காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் 12 மணி நேரத்திற்குள் இரண்டு சக்திவாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு நிலையம் (ஜிஎஃப்இசட்) தெரிவித்துள்ளது.
முன்னதாக அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நில நடுக்கத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை 2,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 3,600 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி மேலும் நில அதிர்வுகள் ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் ஏற்கெனவே போரால் சீரழிந்துள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் இயற்கைப் பேரிடர் தாக்கியுள்ளது.
நங்கர்ஹார் மாகாணத்தில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் சேத விவரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் ராய்ட்டர்சிடம் ஒருவர் தெரிவித்தார். செப்டம்பர் 5 ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியது. தென்கிழக்கில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியதாக ஜெர்மனி ஆய்வகம் தெரிவித்தது. அதே நாளில் சில மணி நேரங்களுக்கு முன்பு மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இவ்வாரத்தின் 6.00 ரிக்டர் அளவுள்ள முதல் நிலநடுக்கம் ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் நிகழ்ந்தது. ஆப்கானிஸ்தான் வரலாற்றில் மிக மோசமான அந்தப் பேரிடரால் நங்கார்ஹர், குனார் மாகாணங்கள் அடையாளம் தெரியாத அளவுக்குச் சேதமடைந்தன.
செப்டம்பர் 2 ஆம் தேதி ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. மலைகளில் இருந்து பாறைகள் சரிந்ததால் தொலைதூரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான வீடுகள் கற்களாலும் மரங்களாலும் கட்டப்பட்டுள்ளன. இதனால் சில குடும்பங்கள் வீடுகளில் தங்குவதற்கு அஞ்சி திறந்தவெளியில் தங்கியுள்ளன.

