துபாய்: துபாயில் உள்ள ஒரு சிற்றுண்டியகம், உலகின் ஆக விலையுயர்ந்த காப்பியை விற்பனை செய்து வருகிறது. மத்திய அமெரிக்காவின் தென்முனையில் உள்ள நாடான பனாமாவில் விளைவிக்கப்படும் உயர்தர காப்பிக்கொட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு குவளை காப்பியின் விலை $1,200க்குமேல்.
இவ்வளவு அதிக விலைக்கு இந்த வகை காப்பியை விற்கும் ஜூலித் கஃபேயின் இணை நிறுவனர் செர்கான் சக்சோஸ், “எங்கள் முதலீட்டுக்கு துபாய் ஒரு பொருத்தமான இடம் என நாங்கள் எண்ணினோம்,” என்றார்.
காப்பி பிரியர்களுக்குப் பெயர்போன அக்கம்பக்கப் பேட்டையில் அமைந்துள்ள ஜூலித் கஃபே, நவம்பர் 1 முதல் 400 குவளை காப்பியைப் பரிமாறத் திட்டம் கொண்டுள்ளதாகத் திரு சக்சோஸ் தெரிவித்தார்.
3,600 திர்ஹம் (S$1,275) விலையில், தேயிலையை நினைவூட்டும் மலர், பழச் சுவைகளை ருசிக்கும் வாய்ப்பை இந்தப் பானம் வழங்குகிறது.
உலகின் ஆக விலையுயர்ந்த காப்பியை விற்பனை செய்ததன் மூலம், கடந்த செப்டம்பரில் துபாய் கின்னஸ் உலகச் சாதனை படைத்திருந்தது. ‘ரோஸ்டர்ஸ்’ எனும் சிற்றுண்டியகம் ஒன்று அப்போது ஒரு குவளை காப்பியை 2,500 திர்ஹமுக்கு விற்றது.

