உக்ரேன் அமைதித் திட்டம் ரஷ்யாவுக்குச் சாதகமானது அல்ல: அமெரிக்கா விளக்கம்

2 mins read
cae22ddf-86d1-4ae5-9923-f2cd64ee4711
ரஷ்யா, உக்ரேன் ஆகிய இருதரப்புகளின் யோசனைகளையும் திட்டம் உள்ளடக்கி இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ கூறியுள்ளார். - படம்: இபிஏ

வாஷிங்டன்: உக்ரேன் அமைதித் திட்டம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் அதிகாரபூர்வக் கொள்கைதான் என்றும் ரஷ்யாவுக்குச் சாதகமானது அல்ல என்றும் அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏற்படுத்தி உள்ள 28 அம்ச அமைதித் திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த விமர்சனங்களைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை அந்த விளக்கத்தை அளித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான குடியரசுக் கட்சியின் மைக் ரவுண்ட்ஸ், ஜனநாயகக் கட்சியின் ஷாஹீன் சுயேச்சை உறுப்பினர் அங்குஸ் கிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

உத்தேசிக்கப்பட்டுள்ள உக்ரேன் போர்நிறுத்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளவை ரஷ்யாவின் விருப்பங்களே என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தங்களிடம் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

அமைதித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற இருந்த வேளையில் இந்தப் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

திட்டத்தின் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களுமே மாஸ்கோவுக்குச் சாதகமாக இருப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய திரு ரவுண்ட்ஸ், “இது அமெரிக்காவின் யோசனை அல்ல என்று அவர் (ரூபியோ) எங்களிடம் கூறினார். யாரோ ஒருவருக்கு ரஷ்யாவைப் பிரதிநிதித்துத் தெரிவித்த யோசனையே அது. திரு விட்கோவ்விடம் அந்த யோசனை தரப்பட்டது,” என்றார்.

விட்கோ என அவர் குறிப்பிட்டது திரு டிரம்ப்பின் அரசதந்திரத் தூதர் ஸ்டீவ் விட்கோவ் என்பவரைத்தான் என ஏஎஃப்பி கூறியது.

“இது எங்கள் பரிந்துரை அல்ல. இது எங்கள் அமைதித் திட்டம் அல்ல,” என்றும் செய்தியாளர்களிடம் திரு ரவுண்ட்ஸ் கூறினார்.

மற்றொருவரான அங்குஸ் கிங் கூறும்போது, அமைதித் திட்டம் ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பரிசளிப்பதுபோல இருக்கக்கூடாது என்றார்.

ஆனால், அவரின் கூற்றை திரு ரூபியோ மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“அமைதிக்கான யோசனை அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கக்கூடியது அது. ரஷ்யத் தரப்பிலும் உக்ரேன் தரப்பிலும் முன்வைக்கப்பட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட அமைதி யோசனை அது,” என்று திரு ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் டோமி பிகோட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை மறுத்துள்ளார்.

“அவர்கள் கூறியிருப்பது அப்பட்டமான பொய்,” என்று திரு பிகோட் கூறினார்.

குறிப்புச் சொற்கள்