நியூயார்க்: இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருள்களின் இறக்குமதி வரி ஒரு கட்டத்தில் குறைக்கப்படும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தக உடன்பாட்டை விரைவில் எட்டக்கூடிய நிலையில் உள்ளதாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
“இப்போது வேண்டுமானால் இந்தியாவுக்கு எங்கள்மீது அன்பு இல்லாமல் போகலாம். ஆனால், இந்தியா அமெரிக்காவை மீண்டும் நேசிக்கும். இரு தரப்பும் சரியான இடத்தில் உள்ளன,” என்று அவர் கூறினார்.
தற்போது திரு டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட அடிப்படை வரிவிதிப்பைக் குறைப்பது குறித்துப் பேசியுள்ளதால் விரைவில் இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட விரிசல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகள் பல அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பாக உடன்பாட்டை எட்டிவருகின்றன. இருதரப்புக்கும் லாபம் கொடுக்கும் வகையில் இது அமைகிறது என்றும் அதிபர் டிரம்ப் சொன்னார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்கா இந்தியப் பொருள்களுக்கு 50 விழுக்காடுவரை இறக்குமதி வரிகளை விதித்தது.
அதன்பின்னர் அதிபர் டிரம்ப்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பேசினர். இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொள்வதாக உறுதி அளித்துள்ளதையடுத்து அமெரிக்காவுடனான நட்பு மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகத் திரு செர்ஜியோ கோர் அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார். அப்போது நடந்த விழாவில் இந்தியாவுடனான உறவு குறித்து டிரம்ப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
திரு கோர், பிரதமர் மோடியுடன் நல்ல நட்பைக் கொண்டுள்ளார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
“திரு கோர் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவார். தொழில்நுட்பம் உள்ளிட்ட பலதுறைகளில் முதலீடுகளை ஈர்க்க அவர் உதவுவார்,” என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

