப்புரை (osteoporosis) போன்ற நோய்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகள் வழங்குவதோடு விழிப்புணர்வூட்டியும் வருகின்றனர்.

“என் தந்தை பிறந்தது பட்டுக்கோட்டையின் அருகில் உள்ள கிராமத்தில்தான். அவர்தான் இம்முயற்சியைத் தொடங்கி நடைமுறைப்படுத்தியது. நான் மருத்துவப் பள்ளிக்குச் செல்வதற்கு ஈராண்டுகள் முன்பு அவருடன் இணைந்தேன்.

“நாங்கள் தமிழகத்தில் இல்லாதபோதும் அங்குள்ள மக்களுக்குத் தொடர்ந்து மருத்துவ உதவி கிடைப்பதற்காக அங்கிருக்கும் தொண்டூழியர்களை எங்கள் முயற்சியில் இணைத்துள்ளோம்,” என்றார் விக்னேஷ்வரன்.

தமிழகத்திலுள்ள ‘ரோட்டரி கிளப்’, மருத்துவக் கருவிகளை அக்கிராமத்திற்கு வரவழைத்து இம்முயற்சியில் உதவிவருகிறது.

எதிர்காலத்தில் இதய வல்லுநராக விரும்பும் விக்னேஷ்வரன், கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய இதய நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறார். அதற்காக சென்ற ஆண்டு அவருக்கு சிங்ஹெல்த் மருத்துவ மாணவர் திறன் மேம்பாட்டு விருது வழங்கப்பட்டது.

அத்துடன், சிண்டா போன்ற அமைப்புகளில் சேர்ந்து தமிழர்களுக்கு ஏதேனும் செய்யவிரும்புவதாகவும் அவர் கூறினார். “தமிழில் சுகாதாரக் குறிப்புகளைப் படித்துப் பின்பற்றுவது கடினம். அதனால் தமிழில் நலவாழ்வு பற்றிய உரைகளை நடத்தலாமென உள்ளேன்,” என்றார் அவர்.

“பயணம் கடினமானால் ‘ஏன் தொடங்கினோம்’ என்பதை நினைவுகூருங்கள், உங்களை நம்புங்கள்,” என்பதே புதிய மருத்துவ மாணவர்களுக்கான இவரது அறிவுரை!

குறிப்புச் சொற்கள்