நியூயார்க்: ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம், காஸாவில் அனைத்துலகப் படையினரைப் பணியமர்த்துவது குறித்த தீர்மானத்தின் மீது வாக்களிக்கவிருக்கிறது. அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை (நவம்பர் 17) மாலை 5 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி காலை 6 மணி) வாக்களிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா வரைந்த தீர்மானம், அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் காஸா அமைதித் திட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது நடவடிக்கை எடுக்கத் தவறினால் காஸா வட்டாரத்தில் மீண்டும் சண்டை மூளக்கூடும் என்று வாஷிங்டன் எச்சரிக்கிறது.
வரைவுத் தீர்மானத்தில் பல முறை திருத்தங்கள் செய்யப்பட்டன. அது காஸா அமைதித் திட்டத்தை அங்கீகரிக்கிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையில் கடந்த மாதம் (அக்டோபர் 2025) 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்படுவதற்கு அமைதித் திட்டம் வழிவிட்டது.
ஹமாஸ், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையில் கடும் போர் மூண்டது. காஸா வட்டாரம், ஈராண்டுப் போருக்குப் பிறகு இப்போது இடிபாடுகள் நிறைந்த இடமாக மாறிவிட்டது.
வரைவுத் தீர்மானத்தின் ஆக அண்மைய பதிப்பின்படி, அனைத்துலக நிலைத்தன்மைப் படையை உருவாக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், எகிப்து, புதிதாகப் பயிற்சி பெற்றுள்ள பாலஸ்தீனக் காவற்படை ஆகியவற்றுடன் அது சேர்ந்து பணியாற்றும். எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்கவும் காஸாவை ராணுவ நடவடிக்கைகளற்ற வட்டாரமாக மாற்றவும் உதவுவதில் அவை கூட்டாகச் செயல்படும்.
அரசாங்கம் சாரா ஆயுதமேந்திய குழுக்களிடமிருந்து நிரந்தரமாக ஆயுதங்களைப் பெறுவதற்கும் அனைத்துலகப் படை முயற்சி மேற்கொள்ளும். பொதுமக்களையும் மனிதநேய உதவிகள் செல்வதற்கான பாதைகளையும் பாதுகாப்பதில் அது கவனம் செலுத்தும்.
காஸாவில் இடைக்கால நிர்வாக அமைப்பாக அமைதிக் கழகமொன்று உருவாக்கப்படுவதற்கும் அது அங்கீகாரம் வழங்கும். புதிய கழகத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமை தாங்குவார் என்று நம்பப்படுகிறது.
முந்திய வரைவுகளைப் போல் அல்லாமல், அண்மைய பதிப்பில் பாலஸ்தீன நாடு எதிர்காலத்தில் உருவாவதற்கான சாத்தியம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், அதனை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

