வியட்னாமில் மோசமடைந்துள்ள வெள்ளம்; உயிரிழப்பு அதிகரிப்பு

1 mins read
0a7b6f4f-e913-4261-be52-db1f8773e31e
வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் வியட்னாமின் கான் ஹெவா மாநிலத்தின் நா ட்ராங் நகரம். - படம்: ஏஎஃப்பி

ஹனோய்: தொடர் மழை காரணமாக மத்திய வியட்னாமில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளுக்குப் பலியானோரின் எண்ணிக்கை குறைந்தது 16க்கு அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை (நவம்பர் 20) வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் நீரின் அளவு மேலும் அதிகரித்து வருகிறது.

கடந்த மூன்று நாள்களில் மத்திய வியட்னாமின் பல்வேறு பகுதிகளில் மழை நீரின் அளவு 1,500 மில்லிமீட்டர் உயரத்தைத் தாண்டியது.

மத்திய வியட்னாம் வட்டாரம், காப்பி உற்பத்திக்கான முக்கியப் பகுதியாக விளங்குகிறது. அதோடு, அவ்வட்டாரத்தில் பிரபல கடற்கரைகளும் இருக்கின்றன.

அதேவேளை, மத்திய வியட்னாம் புயல்கள், வெள்ளம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகவும் இருக்கிறது.

வெள்ளம், நிலச்சரிவுகளின் காரணமாக குறைந்தது ஐவரைக் காணவில்லை. மேலும், 43,000க்கும் அதிகமான வீடுகள், 10,000 ஹெக்டருக்கு மேற்பட்ட பயிர்கள் ஆகியவை பெரிய அளவில் சேதமடைந்தன என்று அரசாங்கத்தின் பேரிடர் நிர்வாக அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

வெள்ளத்தால் மின்சாரக் கட்டமைப்புகள் சேதமடைந்ததால் 553,000க்கும் அதிகமான வீடுகளும் வர்த்தகங்களும் இன்னும் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்