வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் முதல்முறை பதவி ஏற்றபோது அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக உடன்பாட்டின் நிபந்தனைகளின்படி சீனா நடந்துகொண்டதா என்பதைக் கண்டறிய அமெரிக்க அரசாங்கம் விசாரணை நடத்துகிறது.
இதையடுத்து, உலகத்தின் ஆகப் பெரிய பொருளியல்களைக் கொண்ட அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றநிலை மோசமடைந்துள்ளது.
விசாரணையின் விளைவாக சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அடுத்த வாரம் தென்கொரியாவில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டில் அதிபர் டிரம்ப் கலந்துகொள்கிறார்.
அப்போது சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அவர் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாகச் சீன அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் மலேசியாவில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்தச் சந்திப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்கா புதிதாகத் தொடங்கியுள்ள விசாரணை நிலைமையை மோசமாக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீன அதிபர் ஸி ஜின்பிங்கைத் தென்கொரியாவில் சந்திக்கும்போது ஹாங்காங் ஊடகப் பேராளர் ஜிம்மி லாயை விடுவிக்கும்படி கேட்டுக்கொள்ள இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திரு லாயின் விடுதலை குறித்து அதிபர் ஸியிடம் அதிபர் டிரம்ப் பேச வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேட்டுக்கொண்டனர்.
புளோரிடாவைச் சேர்ந்த செனட்டரான திரு ரிக் ஸ்காட்டின் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுதொடர்பான கடிதத்தில் கையெழுத்திட்டனர்.
77 வயது திரு லாயின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் நாட்டவரான திரு லாய், 2020ஆம் ஆண்டிலிருந்து சீனாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஹாங்காங் மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா உட்பட வெளிநாடுகள் தடைகள் விதிக்க வேண்டும் என்று திரு லாய் தூண்டிவிட்டதாகச் சீனாவின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டைத் திரு லாய் மறுத்துள்ளார்.

