தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்பின் செலவின, வரிக் குறைப்பு மசோதா சட்டமாகிறது

2 mins read
f8e7f1b4-f676-4b71-b25e-63fb4971182f
அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் மைக் ஜான்சன் அதிபர் டிரம்ப்பின் செலவின, வரிக் குறைப்பு மசோதாவை சபை ஏற்றுக்கொண்டதாக வியாழக்கிழமை (ஜூலை 3) அறிவிக்கிறார். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிக் குறைப்பு மசோதா ஒரு வழியாக நாட்டின் பிரதிநிதிகள் சபை வாக்கெடுப்பில் வியாழக்கிழமை (ஜூலை 3) வெற்றி பெற்றுள்ளது.

இனி இந்த மசோதாவை அதிபர் சட்டமாக கையெழுத்திடுவதற்கு அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

மசோதாவுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் அதை எதிர்த்து 214 வாக்குகளும் பதிவாகின. இந்த மசோதாவின் மூலம் அதிபர் குடிநுழைவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள், தனது 2024ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது உறுதியளித்த நிரந்தர வரிக் குறைப்பு ஆகியவற்றுடன் புதிய வரிக் குறைப்புகளும் நடைமுறைக்கு வரும்.

அத்துடன், சுகாதார, உணவுப் பாதுகாப்பு திட்டங்கள் போன்றவை குறைக்கப்படுவதுடன் பல பசுமை எரிசக்தித் திட்டங்களுக்கு மூடுவிழா ஏற்படும்.

மேலும், கட்சி சாரா நாடாளுமன்ற வரவு, செலவு அலுவலக கூற்றுப்படி நாட்டில் ஏற்கெனவே இருக்கும் அமெரிக்க டாலர் 36.2 டிரில்லியன் கடனுடன் கூடுதலாக 3.4 டிரில்லியன் ($4.3 டிரில்லியன்) கடன் சுமையை ஏற்றிவைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த மசோதா 869 பக்கங்களைக் கொண்டுள்ளது. மசோதாவின் மொத்த நிதி அளவு ஒரு பக்கம், பல சுகாதாரத் திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளபோதிலும் குடியரசுக் கட்சியினர் பெரும்பாலும் தங்கள் கட்சியைச் சார்ந்த அதிபருக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 220 பேரில் இருவர் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். மசோதா ஏற்கெனவே செனட் சபை ஒப்புதல் பெற்றுவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

பல அடுக்கு வருமான வகுப்பினர் செலுத்தும் வரி குறைக்கப்படும் என்றும் இந்த மசோதா பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் குடியரசுக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றிக் கருத்துரைத்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வட கேரோலைனா மாநிலத்தின் வெர்ஜினியா ஃபோக்ஸ், “மசோதா வேலை பார்க்கும் குடும்பங்களுக்கு வரிக் குறைப்பு கிடைக்கும். அத்துடன், நாட்டின் எல்லையைக் காக்க அபரிமிதமான முதலீடாகவும், அரசாங்கத் திட்டங்களில் இருக்கும் தேவையற்ற செலவினம், மோசடி ஆகியவற்றை தவிர்த்து அவை கச்சிதமாக செயல்பட வழி வகுக்கும்” என்று கூறினார்.

மசோதாவை சபையில் உள்ள அனைத்து ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் பார்வையில், இந்த மசோதா செல்வந்தர்களுக்கு பணமுடிப்பு அளிப்பதுபோலவும் அதே நேரம் மில்லியன் கணக்கானோரை காப்புறுதி இன்றி தவிக்கவிடும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்