வாஷிங்டன்: ரஷ்யாவின் எரிசக்திக் கட்டமைப்பின் மீது தொலை தூரத்திலிருந்து தாக்குதல் நடத்த உக்ரேனுக்கு அமெரிக்கா உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் பொருளியலை வலுவிழக்கச் செய்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்வது நோக்கம் என்று ஃபைனான்ஷியல் டைம்ஸ் ஊடகம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) தெரிவித்தது. அமெரிக்க உளவுத் தகவல்கள், போர்க் களத்துக்குத் தொலைவில் உள்ள ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி நிலையங்களைத் தாக்க கியவ்வுக்கு உதவியிருப்பதாக தகவல் தெரிந்த உக்ரேனிய, அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்கப்பட்ட இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் அடங்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை, உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் அலுவலகம், உக்ரேனிய வெளியுறவு அமைச்சு மூன்றும் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. ரஷ்ய வெளியுறவு அமைச்சும் உடனடியாகக் கருத்து வெளியிடவில்லை.
உக்ரேன் போரில் வாஷிங்டனும் நேட்டோ கூட்டமைப்பும் கியவ்வுக்கு உளவுத் தகவல்களை வழங்கி உதவி வருவதாக மாஸ்கோ முன்னதாக இம்மாதம் குற்றஞ்சாட்டியது. திட்டமிடும் பணிகளின் எல்லாக் கட்டங்களிலும் அமெரிக்கா பெரிய அளவில் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிந்த மூவரை மேற்கோள்காட்டி மாஸ்கோ சுட்டியது.
ரஷ்யத் தற்காப்புப் படைகளை மீறி தொலைதூரத் தாக்குதல்களை நடத்த அமெரிக்க உளவுத் தகவல்கள் உக்ரேனுக்கு உதவியாய் இருப்பதாக ஃபைனேன்ஷியல் டைம்ஸ் தெரிவித்தது.

