வெலிங்டன்: அரசாங்க ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளம், வளங்கள் ஆகியவற்றைக் கேட்டு நியூசிலாந்தில் நூறாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் ஆசிரியர்கள், தாதியர், மருத்துவர்கள், தீயணைப்பாளர்கள் முதலியோர் அடங்குவர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை (அக்டோபர் 23) நிகழ்ந்தது.
நியூசிலாந்தின் அரசாங்கம் மீது அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள அதிருப்திநிலை மோசமடைந்து வருவதை இது காட்டுவதாக அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தில் உள்ள பல நகரங்களில் பதாகைகளை ஏந்திக்கொண்டு அரசாங்க ஊழியர்கள் பலர் பேரணியாகச் சென்றனர்.
மோசமான வானிலை காரணமாக வெலிங்டனிலும் கிரைஸ்ட்சர்ச்சிலும் வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற பேரளவிலான வேலை நிறுத்தப் போராட்டம் நியூசிலாந்தில் நிகழ்ந்ததில்லை என்று அந்நாட்டுத் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
வாழ்க்கைச் செலவினம் குறைந்துவிட்டதாகவும் அதைக் குறைக்க வேண்டும் என்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோர் கேட்டுக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் வளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
இவற்றின் காரணமாகத் திறமைமிக்க பல ஊழியர்களை நியூசிலாந்து இழந்துவிட்டதாக அவர்கள் அதிருப்திக் குரல் எழுப்பினர்.
இதற்கிடையே, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் கூறியது.

