ஹனோய்: வியட்னாமில் தனது மொத்தக் குடும்பத்தையும் கொலை செய்த ஆடவருக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8), அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
52 வயதாகும் வு வான் வுயோங், வறுமையின் கொடுமையிலிருந்து விடுவிப்பதற்காகத் தனது குடும்ப உறுப்பினர்கள் நால்வரையும் கொன்றதாக நீதிமன்றத்தில் கூறினார்.
இந்த ஆண்டுத் (2025) தொடக்கத்தில் அவர் தனது மகள், மகன், மனைவி, வயதான தாயார் நால்வரையும் கொடூரமான முறையில் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இரு நாள்களில் அவர்களை அவர் கொலை செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஹனோயில் வுயோங்கின் குடும்பத்திற்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. ஜனவரி 15ஆம் தேதி, தனது 19 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொன்ற வுயோங், மகளின் சடலத்தைப் படுக்கைக்கு அடியில் ஒளித்து வைத்தார். அதேநாளின் பிற்பகலில் 17 வயது மகனையும் அவ்வாறே கொன்றார்.
வேலை முடிந்து வீடு திரும்பிய மனைவியை அன்று இரவு 11 மணியளவில் கொலை செய்து அவரது சடலத்தையும் மறைத்து வைத்தார்.
பின்னர், மறுநாள் காலை, படுத்த படுக்கையாயிருந்த தன் 79 வயதுத் தாயாரையும் கழுத்தை நெரித்துக் கொன்றார் வுயோங்.
நால்வரையும் கொலை செய்த பிறகு, கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். ஆனால் அவர் உயிர் பிழைத்துவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து ஹனோயிலிருந்து டானாங்கிற்குப் பேருந்தில் தப்பிச் சென்றார். பிறகு வுங் டாவ் நகருக்குச் சென்று மாண்டோருக்குச் சமயச் சடங்கு செய்துகொண்டிருந்த அவரை, ஜனவரி 18ஆம் தேதி, காவல்துறை கைது செய்தது.

