தங்கள் கடற்கரைக்கு அருகே அமெரிக்கப் போர் விமானங்கள்: வெனிசுவேலா

1 mins read
9e443dc5-a2e0-4375-b4e8-1b4e8aa77ea9
வெனிசுவேலா. - படம்: againstthecompass.com / இணையம்

கராக்கஸ்: தங்கள் நாட்டின் கடற்கரைப் பகுதிக்கு அருகே வியாழக்கிழமை (அக்டோபர் 2) ஐந்து அமெரிக்கப் போர் விமானங்கள் காணப்பட்டதாக வெனிசுவேலா தற்காப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினா லோப்பெஸ் கூறியுள்ளார்.

அச்செயல், அமெரிக்கா விடுக்கும் மிரட்டலாக அவர் வகைப்படுத்தியுள்ளார்.

“பிறரை ஆளவேண்டும் என்ற நோக்கம் கொண்ட தரப்புகளின் போர் விமானங்களுக்கு வெனிசுவேலிய கடற்கரைப் பகுதிக்கு இவ்வளவு அருகில் வரத் துணிச்சல் இருந்திருக்கிறது,” என்று அவர் ஆகாயப் படைத் தளம் ஒன்றில் இருந்தபோது கூறினார். அவரின் கருத்துகள் வெனிசுவேலா அரசாங்கம் நடத்தும் ஒளிவழியில் ஒளிபரப்பப்பட்டன.

அந்தப் போர் விமானங்களைப் பற்றி விமான நிறுவனம் ஒன்று கட்டுப்பாட்டுத் தளத்துக்குத் (control tower) தெரியப்படுத்தியதாக அவர் சொன்னார்.

இதுகுறித்து அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிவரும் வா‌ஷிங்டன், அதற்கென கரிபியக் கடலில் பல போர்க் கப்பல்களைச் செயல்படுத்தியுள்ளது. வெனிசுவேலாவிலிருந்து போதைப்பொருள் ஏந்திவந்ததாக அமெரிக்கா கூறியிருக்கிறது; அப்படகுகளைத் தாங்கள் தாக்கியதாகவும் அமெரிக்க தெரிவித்துள்ளது.

அந்தத் தாக்குதல்களில் படகுகளில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர்.

வெனிசுவேலாவில் ஆட்சி மாறவேண்டும் என்பது அமெரிக்காவின் எண்ணம் என்றுள்ளார் வெனிசுவேலிய அதிபர் நிக்லாஸ் மடூரோ. அதேவேளை, அமெரிக்கப் பிரதிநிதியான ரிச்சர்ட் கிரெனெலுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்