அமெரிக்கத் தீர்வையால் வியட்னாம் $25 பில்லியன் இழக்கக்கூடும்

1 mins read
e4ecf47b-88c8-4d87-9f98-e1c8372b33e5
விய்டனாமின் ஹய்ஃபோங் துறைமுகத்தில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சரக்குக் கப்பலொன்றில் கொள்கலன் ஏற்றப்பட்ட காட்சி. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்.

ஹனோய்: அமெரிக்கத் தீர்வையால் வியட்னாம் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாட்டு வளர்ச்சித் திட்டத்தின் மதிப்பீடுகள் காட்டுகின்றன.

அமெரிக்காவுக்கு வியட்னாம் ஏற்றுமதி செய்யும் பொருள்கள் கிட்டத்தட்ட 20 விழுக்காடு வரை குறையும் ஆபத்து இருப்பதாக அவை குறிப்பிட்டன.

அமெரிக்காவுக்குச் சென்ற ஆண்டு (2024) அதிக அளவில் ஏற்றுமதி செய்த நாடுகளில் வியட்னாமுக்கு ஆறாமிடம். அது அனுப்பிய பொருள்களின் மதிப்பு $136.5 பில்லியன் என்று அமெரிக்க வர்த்தகத் தரவுகள் காட்டுகின்றன. அவற்றின் பெரும்பாலான பொருள்கள் அமெரிக்க, பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.

ஆகஸ்ட் மாதம், வியட்னாமியப் பொருள்களுக்கு அமெரிக்கா 20 விழுக்காட்டு வரிகளை விதித்தது.

காலப்போக்கில் அந்நாடு அமெரிக்காவுக்கு அனுப்பும் பொருள்கள் குறையும் என்றும் அதனால் ஏற்படக்கூடிய இழப்பு 25 பில்லியன் டாலருக்கு அதிகமாய் இருக்கும் என்றும் வளர்ச்சித் திட்டத்தின் ஆசிய-பசிபிக் வட்டாரத்திற்கான தலைமைப் பொருளியல் வல்லுநர் ஃபிலிப் ‌ஸ்கெல்லகென்ஸ் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.

“அமெரிக்கத் தீர்வைகளால் தென்கிழக்காசியாவில் வியட்னாம் அளவுக்கு மற்ற நாடுகள் பாதிக்கப்படமாட்டா,” என்றார் அவர். கிழக்காசியாவில் சீனா கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அவர் திரு ஸ்கெல்லகென்ஸ் கூறினார்.

வியட்னாமின் நிதி, தொழில்துறை அமைச்சுகள் அதுகுறித்து உடனடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்