தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வர்த்தகப் பூசலை அமெரிக்கா மோசமாக்குகிறது: சீனா

2 mins read
de055ae4-3c30-4b1c-a7a0-38d82f79ad9b
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (இடது), சீன அதிபர் ஸி ஜின்பிங். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது மேலும் வரி விதித்திருப்பதை சீனா கண்டித்துப் பேசியுள்ளது.

தவறுக்குப் பதிலடி கொடுப்பதாகச் சொல்லும் திரு டிரம்ப் தாமே அந்தத் தவறை செய்பவர் என்று சீனா ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) சாடியது. அதோடு, தாங்கள் ஏற்றுமதி செய்யும் அரியவகை இயற்கை வளங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்ததைத் தற்காத்துப் பேசியது.

தங்களுக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்ற போக்கை அமெரிக்கா பின்பற்றுவதாகவும் சீனா சாடியதாக செய்திகள் வெளியாயின. எனினும், அமெரிக்க பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி விதிக்கவில்லை.

சீனாவின் ஆக அண்மைய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலடியாக திரு டிரம்ப், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) அந்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 100 விழுக்காடு வரி விதித்தார். மேலும், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் முக்கிய மென்பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு திரு டிரம்ப் கட்டுப்பாடு விதித்தார்.

அமெரிக்கா-சீனா வர்த்தகப் பூசல் மறுபடியும் மோசமடைந்திருப்பது அமெரிக்கப் பங்குச் சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. சீனாவில் தயாராகும் அரியவகை நில வளங்களை நம்பியிருக்கும் நிறுவனங்கள் பெரும் கவலைக்கு உள்ளாயின.

அதோடு, இம்மாதம் திரு டிரம்ப்புக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கும் இடையே நடக்கவிருந்த சந்திப்பு தடைபடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

திரு டிரம்ப்பின் இந்த நடவடிக்கை ஆச்சரியம் தருவதாக சீன வர்த்தக அமைச்சு நீளமான அறிக்கை முலம் கூறியது. கடந்த செப்டம்பர் மாதம் ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்த பிறகு அமெரிக்காவின் சில நடவடிக்கைகளுக்குப் பிறகு சீனா அரியவகை நிலவள ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்ததாகக் குறிப்பிடப்பட்டது.

தவறான நடத்தையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கான கறுப்புப் பட்டியலில் (blacklist) பல சீன நிறுவனங்கள் சேர்க்கப்பட்டது, சீனாவுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது வா‌ஷிங்டன் துறைமுகக் கட்டணம் விதித்தது போன்றவற்றை பெய்ஜிங் சுட்டியது.

குறிப்புச் சொற்கள்