அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட ஐநா பாதுகாப்பு மன்றம்

2 mins read
3e7d5356-2c7d-49a4-a458-3416a1ab8a44
காஸாவை மறுசீரமைக்கவும் அதன் பொருளியல் மீட்சிக்கு வழிவகுக்கவும் ஐநா உறுப்பிய நாடுகள் படைகளை அனுப்பிவைக்கலாம் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, அங்குள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் அனைத்துலகப் பாதுகாப்புப் படையை நிறுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பரிந்துரையை ஐநா பாதுகாப்பு மன்றம் திங்கட்கிழமை (நவம்பர் 17) நடைபெற்ற வாக்களிப்பு மூலம் ஏற்றுக்கொண்டது.

அதிபர் டிரம்ப் முன்வைத்த பரிந்துரைகளின் முதல் கட்டத்துக்கு இஸ்‌ரேலும் ஹமாஸ் அமைப்பும் கடந்த மாதம் இணக்கம் தெரிவித்தன.

போர் நிறுத்தத்துக்கும் பிணைக்கைதி விடுவிப்பு ஒப்பந்தத்துக்கும் அவை உடன்பட்டன.

இருப்பினும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் பாதுகாப்புப் பணிகளுக்கான காஸாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்புவது குறித்து பரிசீலனை செய்து வரும் நாடுகளுக்கு உறுதி அளிக்கவும் ஐநா தீர்மானம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

காஸாவை மறுசீரமைக்கவும் அதன் பொருளியல் மீட்சிக்கு வழிவகுக்கவும் ஐநா உறுப்பிய நாடுகள் படைகளை அனுப்பிவைக்கலாம் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவை ஆயுதங்கள் இல்லாத இடமாக்கும் பணிகளில் இப்படைகள் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ராணுவ உள்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆயுதங்களைக் கைவிடப்போவதில்லை என்றும் இஸ்‌ரேலுக்கு எதிரான தமது போராட்டம் நியாயமானது என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இதனால், காஸாவில் நிறுத்தப்பட இருக்கும் அனைத்துலகப் படைகளுக்கும் ஹமாஸ் போராளி அமைப்புக்கும் இடையே மோதல் வெடிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

“காஸாவை அனைத்துலகப் பராமரிப்பின்கீழ் இத்தீர்மானம் கொண்டு வருகிறது. இதை நாங்களும் எங்கள் தரப்பினரும் ஏற்க மறுக்கிறோம்,” என்று ஹமாஸ் தெரிவித்தது.

ஆனால், ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ், வாக்களிப்புக்கு முன்பு மாற்று கருத்து தெரிவித்தார்.

காஸா மீது ஹமாஸ் கொண்டிருக்கும் பிடியை இத்தீர்மானம் தகர்க்கும் என்றார் அவர்.

அதன்மூலம் காஸா பாதுகாப்பான, செழிப்பான இடமாக உருமாறும் என்று அவர் கூறினார்.

தீர்மானத்தை பாலஸ்தீன ஆணையம் வரவேற்றுள்ளது. வாக்களிப்பில் ரஷ்யாவும் சீனாவும் பங்கேற்கவில்லை.

குறிப்புச் சொற்கள்