ஆஸ்திரேலியாவின் விதிகளை மதிப்போம்: டிக்டாக், மெட்டா

2 mins read
55927fd0-721e-408f-af7b-6aadfd3de588
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் வரும் டிசம்பர் 10ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டை மதித்து நடப்போம் என்று டிக்டாக், மெட்டா நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. மெட்டாவின்கீழ் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் ஆகியவை இயங்குகின்றன.

விதிமுறைப்படி நிறுவனங்கள் 16 வயதுக்கு உட்பட்டோரின் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருந்தால் அவற்றை நீக்க வேண்டும். இருப்பினும் இதை முழுமையாகப் பின்பற்றுவதில் சில சவால்கள் இருப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன.

ஒவ்வொரு கணக்காகப் பிரித்துப் பார்ப்பது சற்றுக் கடினமாக இருப்பினும் முடிந்த அளவு விதிமுறைகளைப் பின்பற்றுவோம் என்று சமூக ஊடக நிறுவனங்கள் கூறுகின்றன.

“16 வயதுக்கு உட்பட்டோரின் கணக்குகளை நீக்குவது எளிதான காரியம். ஆனால், பொய்யான வயதைக் கொண்டு கணக்கு தொடங்கியவர்களை அடையாளம் காணமுடியாது. இதற்குத் தகுந்த வழிமுறைகள் வேண்டும்,” என்று மெட்டா கூறியது.

புதிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறினால் சமூக ஊடக நிறுவனங்கள் 42 மில்லியன் வெள்ளி வரை அபராதம் செலுத்த நேரிடும்.

பதின்ம வயதுப் பிள்ளைகள் சமூக ஊடகத்தின் தாக்கத்தால் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதில் பல நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

தற்போது ஆஸ்திரேலியாவின் நடவடிக்கையை உலக நாடுகள் பல அணுக்கமாகக் கவனித்து வருகின்றன. விதிமுறைகள் உதவுகிறதா என்பதையும் அவை ஆராய்ந்து வருகின்றன.

சட்டம் நடைமுறைக்கு வர இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், புதிய விதிமுறைகளின் நடைமுறைச் சவால்களை ஆஸ்திரேலியா எப்படிக் கையாளப் போகிறது என்பதையும் கவனிப்பாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

இதற்கிடையே நிபுணர்கள் சிலர் சமூக ஊடகத் தடைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். இளையர்கள் பாதுகாப்பு இல்லாத சமூக ஊடகக் கட்டமைப்புகளுக்குள் செல்ல இது வழிவகுக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். இது அவசர அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் குறைகூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்