அனைத்துலக அளவிலான தலைசிறந்த தொழில்முனைவர்களிடையே ஈராண்டுகளுக்கு ஒருமுறை சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) லீ குவான் யூ அனைத்துலக வர்த்தகத் திட்டப் போட்டியை நடத்துகிறது.
இவ்வாண்டு 12ஆம் முறையாக நடைபெற்ற அப்போட்டியின் இறுதிச் சுற்று செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது.
கடந்த 25 ஆண்டுகளாக, ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் லீ குவான் யூ அனைத்துலக வர்த்தகத் திட்டப் போட்டி, இவ்வாண்டு இதுவரை காணாத அளவில் 91 நாடுகளிலிருந்து 1,572 விண்ணப்பங்களை ஈர்த்தது. அவற்றிலிருந்து 60 நிறுவனங்கள் சிங்கப்பூரில் நடைபெறும் இறுதிச்சுற்று வாரத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டன.
புத்தாக்கத்தை ஏவும் அணி
இறுதிச் சுற்று வாரத்துக்காகச் சிங்கப்பூரில் கூடிய 60 அணிகளில் ஒன்று, பெங்களூரிலிருந்து இயங்கும் ஏவுகணை, வானூர்தி உந்துவிசை (propulsion) சார்ந்த US$21 மில்லியன் மதிப்பிலான ‘ஸ்பேஸ்ஃபீல்ட்ஸ்’ நிறுவனம். இது இந்திய அறிவியல் கழகத்திலிருந்து (ஐஐஎஸ்சி) இயங்குகிறது. இந்தியாவிலிருந்து இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற ஒரே அணி இதுதான்.
இந்த அணி, ‘இன்ஃபினிட்டி’ பிரிவில் $10,000 ரொக்கம் ‘மக்களின் தேர்வு’ விருதை வென்றது.
“இந்தியாவில் இந்திய ஆயுதப் படைகளுடன் நாங்கள் ஏற்கெனவே முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம். சிங்கப்பூரில் நாங்கள் இப்போட்டியில் கலந்துகொண்டதற்கான காரணம், தென்கிழக்காசியாவுக்கு விரிவடைய விரும்புவதே.
“சிங்கப்பூரில் எஸ்டி இஞ்சினியரிங் போன்ற பெரிய நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் உள்ளன. சிங்கப்பூரின் சட்டதிட்டங்களும் ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஆதரவாக உள்ளன,” என்றார் தலைமை நிர்வாகி அபூர்வா மாசூக்.
ஒடிசாவின் வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த அவர்கள், ஏவுகணை மாணவர்க் குழு ஒன்றைத் தொடங்கி ஏழு ஆராய்ச்சி ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவினர். உலகின் ஆக நீளமான அணையான 26 கிலோமீட்டர் நீள ஹிராக்குட் அணையை ஆய்வுசெய்வதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா, விண் ஆராய்ச்சி துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்ததும் ‘ஸ்பேஸ்ஃபீல்ட்ஸ்’ நிறுவனத்தை 2021ல் தொடங்க அவர்கள் முடிவெடுத்தனர். தற்போது ஆராய்ச்சிக்கே 25 பொறியாளர்கள் கொண்ட அணியாக நிறுவனம் விரிவடைந்துள்ளது. பத்து காப்புரிமைகளை வைத்துள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி நடந்த மாபெரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற எட்டு அணிகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும், சிங்கப்பூரிலுள்ள நிறுவனங்கள், முதலீட்டாளர்களுடன் பேசும் வாய்ப்பு பயனுள்ளதாக அமைந்தது என அவர்கள் கூறினர்.
விதிமீறல்களைக் கண்டறியும் ஏஐ
தொழில்முனைப்புகளை மதிப்பிட முதலீட்டாளர்களுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தீர்வுகளுக்கான அனைத்துலகப் போட்டியையும் (டியுஏஐ) எஸ்எம்யு இதற்குமுன் நடத்தியிருந்தது. சிங்கப்பூரைச் சார்ந்த ‘பஃபர் ஏஐ’ (Puffer AI), கனடாவைச் சார்ந்த ‘இவெலைஸ்’ (Evalyze), இந்தியாவைச் சார்ந்த ’ஷென்சு ஏஐ’ (Shensu AI) ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.
‘ஷென்சு ஏஐ’யை உருவாக்குமுன், ‘போபோட்’ ஊழியர் குரலை ஆராயும் ஏஐ தொழில்நுட்பத்தை (PoBot Worker Voice Tool) உருவாக்கியிருந்தது மூன்றாம் நிலையில் வந்த அணி. ‘போபோட்’, நிறுவனங்கள் தம் விநியோகச் சங்கிலிகளை ஆராய்ந்து விதிமீறல்களைக் கண்டறிய உதவுகிறது. இது, வெளிநாட்டு ஊழியர் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் நிறுவனமான ‘மைக்ரேஷியா’வுக்காக (Migrasia) உருவாக்கப்பட்டது.
“வெவ்வேறு துறைகளில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள விதிமுறைகளைத் தரவுகளாகச் சேகரித்துள்ளோம். விநியோகச் சங்கிலியுள்ள எந்தெந்த நிறுவனங்கள் அவற்றை மீறுகின்றன என்பதை செயற்கை நுண்ணறிவுமூலம் அவற்றோடு ஒப்பிட்டுக் கண்டறிகிறோம்,” என்றார் அணி உறுப்பினர் பராஸ் கலூரா, 28. ‘மைக்ரேஷியா’வின் (Migrasia) தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும் அவர் ஹாங்காங்கில் பணியாற்றுகிறார்.
“வெளிநாட்டு ஊழியர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்கள்வழி ஏதேனும் விதிமீறல்களை எங்களுடன் பகிர்ந்தால் அவற்றை ஏஐ மூலம் ஆராய்ந்து விதிமீறல்தானா என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
“இதன்வழி தைவானில் 12க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை விசாரித்து 1,500 ஊழியர்கள் S$4.9 மில்லியன் வெள்ளியைத் திரும்பப் பெறுவதற்கு உதவினோம். அவர்களில் 20 பேரின் கடப்பிதழ்களை மீட்டுத் தந்தோம்,” என்றார் பராஸ். வாய்ப்பிருந்தால் தம் ஏஐ தீர்வைச் சிங்கப்பூரிலும் சோதித்துப் பார்க்கத் தயார் என்றார் அவர்.