தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்கும் பட்டதாரி

3 mins read
a08260e2-3d10-4421-9670-fe5991fb2235
தெற்காசியச் சமூகம், கலாசாரத்திற்குப் பங்களித்த ஐஸ்வர்யாவுக்குச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின், மதிப்புமிக்க ‘சையத் அகமது கான் ஏஎம்யு’ நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  - படம்: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

முதன்முதலில் ஒரு சுற்றுப்பயணியாகச் சிங்கப்பூர் வந்திருந்தார் ஐஸ்வர்யா ஹரிஹரன் ஐயர், 21. இச்சிறிய தீவின் சுற்றுச்சூழல், எழில், பன்முகக் கலாசாரங்களின் ஒருங்கிணைப்பு போன்ற அம்சங்கள் அவரை பெரிதும் ஈர்த்தன.

அப்போதே, தமது இளநிலைப் பட்டப்படிப்பைச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்வதேன ஐஸ்வர்யா முடிவுசெய்துவிட்டார்.

“என்னைப் பற்றிய ஆழமான புரிதலுக்குச் சிங்கப்பூர்ச் சூழல் மிகவும் உதவியது,” என்றார் அவர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் கணினி அறிவியல் பயின்ற ஐஸ்வர்யா, கடந்த ஜூலை மாதம் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டம் பெற்றுப் பட்டதாரியானார்.

“கணினி அறிவியல் ஒரு கருவியைப் போன்றது. சமூகத்தில் பெரும்பங்கு வகிக்க உதவும் கருத்துகளைத் தெரிவிக்க அதனைப் பயன்படுத்தலாம். செயற்கை நுண்ணறிவின் துணையுடன் சுகாதாரம், சூழலியல், கலை போன்ற துறைகளை மேம்படுத்தலாம்,” என்றார் அவர்.

மேலும், கவிதை, இலக்கியம் போன்ற உன்னதக் கலை வடிவங்களுக்கும் கணினி அறிவியல் கைகொடுக்கும் எனக் கூறும் இந்த இளையர், “இந்த வெவ்வேறு உலகங்கள் இணைவது மிகவும் சுவையான அம்சம்,” என்கிறார்.

ஒரு துறைக்கு மட்டும் உரிய வகையில் கணினி அறிவியலைப் பயன்படுத்துவதைவிட, இளநிலைப் பட்டப்படிப்பு மூலம் தான் கற்றுக்கொண்ட திறன்களை வெவ்வேறு துறைகளில் பயன்படுத்த விரும்புவதாக ஐஸ்வர்யா சொன்னார்.

“குறிப்பாக, கல்வித்துறையில் எவ்வாறு கணினி அறிவியல் பயன்படும் என்பதைப் பற்றி அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு,” என்றார் இவர்.

அதன்வழி தனது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ‘சமகால சிங்கப்பூரில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியர்கள்’ எனும் பாடத்தை இவர் பயின்றார்.

பாடத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்குச் சென்ற அனுபவம் மிகவும் முக்கியமானது என்று ஐஸ்வர்யா குறிப்பிட்டார்.

“கோயில்கள் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்ல. மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், ஒட்டுமொத்தச் சூழல் அமைப்பு ஆகியவற்றின் சான்றுகளாக அவை விளங்குகின்றன,” என்றார் ஐஸ்வர்யா.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்குச் சென்றதன் மூலம் சிங்கப்பூர் இந்தியர்களின் அடையாளம், மொழி, மரபு ஆகியவை பிற நாடுகளைச் சேர்ந்த இந்தியர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டதாக அவர் சொன்னார்.

வகுப்பறைக்கு அப்பால் தெற்காசியச் சமூகம், கலாசாரத்திற்குப் பங்களித்த ஐஸ்வர்யாவுக்குச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க ‘சையத் அகமது கான் ஏஎம்யு’ நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அப்பரிசு தனக்கு ஊக்கமளிப்பதாகக் கூறிய ஐஸ்வர்யா, “எல்லாவற்றுக்கும் மேலாக நான் இந்த வாய்ப்புக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்,” என்றும் சொன்னார்.

“தெற்காசியச் சமூகங்களில் தொழில்நுட்பமும் கலாசாரமும் இணைவது குறித்துத் தெரிந்துகொள்வதில் ஐஸ்வர்யாவிற்கு ஆர்வமிருப்பதைக் கண்டறிந்தேன்,” என்றார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் துணை மூத்த விரிவுரையாளர் டாக்டர் முஸ்தஃபா இசுதீன்.

தெற்காசியக் கலாசாரம், சமூகம் மீதான அளப்பரிய தாகம் ஐஸ்வர்யாவைத் தனித்து நிற்கச் செய்ததால் அவரைப் பரிசுக்குப் பரிந்துரைத்ததாக டாக்டர் முஸ்தஃபா கூறினார்.

2021ஆம் ஆண்டில் ‘சையத் அகமது கான் ஏஎம்யு’ நினைவுப் பரிசு அறிமுகமானது.

தெற்காசியக் கல்வி, கலாசாரத்திற்கு வலுவாகப் பங்களித்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் இருவருக்கு ஆண்டுதோறும் இந்த நினைவுப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்