தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘விசிட் ஜோகூர் 2026’ இயக்கம்: ஏழு முக்கிய இடங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

1 mins read
83a84f96-74ac-4808-a50e-51dec7787c2e
பாதுகாப்புப் பணிகளில் ஏறத்தாழ 80 காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். - படம்: தி பிஸ்னஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் ‘விசிட் ஜோகூர் 2026’ இயக்கத்தை முன்னிட்டு ஏழு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாக ஜோகூர் காவல்துறைத் தலைவரான ஆணையர் எம். குமார் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநிலம் பாதுகாப்பான இடம் என்பதை சுற்றுப்பயணிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் தெரிவிக்க காவல்துறை இலக்கு கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பொதுமக்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபவர் என்று புதன்கிழமையன்று (ஜூன் 18) ஆணையர் குமார் தெரிவித்தார்.

சுல்தான் இஸ்கந்தர் சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் நிலையம், பசார் கராட், கேஎஸ்எல் சிட்டி மால் கடைத்தொகுதி, அங்சானா மால் கடைத்தொகுதி, பெர்ஜாயா வாட்டர்ஃபிரண்ட், மிட்வேலி சவுத்கீ, பிளாசா செந்தோசா ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டம் ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று தொடங்கியது. பாதுகாப்புப் பணிகளில் ஏறத்தாழ 80 காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடுவதுடன் அங்கு கடைகள் வைத்திருப்பவர்களைச் சந்தித்துப் பேசுவர்.

உதவி தேவைப்பட்டால் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை நாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திட்டம் தொடங்கியதிலிருந்து அவ்விடங்களில் குற்றச் செயல்கள் நிகழவில்லை என்று ஆணையர் குமார் தெரிவித்தார்.

கூட்டரசுத் தயார்நிலைப் பிரிவு, கடல்துறைப் பிரிவுகள் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்டு ஜோகூரின் பத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த இலக்கு கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்