நியூயார்க்: கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 12ல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் நடத்திய இரவு உணவு விருந்திற்கு கத்தார்ப் பிரதமர் வருகை அளித்தார்.
கத்தார் தலைநகர் டோஹாவில் செப்டம்பர் 9ல் ஹமாஸ் அரசியல் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல், காஸாவில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய கிழக்கிலும் அதற்கு வெளியிலும் பதற்றத்தை மேலும் இந்தத் தாக்குதல் அதிகரிக்கக்கூடிய செயல் என்று பரவலாகக் கண்டிக்கப்பட்டது.
.இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் திரு. டிரம்ப் தொலைபேசியில் பேசியபோது, தாக்குதல் குறித்து அவர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நிகழாது என்று அமெரிக்காவின் நட்பு நாடான கத்தாருக்கு திரு டிரம்ப உறுதியளிக்க முற்பட்டார்.
கத்தார் பிரதமர் ஷேக் முகமது அப்துல்ரஹ்மான் அல்-தானியுடன் விருந்தில் திரு டிரம்ப்பும் அவரது உயர்நிலை ஆலோசகரான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பும் கலந்து கொண்டனர்.
“அமெரிக்க அதிபருடன் உடன் சிறந்த இரவு உணவு. இப்போதுதான் முடிந்தது,” என்று கத்தாரின் துணைத் தூதரகத் தலைவர் ஹமா அல்-முஃப்தா, எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இரவு உணவு நடந்தது என்று வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளபோது அதுகுறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. டோஹாவில் ஹமாஸ் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த வட்டாரத்தில் கத்தாரின் எதிர்கால பங்கு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இஸ்ரேலின் தாக்குதலால் வருத்தமடைந்ததாகக் கூறிய திரு டிரம்ப், இந்தத் தாக்குதல் தங்கள் நலன்களை மேம்படுத்தாத ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும் வர்ணித்தார்.

