2024ல் 383 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்: ஐநா கவலை

2 mins read
552c5d55-2633-4e3c-b267-2a1b60548019
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் -காஸாவில் உலக மத்திய சமையலறை ஊழியர்கள் கொல்லப்பட்ட இடத்தை மக்கள் ஆய்வு செய்கின்றனர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனீவா: கடந்த 2024ஆம் ஆண்டில் மிக அதிக அளவில் 383 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் சபை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) தெரிவித்துள்ளது.

“அறவே பொறுப்பேற்பின்றி, இந்த அளவில் நடத்தப்படும் தாக்குதல்கள், அனைத்துலக செயலற்ற தன்மை, அக்கறையின்மையின் வெட்கக்கேடான செயல்,” என்று ஐநாவின் உதவித்தலைவர் டாம் பிளெட்சர் கூறினார்.

2024ன் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 31 விழுக்காடு அதிகம் என்று, உலக மனிதநேய நாளில் ஐநா கூறியது.

காஸாவில் தொடரும் இடைவிடாத மோதல்களால் அங்கு 181 மனிதநேயப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர், சூடானில் 60 பேர் உயிரிழந்தனர். 2024ல் நடந்த கொலைகளுக்குப் பொதுவாக நாடுகளின் தலைவர்களே காரணம் என்றது ஐநா.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உள்ளூர் ஊழியர்கள். அவர்கள் பணி இடத்தில் அல்லது வீடுகளில் தாக்கப்பட்டனர். மேலும், 308 உதவிப் பணியாளர்கள் காயமுற்றனர்; 125 பேர் கடத்தப்பட்டனர்; 45 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

“மனிதநேய ஊழியர்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலானாலும் அது நம் அனைவர் மீதும், நாம் சேவை செய்யும் மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும்,” என்றார் திரு டாம் ஃபிளெட்சர்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டு 265 உதவி ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உதவி ஊழியர் பாதுகாப்பு தகவல் தளத்தின் முதல்கட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

உதவிப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் அனைத்துலக மனிதநேயச் சட்டத்தை மீறுவதாகவும், போர் மற்றும் பேரிடர் பகுதிகளில் சிக்கியுள்ள மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களை காக்கும் வழிமுறைகளை அழிப்பதாகும் என்று ஐநா கண்டனம் தெரிவித்தது.

இந்த ஆண்டு இதுவரை 16 பகுதிகளில் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவுகள் மீது 800 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை உறுதிப்படுத்தியதாக ஐநாவின் உலக சுகாதார நிறுவனம் கூறியது. அதில் 1,110 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களும் நோயாளிகளும் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

2003ஆம் ஆண்டு பாக்தாத்தில் உள்ள ஐநா தலைமையகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஐநா மனித உரிமைகள் தலைவர் செர்ஜியோ வியிரா டி மெல்லோ உட்பட 22 பேர் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக மனிதநேய நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.