கியவ்: உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, வரைவு அமைதித் திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் பேசவிருக்கிறார். ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது அதன் நோக்கம்.
அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃபும் ரஷ்யச் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரீவும் திட்டத்தை வரைந்தனர். அதில் உக்ரேன் சம்பந்தப்படவில்லை.
அரசதந்திர முயற்சிகளுக்கு வரைவுத் திட்டம் புத்துணர்வு கொடுக்கும் என்று அமெரிக்கா நம்புவதாகத் திரு ஸெலென்ஸ்கியின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. போருக்கு நியாயமான முறையில் முடிவைக் கொண்டுவரும் திட்டத்தில் பணியாற்ற உக்ரேன் இணங்குவதாகவும் அறிக்கை தெரிவித்தது.
வரைவுத் திட்டம் கிடைக்கப்பெற்றதாகச் சொன்ன திரு ஸெலென்ஸ்கி, அமெரிக்க ராணுவச் செயலாளர் டேனியல் டிரிஸ்கோலைத் தலைநகர் கியவ்வில் சந்தித்துப் பேசினார். உக்ரேனும் அமெரிக்காவும் அமைதித் திட்டத்தின் தொடர்பில் இணைந்து பணியாற்றும் என்றார் அவர்.
“ஆக்ககரமான, நேர்மையான, முறையான பணிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று உக்ரேனிய அதிபர் தெரிவித்தார்.
ஆயினும் 28 அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படும் திட்டத்தின் விவரங்களை உக்ரேன் வெளியிடவில்லை.
இந்நிலையில் உக்ரேன், அதிக அளவு விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுவதை வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கேரலின் லீவிட் நிராகரித்தார்.
“ரஷ்யா, உக்ரேன் இரு தரப்புக்குமே அது நல்ல திட்டம். இரு தரப்பும் அதை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம். அமைதித் திட்டத்தை எட்டக் கடுமையாகப் பணியாற்றி வருகிறோம்,” என்றார் அவர். அவரும் திட்டத்தின் விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
திட்டத்திற்கு மாஸ்கோ அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அமெரிக்கத் தரப்புடன் தொடர்பில் இருப்பதாகச் சொன்ன கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஆலோசனை என்று சொல்லும் அளவுக்கு எந்த நடைமுறையும் இல்லை என்றார்.

