பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தங்களின்கீழ் பாகிஸ்தானிய ராணுவத் தலைவருக்குக் கூடுதல் அதிகாரம்

1 mins read
7d10400e-8d58-4013-8b3b-4b4993832a0f
பாகிஸ்தானிய ராணுவத் தலைவர் ஆசிம் முனிர் (இடமிருந்து இரண்டாவது). - படம்: ஏஎஃப்பி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் அமல்படுத்தியுள்ள அரசியலமைப்புச் சட்ட மாற்றத்தின்கீழ் அந்நாட்டு ராணுவத் தலைவருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.

அதற்கு மாறாக, பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படும்.

இந்த அணுகுமுறை ஜனநாயகத்தைச் சீர்குலைத்துவிடும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் குறைகூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றும் புதிதல்ல.

பாகிஸ்தானிய வரலாற்றில் இப்போதைய அரசாங்கம், இதற்கு முன்னாள் இருந்த அரசாங்கங்களைக் காட்டிலும் கூடுதல் காலமாக ஆட்சியில் இருந்து வருகிறது.

இருப்பினும், ஆட்சி அதிகாரத்தில் மக்களுக்குக் கூடுதல் அதிகாரம், உரிமை இருக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வரும் நிலையில், ஆட்சியை நேரடியாகக் கைப்பற்றாமல் மறைமுகமாக அதிகாரத்தை வலுப்படுத்தி வருகிறது பாகிஸ்தானிய ராணுவம்.

இந்நிலையில், திங்கட்கிழமையன்று (நவம்பர் 10) ராணுவத் தலைவருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பான மசோதா வழக்கத்துக்கு மாறாக, மிக விரைவாக, ஏறத்தாழ மூன்று மணி நேரத்திலேயே நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஆசிம் முனிரைத் தனக்கு மிகவும் பிடித்தமான ‘ஃபீல்டு மார்ஷல்’ என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிம் முனிர் பாகிஸ்தானின் முப்படைகளுக்கும் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, அவரது பதவியை அவர் தக்கவைத்துக்கொள்வதுடன் வாழ்நாள் முழுவதும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கப்படும் அந்தஸ்தைப் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்